• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அகந்தை பிடித்த அதிமுக, இன்னும் மாறாத ஜெயலலிதா-மதிமுக கடும் சாடல்

  |
  Vaiko
  சென்னை: கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை, ம.தி.மு.க.வுக்கு இல்லை. மதிமுகவினரின் உள்ளங்களைக் காயப்படுத்தி விட்ட, அகந்தை பிடித்த அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம். தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்று மதிமுக தீர்மானம் போட்டுள்ளது.

  வைகோவின் இந்த முடிவு அரசியல் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைகோவின் இந்த முடிவால், வைகோ மூலம் அதிமுகவுக்கு ஆதரவான நிலையை எடுத்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் தேர்தலைப் புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  இந்திய அரசியலில் மிகவும் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான வைகோவையும், அவரது மதிமுகவையும் ஜெயலலிதா நடத்திய விதம் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் நல்ல பாடமாக அமைந்துள்ளது.

  கடந்த தேர்தலின்போது திமுக கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்குவதில் திமுக தலைமை தயக்கம் காட்டியதால், அங்கிருந்து விலகி யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவில் சேர்ந்தார் வைகோ. அவருக்கு 35 தொகுதிகளைக் கொடுத்தார் ஜெயலலிதா.

  இந்த நிலையில் தற்போதயை தேர்தலில் ஜெயலலிதாவின் முக்கியத்துவம் விஜயகாந்த்துக்குப் போய் விட்டதால் முதல் ஆளாக அவரை அழைத்து 41 தொகுதிகளை தூக்கிக் கொடுத்தார். வைகோ கிடப்பில் போட்டு விட்டார்.

  ஆரம்பத்தில் 35 தொகுதிகளைக் கேட்டு வந்தார் வைகோ. ஆனால் ஜெயலலிதா முடியாது என்று கூறி விட்டார். பின்னர் வைகோ சற்று இறங்கி வந்து 25, 23, கடைசியில் 21 என்ற அளவுக்கு வந்தார். ஆனால் ஜெயலலிதாவோ 8 அல்லது 9 என்று அடிமாட்டு ரேஞ்சுக்கு போனார்.

  இதை மதிமுக ஏற்க முடியாது என்று கூறி விட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் சில அதிரடி நடவடிக்கைகளால் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக கொந்தளித்து விட்டன. இந்தப் பெரும் குழப்பத்தை எதிர்பாராத ஜெயலலிதா, தனது பிரசாரத்தை தள்ளி வைத்து விட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

  அப்போது கூட்டணிக் கட்சியினர் மதிமுகவுக்கும் கெளரவமான இடங்களைத் தர வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால் வேறு வழியில்லாமல் ஓ.பன்னீர் செல்வத்தையும், செங்கோட்டையனையும் மதிமுக அலுவலகம் சென்று வைகோவிடம் பேசச் செய்தார் ஜெயலலிதா. அவர்களும் நேற்று வைகோவைச் சந்தித்துப் பேசினர்.

  இந்த சந்திப்பின்போது தங்களுக்கு 21 தொகுதிகள் கண்டிப்பாக தேவை என்று வைகோ கூறி விட்டார். இதைக் கேட்டுக் கொண்ட அதிமுக குழுவினர், ஜெயலலிதாவிடம் போய் இதைச் சொன்னார்கள்.

  இந்த நிலையில், நேற்று மதிமுக உயர் நிலைக் குழுக் கூட்டம் நடந்தது. பின்னர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக தாங்கள் கேட்டபடி சீட்களை ஒதுக்க மறுத்து வருவதால் தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

  நேற்று மாலை தொடங்கிய இந்தக் கூட்டம் விடிய விடிய நடந்தது. இன்று அதிகாலை 3 மணி வரை கூட்டம் நடந்தது. இறுதியில்தான் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவுக்கு மதிமுக வந்தது. தேர்தலைப் புறக்கணிப்பது தொடர்பாக ஒரு தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

  இதுதொடர்பாக மதிமுக நிறைவேற்றிய தீர்மானம் - முழு விவரம்:

  "2006 ஆம் ஆண்டு முதல், அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வந்த ம.தி.மு.க., தற்போது நடைபெற இருக்கின்ற தமிழகம், புதுவை சட்ட மன்றப் பொதுத் தேர்தல்களில், தொகுதிப் பங்கீட்டில் எழுந்து உள்ள நிலைமை குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய நிலைமை உருவாகி இருக்கின்றது.

