For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

18 போலி நிறுவனங்கள் மூலம் ஷாகித் பல்வாவுக்கு ரூ. 53 கோடியை திருப்பித் தந்த கலைஞர் டிவி!

By Chakra
Google Oneindia Tamil News

Kalaignar TV
டெல்லி: திமுகவின் கலைஞர் டிவி மீண்டும் மாபெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய ஷாகித் பல்வாவின் டி.பி. ரியாலிட்டி நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி வழங்கியது. ஆனால், இந்த விவரம் வெளியில் தெரிந்தவுடன் அதை கலைஞர் டிவி ரூ. 13 கோடி வட்டியோடு அவருக்குத் திருப்பித் தந்தது. இவ்வாறு தரப்பட்ட ரூ. 213 கோடியில் ரூ. 52 கோடி கொல்கத்தாவைச் சேர்ந்த 18 நிறுவனங்கள் மூலமாகத் தரப்பட்டுள்ளன. ஆனால், மத்திய நேரடி வரிகள் வாரியம் நடத்திய விசாரணையில் இப்படி நிறுவனங்களே இல்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது.

கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஷாகித் பல்வாவின் சினியூக், குசேகான் ப்ரூட்ஸ் ஆகிய 2 நிறுவனங்களிடம் இருந்து சுமார் ரூ.200 கோடி தரப்பட்டது.

இது ஸ்பெட்கம் தரப்பட்டதற்காக கலைஞர் டிவிக்கு வந்த லஞ்சம் என சிபிஐ கூறுகிறது. ஆனால், இதை கடனாக வாங்கியதாக கலைஞர் டிவி கூறுகிறது. இந்த விவகாரத்தில் தான் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியில் வெடித்தவுடன் பல்வாவுக்கு ரூ. 200 கோடி பிளஸ் ரூ. 13 கோடியை (வட்டியாம்) திரும்பத் தந்தது கலைஞர் டிவி. இவ்வாறு திருப்பித் தர கொல்கத்தாவில் உள்ள சில நிறுவனங்களிடம் கடன் பெற்றதாகவும் கலைஞர் டிவி வருமான வரித்துறைக்கு கணக்குக் காட்டியது.

இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் மற்றும் பண பரிமாற்றங்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும் அதே நேரத்தில் இதுகுறித்து பி.சி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்தக் கூட்டுக் குழுவின் முன் ஆஜரான வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் லட்சுமண தாஸ், உறுப்பினர் மாதவன் நாயர் உள்ளிட்ட அதிகாரிகள் கேள்விகளுக்கு விளக்கம் தந்தனர்.

அவர்களிடம் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பண பரிமாற்றம் தொடர்பான விசாரணைகளை இன்னும் ஏன் முடிக்கவில்லை என்று கூட்டுக் குழுவினர் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கொடுக்கப்பட்டது பற்றிய விசாரணையில் மெத்தனம் காட்டுவது ஏன் என்று அவர்களிடம் கூட்டுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த விசாரணைக்குப் பின் கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோ பல்வேறு தகவல்களை நிருபர்களிடம் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்தது. அந்த 9 நிறுவனங்களில் ரிலையன்ஸ் டெலிகாம், டாடா ரியாலிட்டி அண்ட் இன்பிராஸ்டிரக்சர் ஆகிய 2 நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தி விட்டன. எனவே அந்த 2 நிறுவனங்கள் மீதான விசாரணை முடிந்து விட்டது.

கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் உள்பட 7 நிறுவனங்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

சினியூக், குசேகான் என்ற ஆகிய 2 நிறுவனங்களிடம் இருந்து கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம், சுமார் ரூ.200 கோடி பெற்றிருந்தது. ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கப்பட்டதற்கு பிரதிபலனாக இந்த தொகை கலைஞர் டி.வி.க்கு கிடைத்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் கலைஞர் டி.வி. தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், சுமார் ரூ.200 கோடி கடனாக பெற்றதாகவும், அந்த தொகையை திருப்பிக் கொடுக்க கொல்கத்தாவில் உள்ள சில நிறுவனங்களிடம் கடன் பெற்றதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து கலைஞர் டி.வி.க்கு இரண்டாவதாக கடன் கொடுத்த கொல்கத்தா நிறுவனங்கள் பின்னணி பற்றி மத்திய நேரடி வரிகள் வாரியம் விசாரணை நடத்தியது. கலைஞர் டி.விக்கு எந்த அடிப்படையில் இவ்வளவு பணத்தை அந்த நிறுவனங்கள் கடனாகக் கொடுத்தன?, அதற்கான வரவு- செலவு கணக்கு என்ன? ஆகியவை குறித்து விசாரிக்கப்பட்டது.

அப்போது கலைஞர் டி.வி.க்கு பணம் கொடுத்த நிறுவனங்களில் ரூ.150 கோடி வரை கடன் கொடுத்ததற்கு சரியான கணக்குகள் இருந்தன. அந்த நிறுவனங்களின் வரவு- செலவு கணக்குகளும் சரியாக இருந்தன. ஆனால் கலைஞர் டி.விக்கு ரூ.52 கோடி கொடுத்த 18 நிறுவனங்கள் பற்றி சரியான விவரம் இல்லை. அந்த 18 நிறுவனங்களின் முகவரிகளும் தவறாக இருந்தன.

பல தடவை முயன்றும் நிதியமைச்சக அதிகாரிகளால் அந்த நிறுவனங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அந்த 18 நிறுவனங்களும் போலியானவை என்று தெரியவந்துள்ளது என்றார் சாக்கோ.

கொல்கத்தா அட்ரஸில் உள்ள இந்த 18 நிறுவனங்களிடம் இருந்தும் inter-corporate deposits என்ற பெயரில் கலைஞர் டிவிக்கு பணம் வந்துள்ளது. ஆனால், அந்த அட்ரஸில் அப்படிப்பட்ட நிறுவனங்களே இல்லை.

முன்னதாக கலைஞர் டி.வி.க்கு கடன் கொடுத்த 18 நிறுவனங்கள் போலி என்று தெரிந்த பிறகும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கூட்டுக் குழுவில் உள்ள காங்கிரஸ், திமுக அல்லாத பிற கட்சிகளின் எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு குற்ற வழக்கு போல் தங்களால் விசாரிக்க இயலாது என்று நிதியமைச்சக அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

மேலும் நேற்றைய கூட்டுக் குழு விசாரணை முன்பு ஆஜரான நிதியமைச்சக வரித்துறை அதிகாரிகள், வேண்டுமென்றே சில ஆவணங்களை கொண்டு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. கலைஞர் டிவி மீதான விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் வரித்துறையினர் நடந்து கொள்வதாகத் தெரிகிறது.

இதையடுத்து வரும் மார்ச் மாதத்துக்குள் ஸ்பெக்ட்ரம் பண பரிமாற்றம் தொடர்பான எல்லா விசாரணைகளையும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இந் நிலையில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அடுத்த கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அப்போது சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜராகி கூட்டுக் குழுவிடம் விளக்கம் தரவுள்ளனர்.

அப்போது வருமான வரித்துறையினர் அளித்த போலி நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் குறித்து சிபிஐ என்ன நடவடிக்கை எடுத்தது என்று கூட்டுக் குழு கேள்வி எழுப்பும் என்று தெரிகிறது.

இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் விசாரணை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதோடு கலைஞர் டிவி மாபெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.

English summary
The Central Board of Direct Taxes (CBDT) is probing 18 Kolkata-based companies for allegedly helping Kalaignar TV, promoted by the family of DMK chief M Karunanidhi, to repay a controversial loan of Rs 200 crore. In a detailed presentation on Wednesday to the Joint Parliamentary Committee (JPC) probing the 2G spectrum scam, CBDT chairman Lakshman Dass and other senior officials claimed that the TV company received Rs 52 crore from these firms to help it repay the loan. The CBDT officials said the tax authorities were probing the antecedents of these firms and suspects that these could be "fictitious".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X