• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்பம், துன்பம், சுகம், துக்கம், வெற்றி, தோல்வி.. அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை- ஜெயலலிதா

|

Jayalalitha
சென்னை: மத்திய அரசு, எத்தனை தடைக்கற்களை ஏற்படுத்தினாலும், எத்தனை சோதனைகளை உருவாக்கினாலும், எத்தனை முட்டுக்கட்டைகளை போட்டாலும், அதனை எல்லாம் முறியடித்து சாதித்துக் காட்ட வேண்டும்; தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற ஒரே வைராக்கியத்துடன் நான் செயல்பட்டு வருகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணியின் மகன் தரணீதரன், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் மகள் சாரா திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையில் நடத்தி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை:

அரங்கம் முழுவதும் மகிழ்ச்சி அலை வீசும் இந்த மங்கலத் திருநாளில் இரு கழகக் குடும்பங்கள் இணையும் திருமணத்தை நடத்தி வைக்கின்ற இனியதொரு வாய்ப்பு எனக்கு இன்று கிடைத்திருப்பது குறித்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நன்னாளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் குடும்பத்தின் உறுப்பினர்களாகிய உங்களை எல்லாம் சந்திப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

இன்றைக்கு, நாமக்கல் மாவட்ட கழகச் செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான பி. தங்கமணி - சாந்தி தங்கமணி ஆகியோரின் அன்பு மகன் தரணீதரனுக்கும்; சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரும், ரவிச்சந்திரன் - கலாராணி ஆகியோரின் அன்பு மகளுமான சாராவுக்கும் திருமணத்தை நடத்தி வைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று இல்லறத்தில் அடி எடுத்து வைக்கின்ற மணமக்களுக்கு எனது இதயப் பூர்வமான நல்வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

இல்லற வாழ்வு என்பது இரு ஆன்மாக்களின், மனங்களின், உணர்வுகளின், முழுமையான இணைப்பு. இந்த இல்லற வாழ்வு இனிமையாக இருக்க வேண்டுமென்றால், கணவன் என்ன நினைக்கிறானோ அதை மனைவி ஏற்றுக் கொள்ள வேண்டும்; மனைவி என்ன நினைக்கிறாளோ அதை கணவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதை கபீர்தாசர் என்கிற ஒரு மிகப்பெரிய ஆன்மீகவாதியின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தின் மூலம் நான் விளக்க விரும்புகிறேன்.

ஒருநாள் கபீர்தாசர் இல்லத்தில் ஏகப்பட்ட பக்தர்கள். எல்லோரும் அவரிடம் ஆன்மீகச் சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் கபீர்தாசர்.

நண்பகல் 12 மணிக்கு எல்லோரும் போய்விட்டனர். ஆனால், ஒருவர் மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தார். உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கபீர்தாசர் கேட்டார். அதற்கு பதில் சொல்லத் தயங்கினார் அந்த மனிதர்.

உடனே கபீர்தாசர், உங்கள் முகத்தில் காணப்படுகிற அறிகுறிகளைப் பார்த்தால், உங்களுடைய இல்வாழ்க்கை இன்பமாக இல்லை என்று தோன்றுகிறது; அப்படித்தானே? என்று கேட்டார்.

அப்படித்தாங்க. என்னுடைய மனைவியும், நானும் சந்தோஷமாக குடும்பம் நடத்தவில்லை; எப்பொழுதும் சண்டைதான். நான் என்ன சொன்னாலும், அவள் கேட்பதில்லை. எதிர்த்து பேசுகிறாள். கோபப்படுகிறாள். ஆத்திரப்படுகிறாள். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை என்றார், அந்த மனிதர்.

உடனே கபீர்தாசர், இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க. யோசனை செய்து பதில் சொல்கிறேன்", என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர், ஒரு பெரிய நூல் கண்டை எடுத்து வந்து வீட்டிற்கு வெளியே வெளிச்சத்தில் உட்கார்ந்தார்.

நூல் கண்டில் உள்ள சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்து எடுத்தார். அப்போது, மனைவியை கூப்பிட்டு விளக்கை ஏற்றி எடுத்து வா என்று சொன்னார். அந்த அம்மையாரும் ஒரு விளக்கை ஏற்றி எடுத்து வந்து அவர் பக்கத்திலே வைத்தார்.