  காளிமுத்து அழைத்ததால்!

  2006 ஆம் ஆண்டு, சட்ட மன்றப் பொதுத் தேர்தலின் போது, அ.தி.மு.க. அவைத் தலைவர், நினைவில் வாழும் முனைவர் கா. காளிமுத்து, பொதுக்கூட்டத்தின் வாயிலாகவே, அ.தி.மு.க. கூட்டணியில் வந்து சேருமாறு, ம.தி.மு.க.வுக்குப் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

  அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசும்போது, “கூட்டணியில் நீங்கள் எதிர்பார்க்கின்ற ஒரு கட்சி இடம் பெறும்" என்று, அதன் பொதுச் செயலாளர் அறிவிக்கவும் செய்தார்.

  2004 பொதுத் தேர்தலுக்குப் பின், தி.மு.க. தலைமையின் அணுகுமுறையால் நடை பெற்ற சில நிகழ்வுகளால் ஏற்பட்ட காரணங்களால், ம.தி.மு.க. தொண்டர்களுள் 90 விழுக்காட்டினரும், தலைமை நிர்வாகிகள், முன்னணித் தலைவர்களுள் பெரும்பான்மையோரும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், ம.தி.மு.க. இடம் பெறவேண்டும் என்று விரும்பியதன் விளைவாக, அந்தக் கூட்டணியில் கழகம் இடம் பெற்றது.

  தமிழகத்தில் 35 இடங்களும், புதுவையில் 2 இடங்களும், ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டன. ம.தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம் என்பதால், கழகத்தில் பெரும்பாலானோருடைய கருத்தினை ஏற்று, அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்ததால், கழகத்தின் பொதுச் செயலாளர் மீது துளியும் உண்மை இல்லாத பழியும், நிந்தனையும், தி.மு.க. தரப்பில் இருந்து சுமத்தப்பட்டன.

  அந்தத் தேர்தலில், ம.தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளைக் குறி வைத்து வீழ்த்திட முனைந்த தி.மு.க., தமிழ்நாட்டிலேயே மற்ற தொகுதிகளை விட, கழகம் போட்டியிட்ட தொகுதிகளில், பெரும் பணபலத்தைப் பிரயோகித்தது. அந்தத் தேர்தலில், கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, 213 தொகுதிகளில், தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

  ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், ம.தி.மு.க. வெற்றி பெற்றது. பல தொகுதிகளில் குறைந்த வாக்குகளில் தோற்றது.

  புயல் வேகப் பிரசாரம்

  2001 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க.வின் வாக்குகளை மட்டுமே கணக்கிட்டால், 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 31 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற, ம.தி.மு.க. காரணம் ஆயிற்று. அதனைத் தவிர்த்து, ம.தி.மு.க.வின் நாடு தழுவிய புயல் வேகப்பிரசாரம், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஊக்கம் அளித்ததோடு, நடு நிலை வாக்காளர்களின் ஆதரவையும் கவர்ந்தது என்பது உண்மை ஆகும்.

  அந்தத் தேர்தலில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் தவிர, வேறு கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை. அதற்குப் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளில், அ.தி.மு.க. மேற்கொண்ட முக்கியமான அரசியல் நிலைப்பாடுகளை, ம.தி.மு.க., உறுதியாக ஆதரித்துச் செயல்பட்டது.

