For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''வீரபாண்டி ஆறுமுகம் என்ற தூணை இழந்துவிட்டோம்'': கண்ணீர் விட்டு அழுத கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதி கண்ணீர் விட்டு அழுதார்.

Veerapandi Arumugam

வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டதும் கருணாநிதி உடனடியாக போரூர் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், திமுக மிகப் பெரிய தூணை இழந்து விட்டது. ஒரு போர்ப் படை தளபதியை திமுக இழந்துள்ளது. அவருடன் பழகிய நாட்களை மறக்க முடியாது. என்னில் பாதி அவர். மாறன் மறைந்த அதே நாளில் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டார் என்றார்.

3 நாள் துக்கம்.. கொடிகள் அரை கம்பத்தில்:

அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை மறைந்தார்.

அவரது மறைவினையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ராமதாஸ் இரங்கல்:

வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி, திமுகவின் மூன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.

வீரபாண்டியாரின் மறைவு திமுகவுக்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தா.பாண்டியன் இரங்கல்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

திமுக சேலம் மாவட்டச் செயலாளராகவும், மாநிலத் தலைமைக்குழுவின் முக்கிய பொறுப்புக்களிலும், திமுக அமைச்சரவையிலும் தொடர்ந்து அமைச்சராகப் பொறுப்பேற்றுப் பணிபுரிந்து வந்த மூத்த அரசியல்வாதி வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டு, ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தார்க்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

திருமாவளவன்...

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

வீரபாண்டியார் 6 முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் சட்டமேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திறம்பட மக்கள் பணியாற்றியவர். பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்து சாதனைகள் பல புரிந்தவர். அவரை இழந்து வாடும் திராவிட இயக்கத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

English summary
Former DMK minister Veerapandi S. Arumugam passed away at a private hospital here today, following respiratory problems. Condoling his death, the DMK said the party flag would fly at half mast and that all party functions have been postponed for the next three days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X