இவ்வளவு வெளிச்சம் இருக்கும் போது, கபீர்தாசர் தான் விவரம் இல்லாமல் விளக்கு கொண்டு வரச் சொன்னால், அந்த அம்மையாரும் விளக்கு கொண்டு வருகிறாரே என்று நினைத்து, திகைத்துப் போனார் அந்த மனிதர்.

சிறிது நேரம் கழித்து, அந்த அம்மையார் இரண்டு டம்ளர்களில் பாலை எடுத்துக் கொண்டு வந்து, அவர்கள் முன்பு வைத்தார். பாலை குடிக்க ஆரம்பித்த அந்த மனிதரின் முகம் சுருங்க ஆரம்பித்தது. பாலை அவரால் குடிக்க முடியவில்லை. ஏனெனில், கபீர்தாசரின் மனைவி தவறுதலாக பாலில் சர்க்கரைக்கு பதிலாக, உப்பை போட்டிருந்தார்.

உடனே அந்த பக்தர், கபீர்தாசரைக் கவனித்தார். கபீர்தாசரோ, கிடுகிடுவென்று பாலை குடித்தார். பாலை குடித்து முடிக்கும் தருவாயில், அவரது மனைவி சமையல் கட்டிலிருந்து கொண்டே, பாலுக்கு சர்க்கரை சரியா இருக்கிறதா? என்று கேட்டார்.

இதற்கு கபீர்தாசர், சரியாக இருக்கிறது என்று சொன்னார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் கபீர்தாசரை நெடுஞ்சாண்கிடையாக வணங்கினார். உடனே கபீர்தாசர், அந்த மனிதரைப் பார்த்து என்னவோ கேட்க வேண்டும் என்று கூறினாயே? என்று கேட்டார்.

அதற்கு அந்த மனிதர் ஒன்றும் கேட்க வேண்டாம் அய்யா. நண்பகலில் நீங்கள் விளக்கேற்றி வைக்கச் சொல்கிறீர்கள். உங்கள் மனைவியும் விளக்கேற்றி வைக்கிறார். உப்பு போட்ட பாலில் சர்க்கரை சரியாக இருக்கிறதா என்றால் சரியாக இருக்கிறது என்று நீங்கள் பதில் கூறுகிறீர்கள். எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

அதாவது, கணவனை மாற்ற வேண்டும் என்று மனைவி நினைக்காமலும்; மனைவியை மாற்ற வேண்டும் என்று கணவன் நினைக்காமலும்; ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டால், இல்லற வாழ்வு அமைதியாக, இனிமையாக, சொர்க்கம் போல் இருக்கும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துரைக்கிறது.

இன்று திருமணம் நடந்தேறிய இரு வீட்டாரும் கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மணமகனின் தந்தையான தங்கமணியும் மணமகளின் நெருங்கிய உறவினரான எடப்பாடி பழனிச்சாமியும் ஆரம்பம் முதலே கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மாறாப் பற்றும், மிகுந்த விசுவாசமும் உடையவர்கள்.

தங்கமணி ஆரம்ப காலம் முதல் சாதாரண உறுப்பினராக கழகத்தில் இணைந்து, கிளைக் கழகப் பிரதிநிதி; கிளைக் கழகச் செயலாளர்; பேரவைச் செயலாளர்; ஒன்றியக் கழகச் செயலாளர் என கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

தற்போது, நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளராக, இருந்து வருகிறார். ஆட்சிப் பணி என்று எடுத்துக் கொண்டால், பள்ளிப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவராகவும்; 2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார். தற்போது, இரண்டாவது முறையாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழில் துறை அமைச்சர் பதவியை வகித்து வருகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆரம்ப காலம் முதல் சாதாரணத் தொண்டராக தன்னைக் கட்சியில் இணைத்துக் கொண்டு, தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷனின் தலைவராகவும்; சேலம் பால்பண்ணையின் தலைவராகவும்; இரு முறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும்; ஒரு முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார்.

தற்போது மூன்றாவது முறையாக சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பொறுப்பை வகித்து வருகிறார். கட்சிப் பணி என்று எடுத்துக் கொண்டால், மாவட்டக் கழக இணைச் செயலாளர்; மாவட்டக் கழகச் செயலாளர்; கழக கொள்கை பரப்புச் செயலாளர்; கழக அமைப்புச் செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது, சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராக இருந்து வருகிறார்.

