For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி: நீர் இருப்பு, தேவை குறித்த அறிக்கை அளிக்க தமிழகம், கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகியவை தங்களது தண்ணீர் தேவை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கு கடந்த 26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.கே. ஜெயின், லோகுர் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும் வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்தியும் வைத்திருந்தனர்.

இதை ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை நேரில் சென்று சந்தித்துப் பேசினார். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. கர்நாடகத் தரப்பு, காவிரியில் நீர் திறந்துவிட மறுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து இன்று காவிரி நதி நீர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு மாநில முதல்வர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது பற்றி நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

அப்போது, கர்நாடக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடகம் மறுத்து விட்டது என்று தமிழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிரை காப்பாற்ற, டிசம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 30 டிஎம்சி தண்ணீர் தேவை என்று தமிழக அரசு வாதத்தை முன் வைத்தது.

ஆனால், தங்களுக்கு 78 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் நிலையில் தங்களது அணைகளில் 37 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளதாக கர்நாடக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்தப் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, இரு மாநிலங்களிலும் உள்ள நீர் இருப்பு மற்றும் தண்ணீர் தேவை பற்றி இரு மாநில அரசுகளும் சனிக்கிழமைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கு மீண்டும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அப்போது மாநில அரசுகள் அளிக்கும் அறிக்கைகளை பரிசீலித்து, அதன் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தஞ்சையில் குறைதீர் கூட்டத்து விவசாயிகள் தர்ணா:

இந் நிலையில் தஞ்சாவூரில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தைப் புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்புர் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். பின்னர் அனைவரும் கூட்ட அரங்கின் வாசலில் அமர்ந்து கர்நாடக அரசைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்-சிதம்பரத்தில் ஷெட்டரின் கொடும்பாவி எரிப்பு:

இந் நிலையில் தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுத்த கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் உருவப் பொம்மையை எரித்து தஞ்சாவூரிலிலும் சிதம்பரத்திலும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இன்று காலை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தின் முன்னர் குவிந்த காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மற்றும் விவசாயிகள், கர்நாடக அரசின் போக்கைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஜெகதீஷ் ஷெட்டரின் உருவப் பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதே போல சிதம்பரம் தெற்கு சந்நிதி தெரு முன்னர் கூடிய தமிழக உழவர் முன்னணி அமைப்பினர், ஷெட்டரின் உருவ பொம்மையை எரித்தனர்.

English summary
SC will hear the Cauvery water case filed by TN on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X