For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பால் விலை, பஸ் கட்டணத்தை நாங்கள் உயர்த்த சொல்லவில்லை-ஜெ சொல்வதை மறுக்கும் மார்க். கம்யூ

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: பால் கட்டணம், பேருந்து கட்டணங்களை உயர்த்தி தமிழகத்தின் நிதி நிலையை சரி செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதாவிடம் நாங்கள் சொல்லவே இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறுத்துள்ளது.

பால் விலை உயர்வு மற்றும் பஸ் கட்டண உயர்வு விஷயத்தில் தேமுதிக மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,

அதிமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்து, தற்போது தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகளின் தலைவர்களில் பெரும்பாலானோர், தேர்தலுக்கு முன்னால், என்னைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினர்.

மனசாட்சியிடம் விடுகிறேன்-ஜெ:

அப்போது, தமிழ்நாட்டின் மோசமான நிதிநிலை குறித்தும், திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்தும் என்னிடம் கவலை தெரிவித்தனர். இவற்றைச் சரி செய்ய கடினமான முடிவுகளை, தைரியமாக, என்னால்தான் எடுக்க முடியும் என்றும் கூறினர். ஆனால் இப்போது கண்டன அறிக்கைகளை வெளியிடுகின்றனர். இது சரியான செயல்தானா என்பதை அவர்கள் மனசாட்சியிடமே விட்டு விடுகிறேன்.

முன்பு தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து கவலை தெரிவித்தவர்கள், தற்போது கண்டனம் தெரிவிப்பது இரட்டை வேடம் போடுவதாக உள்ளது. அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு கண்டனம் தெரிவிப்பது சரிதானா என்பதை அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அரசியல் ஆதாயம் தேட முயற்சி:

இதனைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்து அரசியல் ஆதாயத்திற்காக அறிக்கை விடுபவர்களின் பசப்பு வார்த்தைகளில் மயங்காமல், அவர்கள் விரிக்கும் மாய வலையில் விழாமல், இந்த அரசுக்கு தங்களது முழு ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று என்று கூறியிருந்தார்.

இதன்மூலம் அதிமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விஜய்காந்தின் தேமுதிக ஆகியவை முன்பு அவரிடம் ஒரு மாதிரி பேசிவிட்டு இப்போது, விலை உயர்வுக்கு எதிராக அறிக்கை விட்டு வருவதை முதல்வர் ஜெயலலிதா தெளிவாக புட்டுப் புட்டு வைத்திருந்தார்.

''அய்யோ, நாங்க அப்படியா சொன்னோம்''-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?:

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அமைச்சரவையின் முடிவாக, கடந்த வியாழன்று தமிழக முதல்வர் பால், பேருந்து கட்டணங்களை உயர்த்தி அறிவித்ததோடு மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார ஆணையத்துக்கு பரிந்துரையும் செய்துள்ளார். மாநில அரசின் இந்த கட்டண உயர்வை அனைத்துப் பகுதி மக்களும் எதிர்த்து வருகின்றனர். அனைத்துக் கட்சிகளும் இந்தக் கட்டண உயர்வை கண்டித்தன.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என மக்கள் எண்ணினார்கள். ஆனால் வாக்களித்த மக்கள் மீது இப்போது அதிமுக அரசு கட்டண உயர்வு என்ற பெருஞ்சுமையை ஏற்றி உள்ளது.

20.11.2011 அன்று தமிழக முதல்வர் அவர்களின் பத்திரிகை செய்தியில் கூறியுள்ளது போல், மக்களுடைய அத்தியாவசியத் தேவையான பால், பேருந்து, மற்றும் மின்கட்டணத்தை உயர்த்தலாம் என்ற ஆலோசனையை அதிமுகவிற்கு ஒருபோதும் மார்க்சிஸ்ட் கட்சி வழங்கவில்லை.

தேர்தல் முடிவு வெளியான உடன் 15.5.2011 அன்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் என கட்சியின் மாநில செயற்குழு முடிவெடுத்து அறிவித்தது. இன்று மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றியிருக்கிற பின்னணியில், இந்த பால்விலை உயர்வையும், பேருந்து கட்டண உயர்வையும் திரும்ப பெற வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது; உத்தேச மின் கட்டண உயர்வையும் நிறுத்துமாறு கோருகிறது.

அனைத்துக் கட்சியினரின் கண்டனத்தைக் கண்டு கொள்ளாமலும், பொது மக்களின் ஏகோபித்த கோபத்தைப் பொருட்படுத்தாமலும் அதிமுக அரசு கட்டண உயர்வுகளை அமல்படுத்தியுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மத்திய அரசினுடைய தவறான கொள்கையால் ஏற்பட்ட விலைவாசி உயர்வால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் மீது மேலும் தமிழக அரசு பெரும் பாரத்தை சுமத்தியுள்ளது. உயர்த்திய கட்டண உயர்வுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மாநில அரசை வலியுறுத்தி 28.11.2011 அன்று மாநில அரசு அலுவலகங்கள் முன்பு தமிழகமெங்கும் மறியல் போராட்டம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
The state committee of the Communist Party of India-Marxist (CPM) denies giving advice to CM Jayalalithaa to hike milk price and bus fares.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X