For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3,000 புதிய பஸ்கள்: டிஜிட்டல் டிக்கெட்டுகள்-பட்ஜெட்டில் அறிவிப்பு!

By Chakra
Google Oneindia Tamil News

TN Govt Bus
சென்னை: ரூ. 548 கோடி செலவில் 2012-2013ம் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இன்று சட்டசபையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

பேருந்து கட்டண உயர்வால் பேருந்து போக்குவரத்து துறை முன்னேற்றம் அடைந்து வருகிறது.

ரூ. 548 கோடி செலவில் 2012-2013ம் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக இந்த அரசு ரூ. 150 கோடியை பங்கு மூலதன உதவியாகவும், ரூ. 150 கோடியை கடனாகவும் வழங்கும்.

மாநில போக்குவரத்து நிறுவனங்களிடம் உள்ள பேருந்து கட்டும் பணிக்கான கட்டமைப்புகளை முழுமையாக பயன்படுத்தும் வகையில், புதிய பேருந்துகளை உரிய கால இடைவெளியில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிமன்றங்களில் பிணையில் உள்ள 219 பேருந்துகளை மீட்பதற்காக, இந்த நிறுவனங்களுக்குத் தேவையான நிதியுதவியை ஒரு முறை சிறப்பு நிதியுதவியாக அரசு வழங்கும்.

மேலும் பேருந்து நடத்துனர்களின் பணிச் சுமையைக் குறைக்கவும், பயணிகள் எளிதாக பயணச் சீட்டுகளை வாங்கவும், புவி நிலைக் காட்டி (GPS) வசதி கொண்ட கையடக்க இயந்திரங்களை பயன்படுத்தி மின்னணு பயணச் சீட்டு வழங்கும் முறை அனைத்து அரசு பேருந்துகளிலும் 2012-2013ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்.

சாலை பராமரிப்புக்கு ரூ.1,180 கோடி ஒதுக்கீடு:

வரும் நிதியாண்டில் ரூ. 740 கோடி செலவில் 1,500 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அகலப்படுத்தப்படும். ரூ. 257 கோடி செலவில், தூத்துக்குடி- கன்னியாகுமரி சாலையை மேம்படுத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

இதுதவிர 2,477 கி.மீ. நீளமுற்ற நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் நிதியுதவி பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 5,651.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் சாலைப் பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் ரூ.1,180.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்குக் கடற்கரையோரத்தில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வரும் காட்டுப்பள்ளி துறைமுகம், கப்பல் கட்டும் தொழில் வளர உதவுவதோடு, திரவ இயற்கை வாயு இறக்குமதிக்கும் உதவும். ரூ. 380 கோடி செலவில் அரசு-தனியார் ஒத்துழைப்பின் மூலம் நாகப்பட்டினம் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலூர் துறைமுக மேம்பாட்டிற்கான பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது.
ரூ.100 கோடி செலவில் பிளாஸ்டிக் சாலைகள்:

சிக்கனமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த சாலை அமைக்கும் முறை மீண்டும் உயிரூட்டப்பட்டு, 2011-2012ம் ஆண்டில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டதில், 446.5 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிதியின் கீழ் 2012-2013ம் ஆண்டு பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணிக்கு உள்ள பெரும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, வரும் நிதியாண்டில் இந்த நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
TN to buy 3,000 new buses, to issue digital tickets with GPS input
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X