For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாதி அபு ஜிண்டாலை கைது செய்ய இந்தியாவுக்கு உதவிய செளதி அரேபியா!

By Chakra
Google Oneindia Tamil News

Abu Jindal
டெல்லி: 166 பேர் பலியான மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சையத் ஜபியுதீன் அன்சாரி என்ற அபு ஜிண்டால் என்ற பயங்கரவாதியை செளதி அரேபியாவின் உதவியுடன் தான் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை தாக்குதலின்போது கைதான முக்கியக் குற்றவாளி கசாபின் கூட்டாளியான அபு ஜிண்டால் போலீசாரிடம் தந்துள்ள வாக்குமூலத்தில் பாகிஸ்தானின் லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் மறைமுக அமைப்பான ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத் தான் மும்பை தாக்குதலை வழி நடத்தினார் என்று கூறி்யுள்ளார்.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து வந்த லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், நாரிமன் பாயிண்ட், இந்தியா கேட், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் பலியாயினர். மேலும் 238 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 9 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது, எப்படி செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து 6 பேர் அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்தனர். இந்த சாட்டிலைட் செல்போன் உரையாடலை அமெரிக்க உளவுப் பிரிவு இடைமறித்து பதிவு செய்து இந்தியாவிடம் தந்தது.

அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்த தீவிரவாதிகளில் தான் ஒருவன் அபு ஜிண்டால். இவனுக்கு சயீத் ஜபி உத்தீன், ஜபி அன்சாரி, ரியாசத் அலி என்ற பெயர்களும் உண்டு.

30 வயதான அபு ஜிண்டால் மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஜியோரை என்ற இடத்தைச் சேர்ந்தவன். 2006-ம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத் நகரில் தீவிரவாதிகளுக்கு வந்த ஏராளமான ஆயுதங்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த சம்பவத்தின்போது அபு ஜிண்டால் தப்பிவிட்டான். பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று லஷ்கர் ஏ தொய்பா இயக்கத்தினருடன் இணைந்து செயல்பட்டான். இந்தியாவில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை வழி நடத்த லஷ்கர் ஏ தொய்பா அமைப்புக்கு உதவி வந்தான்.

மும்பைக்கு தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து லஷ்கர் ஏ தொய்பா உத்தரவுகளை சாட்டிலைட் போன் மூலம் வழங்கியபோது முக்கிய உத்தரவுகளைத் தந்தவர் அபு ஜிண்டால் தான்.

தாக்குதலின்போது தங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து உத்தரவு பிறப்பித்தவர்களில் அபு ஜிண்டாலும் ஒருவன் என்பதை விசாரணையின் போது தீவிரவாதி அஜ்மல் கசாப் உறுதி செய்தான்.

இதையடுத்து இண்டர்போல் உதவியுடன் அபு ஜிண்டாலை பிடிக்கும் வேலைகளை மத்திய உள்துறையும் உளவுப் பிரிவும் மேற்கொண்டன. அவன் செளதி அரேபியாவில் தஞ்சம் புகுந்து பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ தயாரித்துத் தந்த போலி பாஸ்போர்ட்டுடன் ரியாசத் அலி என்ற பெயரில் செளதி அரேபியா வசித்து வருவதும், அங்கிருந்தபடி லஷ்கர் தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவனை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்குமாறு செளதி அரசிடம் இந்தியா கேட்டுக் கொண்டது.

அதை ஏற்று, செளதி அரசு ஜிண்டாலை கைது செய்து விமானத்தில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. இந்தியாவுக்கும் தகவல் தந்தது. அந்த விமானம் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தபோகு அங்கு தயாராக இருந்த டெல்லி போலீசார் அவனை கைது செய்தனர்.

அபு ஜிண்டால் கைது செய்யப்பட்ட தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தான் உறுதி செய்தார்.

கைதான தீவிரவாதி அபு ஜிண்டால் டெல்லியில் உள்ள தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்த்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

அபு ஜிண்டாலிடம் போலீசார் நடத்தும் விசாரணை மூலம், மும்பையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் கசாப், ஜிண்டால் தவிர அமெரிக்கரான டேவிட் ஹெட்லியும் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஹபீஸ் சயீதை கைது செய்ய பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

அதே போல மும்பை தாக்குதலை நடத்திய 10 பேருக்கும் லஷ்கர் அமைப்பின் கமாண்டரான சகி உர் ரஹ்மான் லக்வி தான் 12 நாள் தாக்குதல் பயிற்சி அளித்துள்ளார். அப்போது இந்தத் தீவிரவாதிகளுக்கு இந்தி சொல்லிக் கொடுத்தது அபு ஜிண்டால் தான் என்பதும் கசாப் அளித்த வாக்குமூலம் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தப் பயிற்சி பாகிஸ்தானின் பிடியில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள முஸாபராபாத் நகரில் தரப்பட்டது.

ஜிண்டாலைத் தவிர லக்வி, ஆஸம் சீமா, முஸம்மில் ஆகியோரும் மும்பை தாக்குதல் நடந்த போது சாட்டிலைட் போன் மூலம் தீவிரவாதிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இந்தியாவில் தேடப்படும் பயங்கர தீவிரவாதிகள் பட்டியலில் இருந்தாலும் பாகிஸ்தான் அவர்களை பாதுகாத்து வருகிறது.

பிடிபட்டுள்ள ஜிண்டாலை மத்திய உளவுப் பிரிவான ஐபி, ரா, டெல்லி, மும்பை, குஜராத் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கசாபையும் இவனையும் ஒரே அறைக்குள் வைத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரங்களை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேரடியாக கண்காணித்து வருகிறார். ஜிண்டாலை பிடித்துக் கொண்டு வந்ததிலும் சிதம்பரத்தின் உத்தரவுகள் முக்கிய பங்கு வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Saudi Arabia has helped India with a major breakthrough in the probe into the 26/11 attacks by facilitating the arrest of Syed Zabiuddin Ansari alias Abu Jundal, one of the key plotters of the Mumbai raid. Jundal, who directed Ajmal Kasab and other 26/11 attackers from the Lashkar control room, was picked up by the Saudi police, who put him on a New Delhi-bound flight after alerting the authorities here about their prize catch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X