  திருமங்கலத்தில் முதல் ஏமாற்றம்

  தமிழக சட்டமன்றத்தில், அ.தி.மு.க.வை ஆதரித்து முழு மனதோடு இணைந்து செயல்பட்டது. திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ம.தி.மு.க. வெற்றி பெற்று இருந்த தொகுதி என்றபோதும், அ.தி.மு.க. தானே போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தியபோது, அதனை ஏற்றுக்கொண்டது.

  கம்பம், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகள் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில், தேர்தலைப் புறக்கணிப்பது என்ற அ.தி.மு.க.வின் முடிவை, மதி.மு.க.வும் ஏற்றுக்கொண்டது.

  சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதிலும், அ.தி.மு.க. அரசால் அனுமதிக்கப்பட்டு, தூத்துக்குடியில் அமைந்து உள்ள நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றுவதிலும், ம.தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது இல்லை.

  வைகோ மீதான அதிமுகவினரின் பாசம்

  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய மகத்தான இயக்கமான அ.தி.மு.க.வின் அடலேறுகளான தொண்டர்கள், ம.தி. மு.கவின் மீதும், அதன் பொதுச் செயலாளர் வைகோ மீதும், பரிவையும் அன்பையும் தொடர்ந்து காட்டி வந்து உள்ளனர்.

  நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து, அ.தி.மு.க. குழுவினருடன் ம.தி.மு.க. குழு, நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த முறை போட்டியிட்ட 35 இடங்களை மீண்டும் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டது. இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களின்போது, 30 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டுமெனக் கோரியது.

  35 கேட்டு 30 ஆகி 7 ஆனது

  மார்ச் 8 ஆம் நாள் நடைபெற்ற, நான்காவது சுற்று பேச்சுவார்த்தையின் போது தான் ம.தி.மு.க.வுக்கு ஆறு இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என அ.தி.மு.க தலைமையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. குறைந்த பட்சம் 23 தொகுதிகளாவது ஒதுக்குமாறு கழகத்தின் தரப்பில் இருந்து கேட்டபோதும், மார்ச் 12-ஆம் தேதியன்று மேலும் ஒரு தொகுதி என ஏழு தொகுதிகள் ஒதுக்குவதாகக் கூறப்பட்டது.

  8 மட்டுமே தர முடியும்

  மறுநாள் 13-ஆம் தேதி அ.தி.மு.க தரப்பில் இருந்து இன்னும் ஒரு தொகுதியைச் சேர்த்து 8 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. மார்ச் 14-ஆம் தேதி காலை 11 மணி அளவில் கழகப் பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் அ.தி.மு.க. சார்பில் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மார்ச் 13-ஆம் தேதியன்று அ.தி. மு.க. தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட எட்டுத் தொகுதிகளை கொடுக்க இயலாது என்றும், ஒரு தொகுதியை குறைத்து 7 தொகுதிகளே தர முடியும் என்றும், தங்கள் கட்சித் தலைமை தெரிவிக்க சொன்னதாகக் கூறிவிட்டுச் சென்றார்கள்.

  இதன்மூலம் ம.தி.மு. க.வைப் புண்படச் செய்து, தாங்களாகவே கூட்டணியை விட்டு வெளியேற வைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டதை உணர முடிந்தது.

  அதன்பின்னர், அதே நாளில், மாலை நான்கு மணியளவில் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் வைகோவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதல்நாள் கூறிய படி 8 தொகுதிகளை ஒதுக்க தயாராக இருப்பதாக அ.தி. மு.க தலைமையின் சார்பில் கூறினார்கள்.

  9 தருவதாக கூறினார்கள்

  15-ஆம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளரின் பிரதிநிதிகள் வைகோவை சந்தித்து, அதிகபட்சமாக 9 இடங்கள்தான் தரமுடியும் என்று தெரிவிக்கச் சொன்னதாகக் கூறினார்கள். மறுநாள் 16ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் மீண்டும் அதே பிரதிநிதிகள் முதல்நாள் இரவில் கூறியதையே திரும்பவும் உறுதிபடுத்தி, இதை ஏற்றுக் கொண்டு உடன்பாட்டில் கையெழுத்து இட வருமாறு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் அழைத்ததாகக் கூறினார்கள்.

