ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுக்கோட்டைக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அங்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. எனவே இனிமேல் புதுக்கோட்டைக்கு எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அறிவிக்கக் கூடாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஜுன் 12-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக (ஏப்ரல் 24-ந் தேதி முதல்) அமலுக்கு வந்துள்ளன.

அதன் விவரம் வருமாறு:

- புதுக்கோட்டை மாவட்டத்திற்காக எவ்வித புதிய திட்டங்களையும் அறிவிக்கக்கூடாது.

- இந்த மாவட்டத்தில் புதிய பணிகளைத் தொடங்குவதோ, எந்தப் பணிக்காகவும் டெண்டர் விடுவதோ, டெண்டர் இறுதி செய்வதோ கூடாது.

- புதிய திட்டங்களை தொடங்குவதோ அல்லது அவற்றிற்காக அடிக்கல் நாட்டுவதோ கூடாது.

- தேர்தல் தொடர்பான அதிகாரிகளை மாற்றுவதற்கும், நியமிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

- புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்லும் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் அலுவலகப் பணியுடன் தேர்தல் பணியை சேர்த்து மேற்கொள்ளக்கூடாது. புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்கு அலுவலகப் பணிக்காக வரும்போதும், புதுக்கோட்டைக்குச் சென்று தேர்தல் பணியில் ஈடுபடக்கூடாது.

- தேர்தல் பணிக்காக அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது.

- புதுக்கோட்டை தேர்தல் பணிக்காக செல்லும்போது பைலட்' கார்கள் அல்லது சுழல் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது.

- புதுக்கோட்டை மாவட்ட அதிகாரிகள் யாரும் ஆய்வுக்கூட்டம் நடத்தக்கூடாது.

- அரசு செலவில், சாதனைகளைச் சொல்லி விளம்பரம் எதுவும் செய்யக்கூடாது.

- அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் இலவசமாக எந்தப் பொருட்களையும் வழங்க தடை விதிக்கப்படுகிறது.

- புதுக்கோட்டை மாவட்டம் தொடர்பான எந்த பணி நியமனமும் மேற்கொள்ளக்கூடாது.

- இந்த இடைத்தேர்தலில் செலவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்துவதற்காக பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புப் படைகள் அமைக்கப்படும்.

- புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் யாராவது ரூ.2 லட்சத்திற்கு மேற்பட்ட ரொக்கப் பணத்தை எடுத்துச் சென்றால் அதற்கு தேவையான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படும். பிரசாரப் பணிக்கு கொடுப்பதற்காக குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் வைத்திருந்தால் அந்தப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Electdion Commission has barred TN govt from announcing new schemes for Pudukottai since the by poll date has been declared.
Please Wait while comments are loading...