For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று மாலை 5 மணி முதல் தேர்தல் முடியும் வரை கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து இன்று மாலை 5 மணி முதல் தேர்தல் முடியும் வரை கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேர்தல் தலைமை அதிகாரி பிரவீண் குமார் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது. நாளை மறுநாள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே, இன்று மாலை 5 மணி முதல் தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வருமாறு,

தேர்தலையொட்டி யாரும் பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்தவும் கூடாது, அவற்றில் கலந்து கொள்ளவும் கூடாது. தேர்தல் தொடர்பான விஷயங்களை விளம்பரம் செய்யவோ, தொலைக்காட்சியில் ஒளிபரப்பவோ கூடாது. இதில் தேர்தல் தொடர்பான அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் அடக்கம்.

வாக்காளர்களை கவரும் வண்ணம் இசை நிகழ்ச்சி, நாடகம், பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவோ, ஏற்பாடு செய்யவோ கூடாது. இதனை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தேர்தல் பணி புரிவதற்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்களும், தொகுதியில் வாக்காளர்கள் அல்லாதவர்களும் இன்று மாலை 5 மணிக்கு பிறகு அத்தொகுதியைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.

திருமண மண்டபம், சமூகநலக் கூடம், விடுதிகள், விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் வெளியாட்கள் யாராவது தங்கியிருக்கிறார்களா என்று சோதனை செய்து தொகுதிக்குள் வெளியாட்கள் இல்லை என்பது உறுதி செய்யப்படும். தொகுதியில் இல்லாத வெளியாட்களின் வாகன போக்குவரத்தை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு தொகுதி எல்லையிலும் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர்களின் பிரசாரத்திற்காக அளிக்கப்பட்ட வாகன அனுமதி இன்று மாலை 5 மணிக்கு பிறகு செல்லாததாகிவிடும். தேர்தல் நாளில் வேட்பாளர்கள் பயன்படுத்துவதற்காக, அவரது சொந்த உபயோகத்திற்கு ஒரு வாகன அனுமதியும், தேர்தல் ஏஜெண்டுகளுக்கு ஒரு வாகன அனுமதியும், கட்சி தொண்டர்கள் அல்லது ஆதரவாளர்களுக்கு ஒரு வாகன அனுமதியும் தனித்தனியாக வழங்கப்படும்.

தேர்தல் நாளில் அரசியல் காரணங்களுக்காக மேற்கண்ட அனுமதி பெற்ற 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்தலாம். தேர்தல் பிரசாரத்தின்போது வழங்கப்பட்ட வாகன அனுமதி, தேர்தல் நாளில் செல்லுபடியாகாது. அதே நேரத்தில் பொது மக்கள் தங்களது சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தும் தனியார் வாகனங்களுக்கு தடை கிடையாது.

தேர்தல் நாளன்று வாக்காளர்களை வாகனங்களின் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்வதும், ஓட்டு போட்டவுடன் மீண்டும் கொண்டுபோய் வீட்டில் விடுவதும் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 133-ன்படி தண்டனைக்குரிய ஊழல் குற்றமாகும்.

வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ இரண்டு நபர்களுடன் தற்காலிக அலுவலகத்தை அமைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த இருவரும் அங்கு தேவையில்லாமல் கூட்டம் கூட்ட அனுமதி கிடையாது. இங்கிருந்து தின்பண்டங்கள் எதுவும் வினியோகிக்கக் கூடாது. இந்த அலுவலகத்தில் இருக்கும் இருவரும் அந்த வாக்குச்சாவடியைச் சேர்ந்த வாக்காளர்களாக இருக்க வேண்டும். சரிபார்த்தலுக்காக இருவரும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். குற்ற பின்னணி இருப்பவர்கள் இந்த அலுவலகங்களில் இருக்க அனுமதி கிடையாது.

இன்று மாலை 5 மணியில் இருந்து வரும் 13ம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிடவும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிற்கு கடந்த 4ம் தேதியில் இருந்து மே மாதம் 10ம் தேதி வரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் சில வாக்குச்சாவடி அதிகாரிகள் தேர்தல் முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள குளோஸ் பட்டனை' அழுத்தவில்லை. அதனால் அந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று புகார் கூறப்பட்டதை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

அதன்படி வாக்குச்சாவடி அதிகாரிகள் தேர்தல் முடிந்ததும் அனைத்து தேர்தல் ஏஜெண்டுகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள குளோஸ் பட்டனை' அழுத்திவிட்டு பின்னர் மூடிவிட வேண்டும். அதுபோல ஓட்டுப்பதிவின்போது வாக்காளர்கள் அனைவரும் கையெழுத்திடும் 17 ஏ பதிவேட்டில், தேர்தல் முடிந்ததும் கடைசி கையெழுத்திற்கு கீழே கோடிட்டு, கடைசி பதிவின் வரிசை எண்ணைக் குறிப்பிட்டு அனைத்து ஏஜெண்டுகளிடமும் கையெழுத்து வாங்க வேண்டும். அதுபோல தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை 17 சி படிவத்தில் எழுதி, தேர்தல் ஏஜெண்டுகளிடம் கையெழுத்து வாங்க வேண்டும். அதன் நகலை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

இன்று முதல் தேர்தல் பணியில் 4 ஆயிரம் பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபடுவர். ஏற்கனவே 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நிலை ராணுவத்தினர் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்தன்று சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட இன்று மாலை 5 மணி முதல் வரும் 13-ம் தோதி மாலை 5 மணி வரை அனைத்து டாஸ்மாக் மற்றும் தனியார் மதுபான பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தெரிய வந்தாலோ, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினாலோ தேர்தலை ஒத்தி வைக்க தயங்க மாட்டோம். தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 16 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தான் ஓட்டுப்பதிவு நடைபெறும்.

ஏற்கனவே மின்னணு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் ஆகியவை பொருத்தப்பட்டு தயாராக உள்ளன. இன்று மாலை முதல் இந்த எந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் பணிகளில் சுமார் 2 லட்சம்
பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு எந்தெந்த வாக்குச்சாவடிகளில் பணி என்பது இன்று மாலை குலுக்கல் முறையில் முடிவு செய்யப்படும்.

தேர்தல் பணியாளர்களுக்கு இந்த விவரம் நாளை தெரிவிக்கப்படும். அவர்கள் நாளை மாலையே அவரவர் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஆயத்தப்பணிகளை மேற்கொள்வார்கள். மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் பெரும்பாலானவை பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய தொகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்படும்.

மேலும், வாக்குப்பதிவும் வெப்-காமிரா மூலம் கண்காணிக்கப்படும். இந்த முறை வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டியோ அல்லது புகைப்படத்துடன் அச்சிட்டு கொடுக்கப்பட்டுள்ள பூத் சிலிப்பை
காட்டியோ வாக்களிக்கலாம்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் இடங்களில் அரசியல் கட்சிகளின் சார்பில்

பிரதிநிதிகள் கண்காணிப்புக்காக தங்கி இருக்க அனுமதிக்கப்படும். வாக்குப்பதிவு முடிந்து சரியாக ஒரு மாதம் கழித்து வரும் மே மாதம் 13-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். மே 13-ம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும். 11 மணிக்குள் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெரிந்துவிடும்.

English summary
Tamil Nadu chief electoral officer Praveen Kumar have released a list of rules to be followed by the political parties from today 5 pm till 13th 5 pm. Election campaign comes to an end at 5 pm today and assembly election is on day after tomorrow from 8 am to 5pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X