For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நமக்குள் இருக்கும் அணிகளை ஒழித்தால்தான் ஜெ. வெற்றியைத் தடுக்க முடியும்-கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: நமக்குள் இருக்கும் அணிகளை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் நம்மை வீழ்த்த நினைக்கும் ஜெயலலிதாவின் நினைப்பு தோல்வி அடையும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

திமுக சட்டசபை உறுப்பினர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

நாம் இப்போது கூடியிருக்கின்ற இந்த நேரம் - வெகு விரைவில் - இன்னும் இரண்டு, மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலைமை இருப்பதை உணர்த்துகின்ற நேரமாகும். அதற்கான ஆயத்தங்கள்; பிரச்சாரங்கள்; ஒவ்வொரு பத்திரிகையிலும் அவற்றிற்குரிய iகங்கள் வெளியிடப்பட்டு, எந்தெந்த கட்சிகள் உடன்பாடு கொண்டு கூட்டணி அமைக்க முடியும் என்று பொதுமக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ, அதற்கேற்பவும் - அதற்கு மாறாகவும் கருத்துகளை பரப்புகின்ற ஒரு சூழ்நிலையும் இன்றைக்கு இருப்பதை மறந்து விடக்கூடாது.

"நாம் காங்கிரசோடு உடன்பாடு கொண்டுள்ளோமா? அல்லது வேறு கட்சிகளுடனா? புதிய அணியா?'' ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்கின்ற போது, நம்மையே குழப்புகின்ற வகையில் செய்திகள் வேண்டுமென்றே வெளியிடப்படுகின்றன. கழகத்தினுடைய வலிமையைக் குறைப்பதற்கும், நம்முடைய வலிவைக் குறைப்பதால் ஜெயலலிதா அம்மையாருக்கு ஆதரவைப் பெருக்குகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியுமா? என்ற ஆதங்கத்தோடு காரியம் ஆற்றப்படுகின்றது.

பத்திரிகையிலே பார்த்தால், ஒரு நாள் அந்த அம்மையார் சொல்கிறார் - "கூட்டணி யாரோடு, எப்போது என்பதையெல்லாம் நான் சொல்வேன்'' என்று கூட்டங்களிலே - பத்திரிகையாளர்கள் பேட்டியின்போது - அந்த அம்மையார் சொல்வதை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால், எதுவும் திட்டவட்டமாக, முடிவாகாத ஒன்றுதான் என்பதையும்; கூட்டணி உண்டா, இல்லையா? அது யாரோடு? என்ற இவைகளையெல்லாம் அவ்வப்பொழுது வருகிற செய்திகளை வைத்து - அவரவர்கள் கற்பனை செய்து கொள்கின்ற ஒன்றே தவிர, வேறல்ல.

பாமக-கம்யூனிஸ்டுகள் வருவார்களா?

நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் - நான் அப்படிச் சொல்வதால், "ஓஹோ! கூட்டணியே இல்லை போல் இருக்கிறது. ஆகவேதான், தலைவர் இப்படிப் பேசுகிறார்'' என்று கருதி விடக்கூடாது.

கூட்டணி காங்கிரசோடு மட்டும்தானா? கம்யூனிஸ்ட் கட்சியும் உண்டா? அல்லது பா.ம.க. உண்டா? வேறு புதிய கட்சிகள் உண்டா? என்பதையெல்லாம் - இவ்வளவு பெரிய கூட்டத்தில் உங்களையெல்லாம் வைத்துக் கொண்டு முடிவு செய்யக்கூடிய ஒன்றல்ல. அவர்களைப் பற்றி அறிந்து, புரிந்து, தெரிந்துகொண்டு, இப்படிப்பட்ட கூட்டணிக்கு பல பேர் தங்களுடைய கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள் - இன்னின்ன கட்சிகள் நம்மோடு பேசியிருக்கிறார்கள்; நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? என்று உங்களைக் கேட்கின்ற காலம் ஒன்று நிச்சயமாக வரும். அந்தக் காலம் வரும்போது, உங்களிடத்திலே கருத்து கேட்கப்படும். நீங்கள் சொல்கின்ற கருத்தின்படி, கழகம் முடிவெடுக்கும்! "நான் முடிவெடுப்பேன்'' என்று அகந்தையாக, சர்வாதிகாரமாக, எதேச்சதிகாரமாக நான் சொல்ல விரும்பவில்லை.

