போபர்ஸ் ஊழலில் ராஜிவ் காந்திக்கு நேரடி தொடர்பில்லை- ஸ்வீடன் போலீஸ் அதிகாரி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sten Lindstrom
ஸ்டாக்ஹோம்: போபர்ஸ் ஊழலை வெளியே கொண்டு வர இந்து பத்திரிக்கையின் நிருபர் சித்ரா சுப்பிரமணியத்துக்கு உதவியாக இருந்த ஸ்வீடன் நாட்டு ரகசிய நபரின் அடையாளம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பின் இப்போது வெளியே தெரிய வந்துள்ளது.

அவர் ஸ்வீடன் நாட்டு காவல் துறையின் முன்னாள் தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம். ஒரு இணையத்தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தத் தகவலை லின்ட்ஸ்ட்ராமே வெளியில் தெரிவித்துள்ளார்.

19080களில் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடன் நாட்டிடமிருந்து போபர்ஸ் பீரங்கிகள் வாங்கப்பட்டதில் அன்றைய மதிப்பில் ரூ. 64 கோடியளவுக்கு ஊழல் நடந்தது.

இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட இத்தாலியைச் சேர்ந்த ஒட்டாவியோ குவாத்ராச்சி தான் இந்தப் பணத்தில் பெரும் பகுதியை லாபமாக அடைந்தவர். இவர் தவிர லண்டனில் வசிக்கும் இந்தியாவின் மிகப் பிரபலமான பிஸினஸ் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களும் இதில் லாபம் அடைந்தனர்.

இந்த விவகாரத்தை அப்போது ஸ்வீடனில் நிருபராக இருந்த சித்ரா சுப்பிரமணியம் வெளியே கொண்டு வந்தார். அவரும் இந்து ஆசிரியர் என்.ராமும் நடத்திய ரகசிய விசாரணைகளில் இந்த ஊழலில் முழு உருவமும் வெளியே வந்தது. இதனால் ராஜிவ் காந்தி அடுத்து நடந்த தேர்தலில் பெரும் ஊழல்வாதி என்ற பட்டத்துடன் ஆட்சியையும் இழக்க நேர்ந்தது.

முதலில் இதில் ஊழல் நடந்துள்ள விஷயத்தை ஸ்வீடன் நாட்டு ரேடியோ தான் வெளியே சொன்னது. ஆனால், அதன் பின்னணியை முழுமையாக ஆராய்ந்தது சித்ராவும் ராமும் தான்.

ஆனால், இந்த நாள் வரை சித்ராவுக்கும் ராமுக்கும் தகவல்களைத் தந்தது யார் என்பது மிக மிக ரகசியமாகவே இருந்தது. தங்களது ஸ்வீடன் நாட்டு 'சோர்ஸை' சித்ராவும் ராமும் வெளியே சொன்னதே இல்லை. அவரை 'The Swedish Deep Throat' என்ற புனைப் பெயரில் மட்டுமே குறிப்பிட்டனர்.

இந் நிலையில், அந்த சோர்ஸ் நான் தான் என்று ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சித்ராவுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்களைத் தந்ததும் நான் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு இணையத்தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த ஊழலில் ராஜிவ் காந்தி நேரடியாக லஞ்சம் வாங்கினார் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. ஆனால், இந்த ஊழலை மறைக்க டெல்லியிலும் ஸ்வீடனிலும் நடந்த முயற்சிகளை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த ஊழல் குறித்து நான் நடத்திய விசாரணையில் இத்தாலிய புரோக்கர் ஒட்டாவியோ குவாத்ராச்சிக்கு முழு பங்கு இருந்தது தெரியவந்தது. ஏ.இ. சர்வீஸஸ் என்ற நிறுவனம் மூலமாக குவாத்ராச்சியின் வங்கிக் கணக்குக்கு இந்தப் பணத்தை போபர்ஸ் நிறுவனம் வழங்கியது. ஆனால், அதை அவரை மிக வேகமாக செயல்பட்டு மறைத்து, ஆதாரங்களையும் அழித்தார். அவரை விசாரிக்க ஸ்வீடன், சுவிட்சர்லாந்தில் யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை.

போபர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனரான இருந்த மார்ட்டின் ஆர்ட்போவிடம் நான் இது குறித்து நீண்ட விசாரணைகளை நடத்தினேன். அவரது டைரிகளை கைப்பற்றி ஆராய்ந்தபோது, அதில் Q (குவாத்ராச்சி) யார் என்பது குறித்தும், Q-வுக்கும் R-க்கும் (ராஜிவ் காந்தி) உள்ள தொடர்புகள் குறித்தும் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்று எழுதியிருந்தார்.

மேலும் ஏ.இ. சர்வீஸஸ் நிறுவன அதிகாரியை காந்தி அறக்கட்டளையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் சந்தித்துப் பேசியதாகவும் ஆர்ட்போ கூறினார். இதன்மூலம் இது அரசியல்ரீதியாக தரப்பட்ட லஞ்சப் பணம் என்பது தெரியவந்தது.

பின்னர் வி.பி. சிங் பிரதமரானதும் இந்த விவகாரத்தில் அமிதாப் பச்சனை இழுத்துவிட்டனர். அது தவறான செயல்.

உண்மையில் போபர்ஸ் விவகாரம் எப்படி வெளியே வந்தது தெரியுமா?. போபர்ஸ் நிறுவனம் மீது எங்களுக்கு வேறு ஒரு பிரச்சனை தொடர்பாகத்தான் முதலில் புகார் வந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்திலும் அதிகாரிகளின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு வங்கி ஆவணம் சிக்கியது. அந்த ஆவணத்தில், ''இந்தப் பணம் கொடுக்கப்படும் நபரின் பெயரை மறைத்துவிடவும்'' என்று வங்கிக்கு போபர்ஸ் குறிப்பு அனுப்பியிருந்தது.

''எதற்காக அதை மறைக்க வேண்டும்'' என்று கேட்டு அந்த வங்கியின் கிளார்க் ஒருவர் பதிலுக்கு குறிப்பு அனுப்பியிருந்தார்.

இந்த ஆவணங்கள் எனது மேஜைக்கு வந்தபோது எனக்கு சந்தேகம் வரவே, அது குறித்து விரிவாக விசாரித்தேன். அப்போது தான் இது இந்தியாவுக்கு பீரங்கி விற்க தரப்பட்ட லஞ்சப் பணம் என்பதும், மறைக்க வேண்டும் என்று கூறப்பட்ட பெயர் குவாத்ராச்சி என்பதும் தெரியவந்தது. இதையடுத்தே போபர்ஸ் விவகாரமே வெளியில் வந்தது.

இந்தியா போன்ற வளரும் நாட்டில் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதியை லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் ஒதுக்கிக் கொண்டதையும், ஸ்வீடன் போன்ற ஒரு நாட்டில் ஊழலுக்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துணை போனதையும் என்னால் பொறுக்க முடியாமல் தான், இந்திய பத்திரிக்கையாளர் சித்ரா சுப்பிரமணியத்துக்கு ஆதாரங்களைத் தந்து இந்த விவகாரத்தை வெளியே வரச் செய்தேன் என்று கூறியுள்ளார் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Twenty-five years after the scandal surrounding the Bofors gun deal had rocked Indian politics, Sten Lindstrom, the former head of Swedish police who led the investigations, said while there was “no evidence Rajiv Gandhi received a bribe in the Bofors procurement, he (Gandhi) watched the massive cover-up in India and Sweden and did nothing”.
Please Wait while comments are loading...