For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடும்பத்தாரின் பதவிக்காக மட்டுமே மத்திய அரசுடன் கருணாநிதி பேசுவார், கரன்ட் கேட்க மாட்டார்: பழனிசாமி

By Siva
Google Oneindia Tamil News

சேலம்: திமுக தலைவர் கருணாநிதி தனது குடும்பத்தாரின் பதவிக்காக மட்டுமே மத்திய அரசுடன் பேசுவார் என்று அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தம்மம்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தம்மம்பட்டி பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்த கூட்டத்தில் கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் ராஜா வரவேற்புரையாற்றினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர். இளங்கோவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சதீஸ்குமார், யூனியன் சேர்மன்கள் கெங்கவல்லி மருதமுத்து, ஆத்தூர் சின்னதம்பி, தலைவாசல் ரஷியா கவுதம், ஆத்தூர் நகரமன்ற தலைவி உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமைமைக் கழக பேச்சாளர் இடிமுரசு ரவி பட்ஜெட் குறி்த்து விரிவாகப் பேசினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது,

திமுக தலைவர் கருணாநிதி தமிழக மக்களுக்காக மத்திய அரசிடம் பேசமாட்டார். தனது குடும்பத்தாரின் பதவிக்காக மட்டுமே பேசுவார். மத்தியில் கூட்டணியில் உள்ள அவர் தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கேட்டு நேரில் சென்று பேச வேண்டியது தானே. பிற மாநிலங்களுக்கெல்லாம் கூடுதல் நிதி வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகம் நிதி கேட்டால் மட்டும் வழங்குவதில்லை. இவற்றையெல்லாம் சரி செய்கிற வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வென்று முதல்வர் ஜெயலலிதா விரல் காட்டுபவர் தான் பிரமதராக முடியும்.

அப்படி வருகையில் தமிழகம் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெறும். தமிழகத்திற்கு 5,000 மெகாவாட் மின்சாரம் தேவை என்று கேட்டால் மத்திய அரசு 100 மெகாவாட் மின்சாரம் கொடுத்துள்ளது. அதை வைத்து மின்பற்றாக்குறையை எப்படி சமாளிக்க முடியும். கருணாநிதி ஏன் கூடுதல் மின்சாரம் கேட்டு மத்திய அரசுடன் பேச மாட்டேன் என்கிறார்.

நாட்டு மக்களின் நலனில் அக்கறை இல்லாத கருணாநிதிக்கு குடும்ப மக்களை காப்பது மட்டும் தான் முக்கியம். ஜெயலலிதா மின் பற்றாக்குறையைப் போக்க இரவு, பகல் பாராது பாடுபடுகிறார். உடன்குடியில் மின் உற்பத்தி செய்ய ரூ.8 கோடியை ஒதுக்கியுள்ளார். மாணவர்களின் நலனில் அக்கறை உள்ள அவர் இலவச நோட்டுகளை வழங்கவிருக்கிறார்.

கோவில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. வரும் ஆண்டில் சாலை சீரமைப்புக்காக நெடுஞ்சாலைதுறைக்கு ரூ. 5,561 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் கட்டமைப்பை சீர்செய்ய ரூ.300 கோடி, வரும் நிதியாண்டில் 1 லட்சம் புதிய வீட்டுமனை பட்டா, உணவு மானியத்திற்கு ரூ. 4,900 கோடி, ரூ. 548 கோடியில் 300 புதிய பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் நெல்லுக்கு ஊக்கத்தொகையாக ரூ.200 கோடி உள்பட பல்வேறு திட்டங்களை தீட்டி தமிழக மக்களை தாயுள்ளத்தோடு காத்து அயராது உழைக்கிறார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதுபோல் நாடாளுமன்ற தேர்தலிலும் இமாலய வெற்றி பெற்று ஜெயலலிதாவின் கரத்திற்கு வலிமை சேர்க்க தமிழக மக்களாகிய நீங்கள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

English summary
ADMK minister Edappadi K. Palaisamy has accused DMK leader Karunanidhi of being family centric. He has also accused centre of not giving additional fund to the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X