நானும், பொதுச் செயலாளரும் - கழகத்தினுடைய பொதுக்குழு, செயற்குழு - கழகத்திலே செயலாற்றுகின்ற எந்தக் குழுக்களானாலும், அந்தக் குழுக்களையெல்லாம் கலந்து பேசி, ஒரு நாள், இரு நாள் அல்ல; பல நாட்கள் கலந்து பேசி எடுக்கின்ற முடிவாகத்தான் இருக்கும்; ஜனநாயக ரீதியான முடிவாகத்தான் அது இருக்கும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டோம்.

இருந்தாலும், நம்மைப் பொறுத்தவரையில், ஒன்றைத் தெளிவாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். "நாம் வெற்றி பெற்றே தீருவோம்'' என்ற அளவிற்கு உறுதியானவர்கள் என்பதிலே எந்தவிதமான சந்தேகமுமில்லை. அதற்கேற்ப நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

நான் பலமுறை சொல்லியிருக்கின்றேன். நாமெல்லாம் ஒற்றுமையாக இருந்து, கம்பீரமாக எழுந்து நின்றால், நம்மை எவராலும் அசைக்க முடியாது; யாராலும் நம்மை வீழ்த்த முடியாது என்ற அந்த ஒற்றுமை உணர்வை நீங்கள் காட்டவேண்டும்.

ஒருவருக்கொருவர் கோபதாபங்கள், மனமாச்சர்யங்கள், மனஸ்தாபங்கள் - எம்.எல்.ஏ.க்களுக்கிடையே ஏற்படலாம்; அமைச்சர்களுக்கிடையே ஏற்படலாம்; யாருக்கிடையே ஏற்பட்டாலும், அவைகளெல்லாம் நமக்கிடையே ஏற்பட்ட மனஸ்தாபம்தான்; கட்சியினுடைய கொள்கைகளில் ஏற்பட்ட காரியங்கள் அல்ல இவைகள் என்ற அந்த எண்ணத்தோடு - "கட்சிதான் முக்கியம்; கழகம்தான் முக்கியம்; நமக்கு அண்ணாதான் முக்கியம்; பெரியார்தான் முக்கியம்'' என்ற அந்த உணர்வோடு நாம் ஒன்றுபட்டிருக்க வேண்டும். அந்த ஒற்றுமையை யாராலும் வீழ்த்தமுடியாது.

இந்திய வரலாற்றில் - நம்முடைய கழகம் ஒவ்வொரு முறையும் எத்தனையோ சோதனைகளையெல்லாம் சந்தித்த இயக்கம். ஆகவே, எதற்கும் கலங்காமல் நின்று, நாம் தேர்தலைச் சந்திப்போம் என்ற உறுதியோடு இருந்தால், கவலை என்பது நமக்குத் தேவையில்லை. அந்தக் கவலை தேவையில்லை என்றால், வருகின்றவர்களையெல்லாம் அலட்சியப்படுத்துங்கள் என்று அர்த்தமல்ல; அவர்களையெல்லாம் இப்போதே தள்ளி விடாதீர்கள் என்று நான் எச்சரிக்கவும் விரும்புகின்றேன்.

இன்றைக்குக்கூட நீங்கள் பத்திரிகையைப் பார்த்தால் - நேற்றைக்கு நடைபெற்ற அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், ஜெயலலிதா அம்மையார் - "காங்கிரசை தயவு செய்து யாரும் திட்டாதீர்கள்; காங்கிரசைப் பற்றி எதுவும் பேசாதீர்கள்'' என்று அறிவுரை கூறி, அவர்களையெல்லாம் டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்றால் - அதாவது, "காங்கிரசை விரோதித்துக் கொள்ளக் கூடாது. காங்கிரசிலே சிலரைப் பிடித்து வைத்திருக்கின்றேன். ஆகவே, இப்போதே காங்கிரசைத் திட்டி, காங்கிரசோடு விரோதத்தை உருவாக்கி விடாதீர்கள்'' என்று ஜாக்கிரதையாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், ஜெயலலிதா நினைப்பது வெற்றி பெறாது.

