• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், தன்னிச்சையான நடவடிக்கைகள்-கருணாநிதி கண்டனம்

|

Karunanidhi
சென்னை: தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக அதிகாரிகளை மாற்றுகிறது. அரசிடம் ஆலோசனை கேட்பதில்லை. கெடுபிடியான உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

14-வது சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான பணிகளில் தமிழகத்திலே உள்ள அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்வதும் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 13-ந் தேதியன்று தமிழ்நாட்டு மக்கள், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தங்களை ஆள வேண்டியவர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க தங்களது வாக்குகளை அளிக்கவிருக்கிறார்கள்.

இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வாக்குப்பதிவு முடிவுற்ற இரண்டொரு நாட்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத ஒரு முடிவாக ஏப்ரல் 13-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற போதிலும், மே 13-ம் நாள்தான் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

எதற்காக இந்த இடைவெளி? ஏன் ஒரு மாதத்திற்கு முன்பாகவே அரசியல் கட்சிகளுக்கு நேரம் கொடுக்காமலே அவசரம் அவசரமாக தேர்தலை நடத்துகிறார்கள்? எல்லாம் தேர்தல் ஆணையத்தின் முடிவு. அவர்களுக்கு எதிராக யாரும் வாய் திறக்கக்கூடாது. அரசியல் கட்சிகள் சார்பில் வாக்குப்பதிவு செய்யும் நாளை சற்று தள்ளிவைக்க வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது தேர்தல் ஆணையம் அதனை ஏற்க முடியாதென்று தள்ளிவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்று சொல்லி மற்றும் ஒரு கொடுமையும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிலே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் யாரும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பணம் எடுத்துச் செல்லக்கூடாது. இதைப்பற்றி அன்றாடம் ஏடுகள் ஒவ்வொரு செய்தியைத் தாங்கி வெளிவருகின்றன. ஏன், மாலை இதழ் ஒன்றில் வந்த செய்தியிலே கூட- தேர்தல் கமிஷன் கெடுபிடி- வாகன சோதனையில் காமெடி'' காட்சிகள்- ஆடு, கொலுசுகளைக்கூட விடவில்லை'' என்று கொட்டை எழுத்துகளில் செய்திகள் வந்துள்ளன.

அந்த செய்தியில் தேர்தல் என்றாலே தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் மாறிமாறி கார்களில் வந்து பிரசாரம் செய்தபடி இருப்பார்கள். எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கியில் பிரசார சத்தம் காதைப் பிளந்த வண்ணம் இருக்கும். அரசு சுவர்கள், தனியார் சுவர்களில் சின்னங்கள் தேர்தல் வாசகங்கள் எழுத முன்கூட்டியே இடம்பிடித்து விடுவார்கள். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் பெயர் எழுதுவது, வாசகம் எழுதுவது மும்முரமாக இருக்கும். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே திருவிழா போல ஊரெங்கும் களைகட்டிவிடும்.

ஆனால் இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவுகளைப் போட்டுள்ளது. சுவர்களில் வரையப்பட்டிருந்த சின்னம், தலைவர்களது படங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. சென்னை நகரில் ஒரு இடத்தில் கூட சின்னத்தைப் பார்க்க முடியவில்லை. சிலைகளைக்கூட விட்டுவைக்கவில்லை.

அண்ணா, காமராஜர், ராஜீவ்காந்தி, எம்.ஜி.ஆர். சிலைகளையும் தேர்தல் முடியும் வரை மூடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சிலைகளை துணியால் சுற்றி மூடி வைத்துள்ளனர். கொடி தோரணங்களும் கண்ணில் படவில்லை. பொது இடங்களில் இருந்த கட்சி கொடி கம்பங்களும், கொடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன. போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்களும் எங்கும் காணப்படவில்லை. தேர்தலுக்கு முன்பே தொடங்கும் ஆரவாரம் தம்பட்டம் எதுவும் இன்றி களை இழந்த கோவில் விழா போல் காட்சி அளிக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக வாகன சோதனை; வியாபாரிகளையும், பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் முடக்கிப்போட்டு விட்டது. நகைக்கடைக்காரர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் அன்றாடம் வசூல் ஆகும் வியாபார பணத்தை வங்கியில் கட்ட எடுத்துச் செல்வார்கள். இப்போது அவர்கள் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்ல முடியவில்லை. வாகன சோதனையில் சிக்கினால் அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுகிறார்கள். இதுபோல் நிலம் வாங்க- விற்க எடுத்துச் செல்லும் பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை நடந்த சோதனையில் எந்த அரசியல் பிரமுகரிடமும் பணம் சிக்கவில்லை என்பதுதான் வேடிக்கை'' என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மாலை இதழிலேயே இவ்வாறு செய்தி வந்திருக்கிறது என்றால் இவை அனைத்தும் உண்மை. தேர்தல் ஆணையத்தின் பெயரால் என்னென்ன நடைபெறுகின்றன என்பதைத் தான் அந்த இதழ் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் வாகன சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 29-ந் தேதியன்று கடை அடைப்பு நடத்த வணிகர்கள் முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிக்கை கொடுத்திருக்கிறார்.

