
எம்.பி 'சீட்' அளிக்க முன்வந்த முலாயம் சிங்-'எஸ்கேப்' ஆன சாய்னா நெஹ்வால்!
லக்னோ: லோக்சபா எம்.பி தேர்தலில் போட்டியிட சமாஜ்வாடி கட்சியின் சார்பாக பார்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வாலுக்கு வாய்ப்பு அளிப்பதாக, அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார். ஆனால் அதை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் 'எஸ்கேப்' ஆனார் சாய்னா நெஹ்வால்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியி்ல் உள்ள தனியார் பல்கலை கழகம் சார்பாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இவ்விழாவில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கலந்து கொண்டு பேசிய போது, அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலை வெளியிட்டார்.
விழாவில் அவர் கூறியதாவது,
பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள சாய்னா நெஹ்வால், வாழ்க்கையில் சகல வளமும் பெற எனது வாழ்த்துக்கள். சமாஜ்வாடி கட்சியின் சார்பாக சாய்னாவிற்கு, அலிகார் தொகுதியில் எம்.பி. பதவிக்கு போட்டிட சீட் வழங்க தயாராக உள்ளோம். அவர் விரும்பினால் கட்சியின் சார்பாக போட்டியிடலாம். தேர்தலில் போட்டியிட கிடைக்கும் சீட் அவருக்கு கிடைக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் என்றார்.
டாக்டர் பட்டம் பெற்ற மகிழ்ச்சியில் பேசிய சாய்னா நெஹ்வால், முலாயம் சிங் யாதவ் அளித்த வாய்ப்பிற்கு நன்றி கூறினார். ஆனால் அதற்கு பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
மேலும் சாய்னா கூறியதாவது,
நான் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்று எனது தந்தை கனவு கண்டார். ஆனால் நான் விளையாட்டு துறைக்கு வந்துவிட்டதால், அவரது கனவு பலியாக்காமல் போகும் நிலை உருவானது. ஆனால் தற்போது ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று, கெளரவ டாக்டர் பட்டம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் எனது தந்தையின் கனவு இன்று நினைவாகி உள்ளது என்றார்.
தற்போது 22 வயதை எட்டியுள்ள சாய்னா நெஹ்வால், சமாஜ்வாடி கட்சி அளித்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட விரும்பினாலும் முடியாது. ஏனெனில் லோக்சபா எம்.பி.தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
பாட்மிண்டன் போட்டியில் நெட்டிற்கு அப்பால் ஷெட்டிலை அனுப்ப தெரிந்த சாய்னா, முலாயம் சிங் யாதவ் வீசிய அரசியல் வலைக்கும் தப்பிவிட்டாரே! பலே சாய்னா!