For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்த ஆட்சியிலும் எதிர்கட்சிகள், ஏடுகள் மீது இத்தனை அவதூறு வழக்குகள் தொடரப்படவில்லை: கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தமிழகத்தில் இதுவரை எந்த ஆட்சியிலும் எதிர்க்கட்சிகள் மீதும், ஏடுகள் மீதும் இத்தனை அவதூறு வழக்குகள் தொடரப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த சின்னப்ப ரெட்டி, ஒரு வழக்கில் இறுதித் தீர்ப்பு அளித்தபோது, நமது பாரம்பரியம் சகிப்புத்தன்மையை நமக்கு கற்பித்திருக்கிறது. நமது சித்தாந்தங்கள் சகிப்புத் தன்மையைப் போதித்திருக்கின்றன. நமது இந்திய அரசியல் சட்டம், சகிப்புத் தன்மையை நடைமுறைப்படுத்துவதைப் பற்றி வலியுறுத்தியிருக்கின்றது.

எனவே, அதனை நாம் நீர்த்துப் போகச் செய்து விடக்கூடாது என்று நமது ஜனநாயக நாட்டில் அனைவரும் பின்பற்ற வேண்டிய சகிப்புத் தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

சட்ட விதிமுறைகளின்படி தண்டனை வந்துவிடுமோ, சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமோ என்றெல்லாம் எந்தவித அச்சத்திற்கும் ஆட்படாமல் நமது நாட்டில் வாழும் பல்வேறு பிரிவினரும் தங்களுடைய கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சம உரிமை உள்ளது.

மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய நீதிமன்றம், கருத்துச் சுதந்திரம் என்பது; பொதுவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் கருத்துகள் மட்டு மல்லாமல், சமுதாயத்தின் ஒரு பிரிவினரைப் புண்படுத்தக்கூடிய மற்றும் அதிர்ச்சியளிக்கக் கூடிய கருத்துகளும் கருத்துச் சுதந்திரத்திற்குள் அடங்கும்.

இப்படிப்பட்ட சகிப்புத்தன்மை, பல்வேறு கருத்துகளுக்கு இடம் அளிக்கும் சுதந்திரம், எல்லாக்கருத்துகளையும் கேட்டுக்கொள்ளும் பெருந்தன்மை ஆகியவையின்றி ஜனநாயக சமூகம் என்பது நிலைபெறாது என்று அளித்த தீர்ப்பினை நமது இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியல் சட்டம், 51 (அ) பிரிவின்படி இந்தியக் குடிமக்கள் நிறைவேற்றியே தீர வேண்டிய சில அடிப்படைக் கடமைகளை நிர்ணயித்துள்ளது. அந்த அடிப்படைக் கடமைகளில் மிகவும் தலையாய கடமையாக சகிப்புத் தன்மை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சகிப்புத் தன்மை கடைப்பிடிக்கப்படாவிட்டால் நமது இந்திய ஜனநாயகம் அழிந்துவிடும்.

இத்தகைய உயர்ந்த கருத்துக்களையும் நாம் மனதிலே கொள்ளும் அதே நேரத்தில்; தமிழ்நாட்டில் என்னென்ன நடக்கிறது என்பதையும் சீர்தூக்கிப் பார்க்கும்போது நமது மாநிலத்தில் ஜனநாயகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற சஞ்சலம் ஜனநாயகத்தில் அக்கறையுள்ள அனைவருக்கும் நிச்சயமாக ஏற்படும். தமிழகத்தில் ஜனநாயக மரபுகளையொட்டி இங்கே ஆளும் அதிமுகவை விமர்சிக்க முடியாது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்படி விமர்சித்தால் அவர்கள் மீது உடனடியாக அவதூறு வழக்குகள் பாயும்! எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் பத்திரிகைகளும்கூட அரசைப் பற்றியோ, அரசாளும் அதிமுகவைப் பற்றியோ, குறிப்பாக முதல் அமைச்சரைப் பற்றியோ சுதந்திரமாக கருத்துகளை வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால், அவர்கள் மீதும் பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்குகள் பாயும். இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற எந்தவொரு ஆட்சியிலும் எதிர்க்கட்சிகள் மீதும், ஏடுகள் மீதும் இத்தனை அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டது உண்டா என்றால் கிடையாது.

ஒருவேளை அதிலும் தாங்கள்தான் முதல் இடத்திலே இருக்க வேண்டுமென்று இந்த ஆட்சியாளர்கள் எண்ணுகிறார்களோ என்னவோ? அது மாத்திரமல்ல: தமிழகச் சட்டமன்றத்திலோ கேட்கவே வேண்டியதில்லை. அண்மையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க் கட்சியினர் எவ்வாறெல்லாம் நடத்தப்பட்டார்கள், பேசவிடாமல் தடுக்கப்பட்டார்கள், அதே நேரத்தில் ஆளுங்கட்சியினர் மனம்போன போக்கில், எந்த அளவிற்கு எதிர்க்கட்சியினரைச் சாடிப் பேசச் சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டார்கள் என்பதையெல்லாம் ஏடுகளின் வாயிலாக அனைவரும் அறிந்திருக்கிறார்கள். இங்கே சட்டமன்ற ஜனநாயகம் என்பதும் கேலிக்கூத்தாகி வருகிறது.