  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 23 இடங்கள் என்பதில் இரண்டு இடங்களைக் குறைத்துக் கொள்கிறோம். நாங்கள் கேட்கும் 21 இடங்களைத் தருவதாக இருந்தால் உடன்பாடு குறித்துப் பேசுவோம். அதை தவிர்த்து இனி பேசிப் பயன் இல்லை என்று கூறி விட்டார்.

  திட்டமிட்டு உதாசீனம்

  அன்று மாலையிலேயே ஏற்கனவே மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 74 இடங்கள் போக, மீதம் உள்ள 160 தொகுதிகளுக்கும் அ.தி. முக. வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம், கூட்டணியில் ம.தி.மு.க இடம் பெறவில்லை என்பதை அ.தி. மு.க. தலைமை அறிவித்தே விட்டது.

  2006-ஆம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க. கூட்டணியில் நம்பிக்கைக்கு உரிய தோழமையைக் கடைப்பிடித்து வந்த ம.தி.மு.க.வை முதலில் அழைத்துப் பேசி தொகுதி உடன்பாடு செய்திட வேண்டிய அணுகு முறையைக் கடைப்பிடிக்காமல் திட்டமிட்டே உதாசீனப்படுத்தி விட்டது.

  ம.தி.மு.க. நடத்தப்பட்ட விதம் குறித்து மக்கள் மன்றத்தில் எழுந்த விமர்சனத்தால் 19-ம் தேதியன்று காலை 10 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ம.தி.மு.க தலைமை நிர்வாகிகளை தாயகத்தில் சந்தித்து 12 தொகுதிகளை தருவதாக அ.தி.மு.க தலைமையின் சார்பில் தெரிவித்தார்கள்.

  உள்ளங்களைக் காயப்படுத்திய அதிமுக

  ஏற்கனவே கூறியபடி, ம.தி.மு.க. கேட்கும் 21 தொகுதிகளை தருவதாக இருந்தால் தொகுதி உடன்பாட்டுக்கு இசைவு அளிக்க முடியும் என்று ம.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொகுதிப் பங்கீட்டில் அ.தி.மு.க. தலைமை ம.தி. மு.க.வை நடத்திய விதமும், கடைப்பிடித்த போக்கும் கழகத்தின் உள்ளங்களை மிகக் கடுமையாக காயப்படுத்தி விட்டது.

  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் நடவடிக்கைகளில், அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது. அவருடைய போக்கிலும், அணுகுமுறையிலும், எத்தகைய மாற்றமும் ஏற்பட வில்லை.

  அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும் திட்டவட்டமாகப் புலப்பட்டதற்குப் பிறகு, அவரது தலைமையிலான கூட்டணியில் இனி தொடர்ந்து நீடிப்பதும், வாக்காளர்களை சந்திப்பதும், எவ்விதத்திலும் ஏற்பு உடையது அல்ல.

  இந்நிலையில், புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்துப் போட்டியிடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு ம.தி. மு.க. கருவியாயிற்று என்ற துளியும் உண்மையற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும்.

  சுயமரியாதையை இழக்கத் தேவையில்லை

  கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை, ம.தி.மு.க.வுக்கு இல்லை.

  தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாக போற்றும் ம.தி. மு.க. 2011-இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு, புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றும், திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், தமிழ் இனத்தின் நலனைக் காக்கவும் தொடர்ந்து உறுதியோடு பயணத்தை மேற்கொள்வது எனவும், ம.தி. மு.க. உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  MDMK has decided to boycott TN assembly polls. A motion was brought in MDMK district secretaries meeting held in Chennai yesterday. The meeting started by yesterday evening and ended this morning. At the end of the meeting, boycott motion was adopted. The motion blasted Jayalalitha and her attitude for this decision.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more