சேலத்தில் திமுக பிரமுகர் கழுத்தை அறுத்துக் கொலை
சேலம்: சேலத்தில் திமுக கிளை அவைத் தலைவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
சேலம் அம்மாப்பேட்டை அருகே உள்ள குமரகிரி மலை அடிவாரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (35). இவர் சிவன்கரடு தி.மு.க. கிளை அவைத் தலைவராக இருந்து வந்தார்.
நேற்றிரவு இவரது மனைவி தனது மகனுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் இன்று அதிகாலை சீனிவாசன் தனது வீட்டு வாசலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அப்போது வீட்டில் அவரது மகள் இளவரசி (16) மட்டுமே இருந்தார்.
தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவில் ஒரு கும்பல் வீட்டுக் கதவைத் தட்டி அவரை வெளியே வரவைத்து, கொலை செய்துவிட்டு, கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
தேர்தல் தகராறினால் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு தனிப்பட்ட காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உடல் கிடந்த இடத்திலிருந்து சூரிக் கத்தியை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அவருக்கு லட்சுமி (33) என்ற மனைவியும், இளவரசி (16) என்ற மகளும், வசந்தகுமார் (14) என்ற மகனும் உள்ளனர்.
தந்தை கதவைத் திறந்து வெளியே சென்ற சத்தமோ, அவர் கொலையான போது போட்ட அலறல் சத்தமோ தனக்குக் கேட்கவில்லை என்று மகள் இளவரசி கூறியுள்ளார்.