For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோவை அழைக்கிறார் கருணாநிதி?

Google Oneindia Tamil News

Vaiko and Jayalalitha
சென்னை: அதிமுகவுக்காக, மதிமுக என்ற தனது கட்சியைக் கூட மறந்து போய் உழைத்து ஓய்ந்து போன வைகோவை திமுக கூட்டணிக்கு வருமாறு முதல்வர் கருணாநிதி அழைக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை அதை மறைமுகமாக சுட்டிக் காட்டுவதாக உள்ளது.

முதல்வர் கருணாநிதி இன்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வைகோவுக்கு அவர் மறைமுக அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரிகிறது.

கருணாநிதி தனது அறிக்கையில், திராவிடர்கள் நெல்லிக்காய் மூட்டை என எதிரிகள் நினைக்கும் நிலையை மாய்ப்போம். அனைவரும் ஒருங்கிணைந்து களம் காண்போம் வாரீர்.

துன்பப்பட்டோர், துயரப்பட்டோர், துரத்தப்பட்டோர், திசை மாறிச் சென்றோர் என அனைவரும் ஒருங்கிணைவோம் வாரீர்.

இந்த பணி பலவீனமாக இருப்பதாக கருதி அல்ல, இருக்கின்ற படை இன்னும் வலிமையாய் அமைய வேண்டும் என்பதற்காக அழைக்கின்றேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

கருணாநிதியின் இந்த அறிக்கை பல அர்த்தங்களை கூறுவதாக அமைந்துள்ளது. இன்று காலையில்தான் தி.க. தலைவர் கி.வீரமணி, வைகோவுக்கு ஆறுதல் கூறுவது போலவும், திமுகதான் சிறந்த கொள்கைகளை உடைய ஒரே இயக்கம் என்று வலியுறுத்திக் கூறியிருந்ததும் நினைவிருக்கலாம். இந்த நிலையில் கருணாநிதியின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

'பீரங்கி' இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ!:

2009ம் ஆண்டு. லோக்சபா தேர்தல் களம். அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த நேரம். காரணம், ஈழத்தில் போர் உக்கிரமடைந்திருந்ததால். அத்தனை பேரின் கண்களும் அப்போது அதிமுக அணியில் இடம் பெற்றிருந்த வைகோ மீதே இருந்தது.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலையை கொண்டிருந்த ஜெயலலிதாவையே, அவர்களுக்கு ஆதரவாகப் பேச வைத்து வெற்றி கண்டிருந்தார் வைகோ என்பதே அதற்குக் காரணம்.

அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டுப் பிரசாரக் கூட்டம் ஜெயா டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அத்தனை தலைவர்களும் பேசினார்கள் - ஜெயலலிதா உள்பட. ஆனால் அனைவரையும் வசீகரித்தது வைகோவின் முழக்கப் பேச்சு மட்டுமே. ஜெயலலிதா நீட்டி முழக்கிப் பேசியபோது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதைக் காண முடிந்தது. அவ்வளவு 'போர்' அந்தப் பேச்சு. அதை ஜெயலலிதாவே தனது பேச்சின்போது மறைமுகமாக சுட்டிக் காட்டி, நான் எவ்வளவு நேரம் பேசினாலும் நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றார்.

ஆனால் வைகோ பேசியபோது மின்சாரம் பாய்ந்தது போன்ற துடிப்பைப் பெற்றனர் தொண்டர்கள் - அதிமுகவினர் உள்பட.

அது மட்டுமா..? அதிமுக போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் - மதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் கூட அதிக நேரத்தை செலவிடாமல் - சூறாவளியாக சுழன்று பிரசாரம் செய்தார் வைகோ. அதை நிச்சயம் அதிமுக தொண்டர்கள் மறக்க மாட்டார்கள்.

அதிமுகவைப் போலவே மதிமுகவுக்கும் கணிசமான தொண்டர்கள் உள்ள கொங்கு மண்டலத்தில் வைகோ செய்த பிரசாரமும், காங்கிரஸாரை கடுமையாக சாடி அவர் பேசிய பேச்சுக்களும் அதிமுக கூட்டணிக்கு பெரும் வெற்றியைத் தேடி தந்தன. இதை நிச்சயம் அதிமுகவினர் மறந்திருக்க மாட்டார்கள்.

அப்படிப்பட்ட பிரசார பீரங்கியை இன்று தூக்கிப் போட்டு விட்டார் ஜெயலலிதா. பீரங்கியே இல்லாமல், வன்னியர்கள், முக்குலத்தோர், நாடார் சமுதாயத்தினர், இஸ்லாமியர்கள் என்று 'பெரும் பெரும் ஆயுதங்களுடன்' வலிமையாக இருக்கும் 'எதிரி'யான திமுகவை சந்திக்க போர்க்களம் புகுந்துள்ளார் ஜெயலலிதா. கிட்டத்தட்ட ஜெயலலிதா இப்போது நிராயுதபாணி நிலையில்தான் உள்ளார். அவருக்காக பேசக் கூடிய, பிரசாரம் செய்யக் கூடிய தலைவர்கள் அதிமுக கூட்டணியில் இல்லை என்றே சொல்லலாம்.