16.2.2013 அன்று சேலம் நாடாளுமன்ற கழகச் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்காகவும், இக்கூட்டத்தில் கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிடவும், சேலம் சீலநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள மதன்லால் சேட்டு வகையறாக்களுக்குச் சொந்தமான தனியார் நிலத்தில் கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வேண்டி 30.1.2013 அன்று மனு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் 11.2.2013 அன்று மாலை அன்னதானப்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் கௌரி திமுக செயல்வீரர்கள் கூட்டத்தைத் தடை செய்ய வேண்டுமென மனு அளித்திருப்பதாகக் கூறினார். அதனை அடுத்து மாவட்டக் கழக நிர்வாகிகள் அன்னதானப்பட்டி காவல் நிலையம் சென்று அனைத்து ஆவணங்களையும் காண்பித்து, மேற்படி புகார்தாரர் குறிப்பிடும் நிலத்திற்கும், கூட்டம் நடைபெறுகின்ற நிலத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தும், அனுமதி கொடுக்கவில்லை.

திமுக சார்பில் சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புவனேஸ்வரி, திமுக செயல்வீரர்கள் கூட்டத்தை யாரும் தடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்கான முறையான அனுமதி பெறப்பட்டு விதிமுறைகள் பின் பற்றப்பட்டுள்ளதால், கூட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற காவல் துறையின் கோரிக்கையையும் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

இது முதல் நிகழ்ச்சியல்ல; 15-12-2012 அன்று கரூரில் கழகப் பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த கூட்டத்திற்கும் அதிமுக அரசு தடை விதித்து, அதனை எதிர்த்து 11-12-2012 அன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவினை விசாரித்த நீதியரசர் சு. சுப்பையா அதே இடத்தில் கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

அதுபோலவே, 28-12-2012 அன்று தூத்துக்குடியில் நாடாளுமன்றத் தொகுதிச் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கேயும் ஆளும் கட்சியினரின் தூண்டுதலால், கூட்டம் நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் முறையிட்டு, நீதியரசர் ரவிச்சந்திர பாபு அளித்த தீர்ப்பில், அனுமதி கோரிய இடத்தில் ஏற்கனவே பல பொதுக்கூட்டங்கள் நடத்திட அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த இடம் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு மட்டுமே என மாநகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடம். மனுதாரரின் கோரிக்கையினை மறுப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்து; குறிப்பிட்ட இடத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்திட அனுமதி அளித்தார்.

இவ்வாறு ஸ்டாலின் கலந்து கொள்ளவிருந்த மூன்று இடங்களிலும் அதிமுக அரசு தடை விதிக்க முயன்று மூக்கறுபட்டிருக்கிறார்கள். சீப்பை ஒளித்து விட்டால் திருமணம் நின்று விடுமென்று முயலுகிறார்கள். அதுபோலவே 15-12-2012 அன்று காலையில் திருச்சியில் நடைபெற்ற ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்திற்கு அனுமதி அளித்து கூட்டம் முடிந்த பிறகு, மாவட்டக் கழகச் செயலாளர் கே.என். நேரு மீது மட்டும் 4 வழக்குகள் மற்றும் மாநகரக் கழகச் செயலாளர் அன்பழகன், மற்றும் கழக நிர்வாகிகள் மீது 22 வழக்குகள் விளம்பரத்தட்டிகள் வைத்ததற்காகத் தொடுத்தார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ்நாட்டில் ஜனநாயகம் என்பது இருக்கிறதா என்ற சந்தேகம்தான் எழுகிறது. கூட்டம் நடத்தத் தடை; நீதிமன்ற அனுமதியுடன் கூட்டம் நடந்துவிட்டால்; கூட்டம் முடிந்தபின் வழக்கு! நடைபெறும் ஜெயலலிதா ஆட்சியில், சகிப்புத் தன்மை, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை - என அரசியல் சட்ட ரீதியான ஜனநாயக உரிமைகள் அனைத்தும் நசுக்கப்படுகின்றன.

ஜனநாயக உரிமைகள் கானல் நீராகி வருகின்றன. எனினும், தடைகளைச் சட்ட ரீதியாக உடைத்து; தடைகள் உண்டெனினும் தடந்தோள்கள் உண்டு என்று கழகம் ஜனநாயகப் பண்பாடி தலை நிமிர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது! எப்படியும் இறுதியில்; நீதி வென்றே தீரும் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi slammed ADMK government for filing defamation case after case against opposition parties and magazines that criticise either the state government or the CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X