For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் சில நாட்களில் அனைவரும் விரும்பும் கூட்டணி முடிவாகும்-ஜெ.

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: சில கட்சிகளுடன் அதிமுக கூட்டணி தொடர்பாக பேசி வருகிறது. இன்னும் சில நாட்களில் அனைவரும் விரும்பும் கூட்டணி தொடர்பான ஒப்பந்தங்கள் உருவாகும். அதிமுகவுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் காத்துள்ளது. திமுகவை வரும்தேர்தலில் வீழ்த்த மும்முரமாக செயல்படுங்கள் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில்நடந்தது. ஜெயலலிதா தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எடுக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:

இந்த பொதுக்குழு கூட்டம் வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு என்று கூறினார்கள். இந்த பொதுக்குழு பிற்காலத்திலும், எக்காலத்திலும் வரலாற்று சிறப்பு மிக்க கூட்டம்தான்.

இன்னும் 4 மாதத்தில் நாம் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கப்போகிறோம். 2011-ம் ஆண்டு நாம் சந்திக்கப்போகிற சட்டமன்ற தேர்தல் போராட்டம், நாம் இதுவரை சந்தித்த போராட்டங்களில் மிகப்பெரிய போராட்டமாக இருக்கப்போகிறது. மிகப்பெரிய போராகவும் இருக்கப்போகிறது.

1967-ம் ஆண்டு அண்ணாவால் வரலாற்று திருப்பு முனை நிகழ்த்தப்பட்டது. அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றதில் இருந்து இன்று வரை ஒரு திராவிட கட்சிதான் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

அண்ணா உருவாக்கிய தி.மு.க. இன்று இல்லை

ஆனால் அண்ணா உருவாக்கிய தி.மு.க. இன்று இல்லை. அ.தி.மு.க. ஆட்சி எப்போது அமையும் என்று மக்கள் ஏங்கிக்கிடக்கிறார்கள். நாம் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்றால் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது மட்டும் அல்ல, 1967-ம் ஆண்டு அண்ணா எப்படி ஒரு வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தினாரோ அது போன்ற திருப்பு முனையை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு நமக்கு காத்திருக்கிறது.

நாம் அனைவரும் நமது கடமைகளை சரிவர செய்தால், நாம் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டால், உண்மையாக உழைத்தால் 2011-ம் ஆண்டு தமிழகத்தில் ஒரு வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தி, எக்காலத்திலும் அ.தி.மு.க. ஆட்சிதான் தமிழகத்தில் இருக்கும் என்ற நிலையை நாம் உருவாக்கமுடியும்.

இது எதோ உங்களை மகிழ்விக்க வேண்டும் என்று சொல்வதற்காக கூறும் வெற்று வார்த்தை அல்ல. நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டால் எக்காலத்திலும் தி.மு.க.வை ஒழித்துக்கட்டி, தி.மு.க. எழுந்திருக்க முடியாத நிலையை நம்மால் உருவாக்க முடியும்.

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் தேர்தல் வந்தபோது கூட சிலருக்குத்தான் சட்டமன்ற உறுப்பினராக ஆகும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். வேட்பாளர் பட்டியலை அறிவித்த பின்னர், வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தவர்கள், அந்த வருத்தம் அடங்கிய பின்னர், இது நம்முடைய தலைவர் அறிவித்த வேட்பாளர். ஆகவே அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். மீண்டும் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக வரவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பணியாற்றினார்கள்.

நம்மை நாமே தோற்கடிக்கலாமா?

அதனால்தான் எம்.ஜி.ஆர். திரும்பத்திரும்ப 3 முறை தேர்தலில் வெற்றி பெற்று, 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்க முடிந்தது. ஆனால் அண்மை காலமாக வேறு ஒரு புதிய கலாசாரத்தை நாம் கழகத்தில் கண்டுகொண்டு இருக்கிறோம். அண்மை காலமாக நமது கழக உறுப்பினர்களே, நம்முடைய கழக வேட்பாளர்களை தோற்கடிக்கின்ற - பணியாற்றுகிற ஒரு புதிய கலாசாரத்தை நாம் பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். கூட்டணி கட்சிகளுக்கு சில இடங்களை விட்டுத்தந்தாக வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். ஆக ஒருசில இடங்களில்தான் அ.தி.மு.க. போட்டியிட முடியும் என்பதும் உங்களுக்கு தெரியும்.

ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருக்கும் ஒரு மாபெரும் கட்சி இது. கட்சியில் எத்தனையோ தகுதி உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் 10-க்கும், 12-க்கும் மேற்பட்ட தகுதி உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களில் யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அவர்கள் சிறந்த சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றக்கூடியவர்கள்தான். ஆனால் ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பு அளிக்கமுடியும் என்பதும் உங்களுக்கு தெரியும். ஆனால் என்ன நடக்கிறது., இந்த எதார்த்த நிலையை உணராமல், புரிந்துகொள்ளாமல், அண்மை காலமாக என்ன நடந்து வருகிறது என்றால், தகுதி உள்ளவர்கள் பலர் இருந்தாலும், ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பு கொடுக்க முடியும் என்பதால் அந்த ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் ஏமாற்றப்பட்ட அதே தொகுதியை சேர்ந்த 4, 5 பேர் ஒன்றாக சேர்ந்து, இந்த வேட்பாளரரை தோற்கடிக்க பணியாற்றுகிறார்கள்.

