For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கள வீரர்கள்: தாம்பரம் விமானதள பாதுகாப்புக்கு ராணுவம் குவிப்பு... பெரும் பதட்டம்!

Google Oneindia Tamil News

Tambaram airforce
சென்னை: சிங்கள விமானப்படை வீரர்கள் 9 பேர் தொடர்ந்து தாம்பரம் விமானதளத்திலேயே தங்கியுள்ளனர். அவர்களை இப்போதைக்கு மத்திய அரசு வெளியேற்றாது என்று கூறப்படுகிறது. இதனால் பல்வேறு கட்சியினரும் தாம்பரம் விமானதளத்தை முற்றுகையிடக் கூடிய சூழல் அதிகரித்துள்ளது. இதையடுத்து தாம்பரம் விமானதளத்திற்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ராணுவ வீரர்களும் துப்பாக்கி சகிதம் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் விமானதளம் அமைந்துள்ள கிழக்கு தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

சென்னை, கிழக்கு தாம்பரத்தி்ல இந்திய விமானப்படையின் பயிற்சித்தளம் உள்ளது. இங்கு இந்திய விமானப்படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது போக வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் அவ்வப்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சார்க் நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இலங்கை வீரர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கிறார்கள்.

ஆனால் இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இனவெறி பிடித்த சிங்கள விமானப்படைக்கு தமிழகத்தில் வைத்து பயிற்சி தருவது என்பது தமிழர்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயல் என்று பலமுறை மத்திய அரசுக்கு கட்சிகள் கண்டனம் தெரிவித்தபோதும் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதமாக சிங்கள வீரர்களை இங்கு அனுமதித்து வருகிறது.

இந்த நிலையி்ல் தற்போதும் 9 சிங்கள வீரர்கள் உள்பட சார்க் நாடுகளின் வீரர்கள் தாம்பரம் விமானதளத்தில் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு தமிழக கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட அனைவருமே கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிங்கள வீரர்களை வெளியேற்றும் வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. காரணம், இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லையாம். சார்க் நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் இவர்களைக் கூட்டி வந்ததாக ஒரு சப்பைக் காரணத்தை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் அரசியல் கட்சிகள் போராட்டத்தைத் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விமான தளத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் அவை குதிக்கும் நிலையும் உருவாகி வருகிறது.

இதையடுத்து தாம்பரம் விமானப்படை தளத்திற்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மூன்று அடுக்குகளாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கேம்ப் ரோடு என்று சொல்லப்படும் விமானதளத்திற்குச் செல்லும் நுழைவாயில் சாலையில் ஒரு போலீஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் விமானதளத்தின் நுழைவாயிலுக்கு சற்று முன்னதாக இன்னொரு போலீஸ் சோதனைச் சாவடி போடப்பட்டுள்ளது. நுழைவாயிலில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் அந்தப் பகுதி வழியாக வரும் ஒவ்வொருவரையும் சோதித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.

தாம்பரத்தில் ரயில் மறியல்-30 பேர் கைது

இதற்கிடையே, தாம்பரம் ரயில் நிலையத்தில், சிங்கள வீரர்களை வெளியேற்றக் கோரி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 30 பேர் ரயில் மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

English summary
Army has been called in to guard Tambaram airforce station after TN parties are up in the arms against the presence of Sri Lankan airforce soldiers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X