For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மரண தண்டனையை அரசியலாக்கும் காங்கிரஸ்! – சீமான் குற்றச்சாட்டு!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Seeman
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளவர்களை தூக்கில் போடுவதற்கு ஒரு முன்னோட்டமாகவே நான்கு அப்பாவித் தமிழர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற முயற்சி செய்கிறது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மும்பை தாக்குதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அஜ்மல் கசாப், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அப்சல் குரு ஆகியோரின் மரண தண்டனையை இரகசியமாக நிறைவேற்றிய மத்திய காங்கிரஸ் அரசு, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை வேகமாக தூக்கி போட்டுக் கொன்று, அதன் மூலம் நாட்டையும், சட்டத்தையும் காப்பதில் தாங்கள் உறுதியாக செயல்படுகின்றோம் என்று காட்டி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கபட்ட மீசை மாதையன், சைமன், ஞானபிரகாசம், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேரின் கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்து, அதனை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டு அவர்களை தூக்கில் போட்டு கொல்ல அனுமதி அளித்துள்ளதும் இதன் வெளிப்பாடுதான். இப்போது இந்த நால்வரின் மரண தண்டனையை கர்நாடக சிறையில் வைத்து வேகமாக நிறைவேற்றும் முயற்சியில் மத்திய காங்கிரஸ் அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த நான்கு பேர் மட்டுமல்ல, வீரப்பன் கண்ணி வெடி வைத்து காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதல் தொடர்பான வழக்கில், கர்நாடக மாநில காவல்துறை 123 பேர் மீது வழக்குத் தொடர்ந்தது. மனித உரிமைகளை, முறையான சட்ட வழிகளை நிராகரிக்கும் காட்டுமிராண்டித்தனமான சட்டம் என்று வர்ணிக்கப்பட்டு, பிறகு மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்ட தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு நடத்தப்பட்டது.

தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைப்பதற்கு பதிலாக அதனை மரண தண்டனையாக மாற்றித் தீர்ப்பளித்தது இந்திய உச்ச நீதிமன்றம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில் கூட, தடா சட்டத்தின் கீழ் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், அதன் அடிப்படையில் அளிக்கபட்ட மரண தண்டனையை மட்டும் உறுதி செய்தது.

வீரப்பன் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் இவர்களெல்லாம் ஈடுபட்டார்கள் என்பதற்கு நேரடியான சாட்சியங்களோ, ஆதாரங்களோ இல்லாத நிலையிலும் அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றத் துடிக்கிறது மத்திய காங்கிரஸ் அரசு. இதனை தமிழர்களாகிய நாம் எப்படி ஏற்க முடியும்?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த 10 ஆண்டுகளில், அயல் நாட்டு நிறுவனங்கள், இந்த நாட்டின் பெரு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் மட்டுமே உதவிய காங்கிரஸ் அரசு, இந்திய மக்களில் பாதிப் பேரை பட்டினி போட்டு வதைத்தது. சாதனை என்று சொல்லிக்கொள்வதற்கு ஒன்றுமே இல்லாத நிலையில், மனிதாபிமானம் காட்டி, மன்னிக்க வேண்டிய அப்பாவிகளையெல்லாம் தூக்கில் போட்டுக் கொன்று, சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியதாக கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது காங்கிரஸ் கட்சி.

தாங்கள் முஸ்லீம்கள், இந்துக்கள் என்று பாகுபாடு பார்ப்பதில்லை என்பதைக் காட்டுவதற்கே இப்போது இந்த 4 தமிழர்களின் மரண தண்டனையை நிறைவேற்ற முற்பட்டுள்ளார்கள் என்பதையும் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைக்கு இந்த நான்கு அப்பாவித் தமிழர்களையும் தூக்கிலிட்டுக் கொல்ல முற்பட்டுள்ள காங்கிரஸ் அரசு, ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளவர்களை தூக்கில் போடுவதற்கு ஒரு முன்னோட்டமாகவே இந்த தண்டனை நிறைவேற்றத்தை செய்கிறது இவ்வாறு சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Naam Thamizhar organizer Seeman has said that congress party is politicizing the death sentences to gain political mileage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X