எந்தப் பொறுப்பை ஒப்படைத்தாலும், அதை திறம்பட நிர்வகிக்கின்ற ஆற்றலும், திறமையும் இருவரிடத்திலுமே இருக்கிறது. இந்த நிலையை எட்டுவதற்கு முன்பாக இவர்கள் சந்தித்த சவால்கள், சோதனைகள், இன்னல்கள் ஏராளம்.

நாம் ஒரு நிலையை அடைந்துவிட்டாலும், சோதனைகள் நம்மை விட்டு அகலாது. நான் இன்றைக்கு, தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறேன். இந்த நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முடிகிறதா? எத்தனை முட்டுக் கட்டைகளை, எத்தனை தடைகளை, எத்தனை சோதனைகளை மத்திய அரசு ஏற்படுத்துகிறது?

தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய மண்ணெண்ணெயின் அளவை மத்திய அரசு குறைத்துக் கொண்டே போகிறது. மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுக்கிறது. எந்தப் பிரச்சனை குறித்து பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதினாலும் உங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றது என்ற வழக்கமான பதில் தான் கிடைக்கிறது.

காவேரி நதிநீர் ஆணையக் கூட்டத்தைக் கூட்டுவதில்கூட, மத்திய அரசு மவுனம் சாதித்தது. பின்னர் தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பின், மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு தான், ஓரளவு காவேரி தண்ணீர் கர்நாடகத்திலிருந்து பெறப்பட்டது.

தமிழ்நாட்டின் மின்சார தட்டுப்பாட்டை குறைக்க மத்திய தொகுப்பிலிருந்து, மின்சாரம் கேட்டால், அதையும் மத்திய அரசு வழங்கவில்லை. டெல்லி மாநில அரசு, தேவையில்லை என்று ஒப்படைத்த மின்சாரத்தைக் கூட தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசு மறுக்கிறது. இதற்காக உச்ச நீதிமன்றத்தை நாம் அணுகியிருக்கிறோம்.

எல்லா விஷயங்களிலும், இவ்வாறு பாதகமான அணுமுறையை மத்திய அரசு கடைபிடிக்கிறது. முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சனையிலும் இதே நிலைப்பாடுதான். இதையெல்லாம் கண்டு நான் துவண்டுவிடவில்லை. மத்திய அரசு, எத்தனை தடைக்கற்களை ஏற்படுத்தினாலும், எத்தனை சோதனைகளை உருவாக்கினாலும், எத்தனை முட்டுக்கட்டைகளை போட்டாலும், அதனை எல்லாம் முறியடித்து சாதித்துக் காட்ட வேண்டும்; தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற ஒரே வைராக்கியத்துடன் நான் செயல்பட்டு வருகிறேன்.

உங்களின் ஆதரவோடு அதை நிச்சயம் செய்து முடிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் போல, வாழ்க்கையும் சவால்கள் நிறைந்ததுதான். விருந்து சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறோம். அதிலே வெறும் இனிப்பு மட்டும் இருந்தால், அது நமக்கு மன நிறைவை அளிக்காது.

விருந்து என்றால், உவர்ப்பு இருக்க வேண்டும், புளிப்பு இருக்க வேண்டும், காரமும் இருக்க வேண்டும். இவை அனைத்தும் இருந்தால் தான், விருந்து, உயர்தரமானதாய் அமையும். அதுபோல்தான் வாழ்க்கை. இன்பம், துன்பம், சுகம், துக்கம், வெற்றி, தோல்வி என அனைத்தும் கலந்திருப்பதுதான் வாழ்க்கை.

தடங்கல்-ஐ வெற்றியின் தடங்கள் ஆக கருதி, துணிச்சலுடனும், ஒற்றுமையுடனும் எதிர்கொண்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, இன்று இல்லற வாழ்வில் இணைந்துள்ள மணமக்கள், ஆல் போல் தழைத்து, அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழ; பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க, வாழ்க, என்று மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார் ஜெயலலிதா.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
I will break all the barriers of the centre and ensure our state's rights, says Chief Minister Jayalalitha.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more