2006-ம் ஆண்டு தேர்தலில் இதுதான் நடந்தது. நம்மை தி.மு.க. தோற்கடிக்கவில்லை. நம்மை நாமே தோற்கடித்துக்கொண்டோம்.

இதை எல்லாம் எதற்காக சொல்லுகிறேன் என்றால், 2006-ம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்ததோ அது, 2011-ம் ஆண்டும் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் சொல்லுகிறேன். உண்மையாகவே ஒரு தொகுதியில் யாரை வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எனக்கே கடினமான காரியம். தகுதி உள்ளவர்கள் பலபேர் இருந்தாலும் யாராவது ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பை அளிக்கமுடியும்.

இந்த முறை நான் யாரை வேட்பாளராக அறிவித்தாலும், அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு, அம்மா அறிவித்த வேட்பாளர் என்று அ.தி.மு.க. வெற்றிபெற வேண்டும், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என்பதை உறுதி படுத்துவதே நமது கடமை என்ற உணர்வோடு நாம் அனைவரும் செயல்படவேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

செல்போன், சாதாரண போன்களை கட்டித் தொங்க விடுங்கள்

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அ.தி.மு.க. பேச்சாளர்கள் கிராமம், கிராமாக பிரசாரம் செய்யவேண்டும். கிராமங்களில், செல்போன், சாதாரண போன்களை கட்டித் தொங்கவிட்டாலே மக்கள் புரிந்துகொள்வார்கள்.

தமிழகத்தில் 1967ஆம் ஆண்டு அண்ணா ஏற்படுத்திய வரலாற்று சிறப்புமிக்க மாற்றம்போல, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வரலாற்று சிறப்பு மிக்க மாற்றம் ஏற்படும். வரும் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். இந்த மாற்றத்தை கொண்டுவர அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும்.

அண்ணா உருவாக்கிய திமுக இன்று இல்லை. கருணாநிதி தலைமையில் ஊழலில் ஊற்றுக் கண்ணாக திமுக விளங்குகிறது. திமுக ஆட்சி எப்போது வீழும் என்றும், அதிமுக ஆட்சி எப்போது மலரும் என்றும் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

விரும்பும் கூட்டணி அமையும்

சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கப் போகிறோம், கூட்டணிபற்றி அம்மா ஒருவார்த்தை கூட சொல்லவில்லையே என்று நீங்கள் அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். எப்படிப்பட்ட கூட்டணியை நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்பது எனக்கு தெரியும். எந்த கட்சிகளுடன் கூட்டணி அமையவேண்டும் என்று விரும்புவீர்கள் என்பதும் எனக்கு தெரியும்.

கவலைப்படாதீர்கள் நீங்கள் விரும்புகிற கூட்டணி அமையும். அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும். வெளிப்படையாக தெரியாவிட்டாலும், நான் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், அந்த பேச்சுவார்த்தை முடிவுகள் இன்னும் வரவில்லை. கூட்டணி குறித்து இறுதி முடிவு ஆவதற்கு ஒப்பந்தம் ஏற்படுவதற்கு இன்னும் சில நாட்கள் பிடிக்கும். எனவே, தற்சமயம் நான் அதுபற்றி எதுவும் சொல்ல முடியவில்லை.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும்போது, கூட்டணி குறித்து உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு செய்தியை சொல்லலாம் என்றுதான் நான் விரும்பினேன். ஆனால், கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில் இந்த பொதுக்குழுவை கூட்டி ஆக வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டது.

இந்த நாளுக்குள் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையை, ஒரு முடிவுக்குக் கொண்டுவரவில்லை. ஆனால், நான் ஏற்கனவே சொன்னதுபோல், இன்னும் சில நாட்களில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துவிடும். நீங்கள் விரும்புகிற கூட்டணி அமையும் என்பதை மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மிக ஒளிமயமான பிரகாசமான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது.

எனவே, பீடுநடைபோடுங்கள், வீறு நடைபோடுங்கள். புதிய வரலாறுபடைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்படுங்கள். வெற்றிக்கனியை பறிக்கத் தயாராகுங்கள் என்றார் ஜெயலலிதா.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான ஜேபிசி கோரிக்கை குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுகுறித்து தற்போது நான் எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில், விசாரணையில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றி சிபிஐ எதுவும் தெரிவிக்கவில்லை. எத்தகைய நடவடிக்கையை சிபிஐ எடுக்கப் போகிறது என்றும் தெரியவில்லை.

அதேசமயம், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

உச்சநீதிமன்றம் சுயேட்சையான விசாரணைக்கு உத்தரவிட்டால் அதனையும் நாங்கள் வரவேற்கிறோம். சிபிஐ விசாரணையைத் தொடர்ந்து நியாயமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் இதுவரை அது மிகுந்த சந்தேகத்திற்கு இடமானதாகவே உள்ளது என்றார் ஜெயலலிதா.

English summary
ADMK Chief Jayalalitha said on Thursday that, Poll alliance will be shape in few days on expected lines. She was speaking in party general council meeting. She said, I am talking with some parties unoffcially. It will take some to time to finalise the things. I will share the good news in few days, she said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X