For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபை தேர்தல்: ஓய்ந்தது பிரசாரம்

Google Oneindia Tamil News

Tamilnadu Map
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் கடந்த ஒரு மாதமாக மிக விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்று மாலை 5 மணியுடன் இந்தப் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி, இன்று தான் போட்டியிடும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அத்துடன் தனது பிரச்சாரத்தை முடித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு நிறைவு செய்தார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து அதனை நிறைவு செய்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முடித்தார்.

இன்று மாலை 5 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக் கூடாது. மைக், ஒலிபெருக்கி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தக் கூடாது. அதே நேரத்தில் வீடு வீடாக அமைதியான முறையில் சென்று வாக்கு சேகரிக்கலாம்.

நாளை பிரச்சாரத்துக்கு ஓய்வு நாள் ஆகும். வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுவார்கள். நாளை மறுதினமான 13ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.

அனல் பறக்க நடந்தது இந்த சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம். திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. இது தவிர பாஜக, இந்திய ஜனநாயகக் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தனியாக போட்டியிடுகின்றன. ஆனால் முக்கியப் போட்டி திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையில்தான் நிலவுகிறது.

முதல்வர் கருணாநிதி 12வது முறையாக வெற்றிக்குத் தயாராகி வருகிறார். திருவாரூர் தொகுதியில் அவர் இம்முறை போட்டியிடுகிறார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியத்தில் நிற்கிறார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியில், பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் ஆகியவை முக்கியக் கட்சிகளாக உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, இடதுசாரிகள் முக்கியக் கட்சிகளாக உள்ளன.

வைகோவின் முழக்கம் மிஸ்ஸிங்:

இந்தத் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய 'விஷயமாக' வைகோ திகழ்கிறார். அவரது முழக்கம் கேட்காமலேயே இந்தத் தேர்தல் நடக்கவுள்ளது. அவரது கனீர் குரலால் நடுங்கும் வாய்ப்பை இந்த முறை அரசியல் மேடைகள் இழந்து விட்டன.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்று கேவலப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டு விட்டார் வைகோ. இந்த விரக்தியில், அவர் தேர்தலையே புறக்கணித்து விட்டார். இருப்பினும் பெரும்பாலான மதிமுகவினர் யாருக்கு வாக்களிக்க உள்ளனர் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
வரலாறு காணாத கட்டுப்பாடுகள்:

இந்த தேர்தலுக்கான பிரசாரத்தின்போது தேர்தல் ஆணையம் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் கெடுபிடிகளை அமல்படுத்தியது. போஸ்டர் ஒட்டக் கூடாது, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். இதனால் திருவிழா போல வழக்கமாக களை கட்டியிருக்கும் தேர்தல் பிரசாரம் இந்த முறை மயானக் காட்சி அளித்தது.

வடிவேலுவின் வெடிப் பேச்சு:

அதேசமயம், பிரசாரத்தில் சூடுக்கு குறைவே இல்லை. திமுக சார்பி்ல் பிரசாரம் மேற்கொண்ட காமெடி நடிகர் வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தனிப்பட்ட முறையில் குறி வைத்து லூஸு, அது இது, கருப்பு எம்.ஜி.ஆர், நான்சென்ஸ் என்று தாறுமாறாக தாக்கிப் பேசியது சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் ஹைலைட்டாகும்.

முதல்வர் கருணாநிதி பேசினால் கூடுவதைப் போன்ற கூட்டத்தைக் கூட்டினார் வடிவேலு தனது பேச்சால். அரசியல்ரீதியாக அநாகரீகமானதாக அவரது பேச்சு இருந்தாலும் தொய்ந்து போயிருந்த திமுகவினருக்கு உற்சாகம் தரும் டானிக்காக அவரது பேச்சு அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல நடிகை குஷ்பு, இயக்குநர் பாக்யராஜ், வாகை சந்திரசேகர் என திரையுலகினர் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தனர்.

அதிமுக தரப்பிலும் ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் பிரசாரம் மேற்கொண்டனர். நடிகர்கள் ராதாரவி, செந்தில், ஆனந்தராஜ், பொன்னம்பலம், நடிகை சந்தியா என பலரும் வடிவேலுவின் பேச்சுக்கு கவுண்டர் கொடுத்தனர்.

தேமுதிக சார்பில் பெரிய அளவிலான நடிகர், நடிகையர் யாரும் பிரசாரம் செய்யவில்லை. இருப்பினும் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர்.

விஜயகாந்த் பிரசாரத்தின்போது தனது கட்சி வேட்பாளரையே அடித்தது, சின்னத்தை மாற்றிக் கூறியது, வேட்பாளர் பெயரை மாற்றிக் கூறியது, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் என்று சொல்வதற்குப் பதில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் என்று கூறியது, அதிமுக கொடிகளை அகற்றச் சொன்னது ஆகியவற்றை திமுக தரப்பு டிவிகள் பெரும் பிரச்சினையாக மாற்றி அதைத் திரும்பத் திரும்ப காட்டி அதிமுக-தேமுதிகவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தின.

தேசியத் தலைவர்கள் குவியல்:

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் பல தேசியத் தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்தனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், அத்வானி, வெங்கையா நாயுடு, நரேந்திர மோடி, பிரகாஷ் காரத், சீதாராம் எச்சூரி, பிருந்தா காரத், பர்தான், மாயாவதி, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாக் என பெரும் தேசியத் தலைவர்கள் படையே தமிழகத்தை முற்றுகையிட்டு தத்தமது கட்சிகள், கூட்டணிகளுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இத்தேர்தல் பிரச்சராத்தில் அதிமுக தரப்பில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஈழத் தமிழர் பிரச்சினை உள்ளிட்டவை முக்கியப் பிரச்சினைகளாக எடுத்து வைத்துப் பிரசாரம் செய்தனர்.

திமுக தரப்பில் அரசு செய்த சாதனைகள், அதிமுக அரசில் மக்கள் பட்ட வேதனைகள் உள்ளிட்டவற்றை சுட்டிக் காட்டிப் பிரசாரம் நடந்தது.

பெரிய அளவில் வன்முறைகள் எதுவும் இல்லாமல் இத்தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருவது காவல்துறைக்கும், தேர்தல் ஆணையத்திற்கும், பொதுமக்களுக்கும் நிம்மதி தருவதாக உள்ளது.

நாளைய ஓய்வுக்குப் பின்னர் 13ம் தேதி புதிய பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கத் தயாராகி வருகின்றனர்.

English summary
The hustle and bustle of the hectic but lacklustre campaign to the April 13 elections to the Tamil Nadu legislative assembly, which was marred by personal attacks, has reached the home stretch, with political parties vying with each other in making last-minute efforts to woo the voters. Electioneering draws to a close at 5pm today for the single phase polls to elect the 14th Tamil Nadu Assembly. Octogenarian Chief Minister M Karunanidhi, seeking a record 12th term and his bete noire J Jayalalithaa, heading the ruling DMK-led and the opposition AIADMK-led fronts, respectively, are the main contenders in the polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X