அவர் கொடுத்துள்ள அறிக்கையில் தேர்தல் ஆணைய உயரதிகாரிகள் 22-ந் தேதிக்குள் அவர்களை அழைத்துப்பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமென்றும், இல்லாவிட்டால் 24-ந் தேதி வணிகர் சங்க பிரதிநிதிகள் ஒன்று கூடி சென்னையில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றும், அதன் பின்னரும் இந்த பிரச்சினை நீடித்தால் 29-ந் தேதி கடையடைப்பு நடத்துவார்கள் என்றும், அதற்கும் பலன் இல்லாவிட்டால் வணிகத்துறையினர் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதிலே இன்னும் வேடிக்கை! வாகன சோதனையில் ஆடு, கோழிகளைக் கூட விட்டுவைக்கவில்லை. வாக்காளர்களுக்கு பிரியாணி போடுவதற்காக மொத்தமாக கொண்டு போவதாக கற்பனை செய்து கொண்டு ஆடுகளையும், கோழிகளையும் ஏன் பீடிகளையும் கூட பறிமுதல் செய்துள்ளார்கள். விற்பனைக்காக எடுத்துச்சென்ற கொலுசுகளையும், நகைகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். மதுரையில் ஒரு அரசியல் கட்சியினரின் வெங்காய கிடங்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் இந்த கெடுபிடிகளை எதிர்த்து தேனி மாவட்டம், ஜக்கம்பட்டியைச் சேர்ந்த தில்லை நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றையே தாக்கல் செய்துள்ளார்.

அதில் தேசிய நெடுஞ்சாலைகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாகனங்களைச் சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர், இதுபோல பணத்தை பறிமுதல் செய்ய தேர்தல் கமிஷனுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை, திருமணத்துக்கு நகை வாங்கி வந்தாலும் அதையும் பறிமுதல் செய்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளிவைத்திருக்கிறார்கள். விசாரணை தொடருகிறது.

தேர்தல் ஆணையம் தனது செயல்பாட்டினை இந்த அளவோடு நிறுத்திக்கொள்ளவில்லை. இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு போலீஸ் டி.ஜி.பி. முதல் மாவட்ட கலெக்டர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் பல பேரை தேர்தல் கமிஷன் மாற்றம் செய்து ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேர்மையாக பணிபுரிந்து கொண்டிருந்த பல அதிகாரிகளை அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதிலே உண்மை இருக்கிறதா என்பதைப் பற்றிக்கூட விசாரிக்காமல்- தமிழக அரசிடம் கேட்காமல்கூட தன்னிச்சையாக மாற்றி ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். அதிகாரிகள் அளவிலே மட்டுமல்ல, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலே சாதாரணமாக பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளைக்கூட மாறுதல் செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் இந்த முறை இந்த அளவிற்கு அதிக கெடுபிடிகள் செய்ய என்ன காரணம்? தேர்தல் ஆணையம் கெடுபிடியில் ஈடுபட்டிருப்பதாக நாம் குற்றம்சாட்டவில்லை. நாளேடுகள் பல அதைப்பற்றி அன்றாடம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

அதைப்பற்றி தேர்தல் ஆணையம் ஏதாவது கவலைப்படுகிறதா? மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம் - கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது?'' என்று தேவர் திருமகன் அடிக்கடி கூறிய பழமொழிதான் நினைவிற்கு வருகிறது! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
CM Karunanidhi has criticised EC for its raids. In a statement he said, EC's raids have hit the people and the political parties. EC's sudden transfers of DGP and other police officials and Collectors have raised many questions, he added.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more