ஒரு காலத்திலே சென்னை கடற்கரையில் ராஜாஜியும், காமராஜரும் ஒரே மேடையில் நின்று பேசி - "தி.மு.க.வை, திராவிட இயக்கத்தை அழித்தே தீருவது'' என்று முடிவெடுத்து, ராஜாஜி - காமராஜருக்குத் திலகமிட்டு வாழ்த்தியதுபோது, தமிழ்நாடே குலுங்கியது - தி.மு.க. அவ்வளவுதான் - இரண்டு பேரும் கடற்கரையிலே பேசிய பேச்சு தி.மு.கழகத்தை வெற்றி பெற வைக்காது - அந்தக் கூட்டத்தினுடைய பலம், வலிவு இவற்றையெல்லாம் பார்த்தபோது, தி.மு.கழகத்திற்கு இனி எதிர்காலம் இல்லை என்றுதான் தமிழ்நாட்டு மக்கள் கருதினார்கள்.

ஆனால், அந்தத் தமிழ்நாட்டு மக்கள் யார் - அவர்களுக்கு தி.மு.கழகத்தின் மீது என்ன ஆதங்கம்? எந்த அளவிற்கு வெறுப்பு? என்று அவர்களுக்குச் சொல்லத் தெரியாது. ஆனால், ஆரியம் - கடுமையான விஷம் என்பது உங்களுக்குத் தெரியும். மெல்ல மெல்ல விஷத்தை நம்முடைய உடம்பிலே இறக்கி, கொல்வதைப் போல, திராவிட சமுதாயத்தை வீழ்த்த ஆரியம் போட்டிருக்கின்ற கணக்கு - ஒவ்வொரு நாளும் பத்திரிகையைப் பார்த்தால் தெரியும்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல், எதைப்பற்றியும் ஆராயாமல், எதைப்பற்றியும் விவாதிப்பதற்கு மனமில்லாமல், இது நியாயமா? அநியாயமா என்பதைப் பற்றிச் சிந்திக்க விரும்பாமல் - தி.மு.கழகத்தின் மீது குறையா? குற்றமா? சேறு வாரி இறைக்கப்படுகிறதா? அப்படியானால் நாமும் அதில் கலந்து கொள்வோம் என்று அதைப் பிரச்சாரம் செய்கின்ற ஏடுகள் தமிழ்நாட்டிலே இன்றைக்கு எத்தனையோ வருகின்றன. நாம் அந்த ஏடுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை.

நம்மை நம்பி, நம்முடைய உறுதியை நம்பி, நம்முடைய இயக்கத்தின் உணர்வுகளை நம்பித்தான் நாம் அந்த எதிர்ப்புகளுக்கெல்லாம் ஈடு கொடுத்தோம். இப்போது அந்த நிலைமை திரும்பி வருமா? வராது என்று நான் நம்புகிறேன். ஒருவேளை வந்தால், நாம் நிச்சயமாக வெற்றிக்குரிய அந்த நிலையை உருவாக்குவதற்கு நம்முடைய அணி - நமக்குள்ளேயே இருக்கிற அணி பலமாக இருக்க வேண்டும். அதற்காக; "அணிகள்'' பலவாகி விடக்கூடாது; நாம் ஓரணியாக இருக்க வேண்டும். நமக்குள்ளே அணிகள் கூடாது. "அணிகள்'' என்பது நமக்குப் "பிணிகள்''. அது நம்மை விட்டுத் தொலைந்தால்தான், - அதை நாம் அகற்றினால்தான் - நாம் வெற்றி இலக்கை அடைய முடியும் என்ற உறுதியை இந்த நேரத்தில் உங்களுக்குத் தர விரும்புகிறேன்.

சட்டப் பேரவைக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டதை எண்ணிப் பார்க்கிறேன்; நாம் ஆற்றிய அந்தத் தொண்டுகளையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்; மக்களுக்குச் செய்திருக்கின்ற நன்மைகளையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன். இவ்வளவும் ஒரு தேர்தலிலே - எந்த அடையாளத்தை, எந்த முடிவை நமக்குத் தரப்போகிறது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். இதற்கெல்லாம் நிச்சயமாகத் தமிழ் மக்கள் தங்களுடைய ஆதரவைத் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. அந்த ஆதரவைத் திரட்ட வேண்டிய பொறுப்பு, கடமை, அந்த உணர்வு - இவைகளெல்லாம் உங்களுக்குத் தேவை என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X