இதற்குப் பல காரணங்களைக் காட்டலாம்:

1. தேமுதிக கூட்டணியில் இடம் பெற்றாலும் கூட நிச்சயம் அதிமுகவினருக்காக அவர்கள் உயிரைக் கொடுத்தோ, வியர்வை சிந்தியோ, கடுமையாக உழைத்தோ பிரசாரம் செய்யப் போவதில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை. தங்களது வெற்றிக்கும், தங்களது அங்கீகாரத்திற்காகவும் மட்டுமே தேமுதிகவினர் பாடுபடுவார்கள் என்பதை 'ப்ரீகேஜி' படிக்கும் குழந்தை கூட சொல்லி விடும்.

தனக்குக்கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பான இதைப் பயன்படுத்தி தனக்கும், தனது கட்சிக்கும் நல்ல செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ளவே விஜயகாந்த் முயல்வாரே தவிர வைகோவைப் போல அதிமுகவுக்காக கடுமையாக உழைக்க நிச்சயம் அவர் முன்வர மாட்டார் என்பதே உண்மை.

2. இடதுசாரி கட்சிகளுக்கு குறிப்பிட்ட ஓட்டு வங்கி மட்டுமே உள்ளது. அங்கு திறமையாக பேசக் கூடிய, மக்களைக் கவரக் கூடிய தலைவர்கள் யாரும் இல்லை.

3. நடிகர் சரத்குமார் நிச்சயம் பிரசார பீரங்கியாக முடியாது. அவரே இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுகிறார். ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் பலத்தை மட்டுமே அவர் நம்பி நிற்கிறார்.

4. மற்ற கட்சிகளும் கூட அதிமுக முதுகில் ஓசி சவாரி செய்து இலக்கை அடையும் முயற்சியில்தான் உள்ளன.

இப்படி எல்லாப் பக்கமும் அதிமுகவுக்கு உண்மையான ஆதரவு காட்டக்கூடியவர்கள் யாருமே இல்லை என்ற நிலை. முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் பேச்சை மட்டுமே நம்பி அதிமுகவினர் களம் காண வேண்டிய நிலை.

கடந்த லோக்சபா தேர்தலின்போது திமுகவினர் செய்த முறைகேடுகளை அதிமுகவினரை விட படு உன்னிப்பாக கண்காணித்து அவ்வப்போது தேர்தல் ஆணையத்தைத் தொடர்பு கொண்டு புகார்களைப் பறக்க விட்டும், தேவைப்படும்போது மறியல் போன்றவற்றில் ஈடுபட்டும் தூள் கிளப்பியவர் வைகோ மட்டுமே. கிட்டத்தட்ட கூட்டணியின் தலைவர் போலவே அவரது செயல்பாடுகள் இருந்தன. அதாவது தலைமை என்றால் இப்படித்தான் எல்லாவற்றிலும் லீட் செய்து, அனைவரையும் அரவணைத்து, தேவைப்படும் போது போர்க்கொடி உயர்த்தி, புரட்சி செய்து பட்டையைக் கிளப்ப வேண்டும் என்பதை நிரூபிப்பது போல இருந்தது வைகோவின் அரசியல் பணிகள்.

இன்று அத்தனையையும் இழந்து நிற்கிறார் ஜெயலலிதா. வைகோ என்ற பெரும் துணையை அவர் இழந்திருக்கிறார். நிச்சயம் இதுதேர்தலில் அதிமுகவுக்கு பல நஷ்டங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆணித்தரமாக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை, இப்படி 'அந்தல் சிந்தலாக' ஜெயலலிதா மாற்றியது ஏன் என்பதுதான் ஒருவருக்குமே புரியவில்லை. விஜயகாந்த்தை மட்டும் நம்பி இந்த சூதாட்டத்தில் அவர் இறங்கியிருப்பாரேயானால் அதை விட அதி பயங்கரமான 'ரிஸ்க்' வேறு எதுவும் இல்லை என்பதே இப்போதைக்கு அனைவரின் கருத்துமாகும்.

English summary
ADMK is set to feel the heat in Assembly polls. Vaiko's loss may bring more damages to ADMK, than Jayalalitha. In 2009 LS polls, Vaiko was in full swing to garner the votes for ADMK alliance. But now without Vaiko, ADMK looks very weak.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X