For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மூலம் ஏழைகள் வயிற்றிலடிக்கும் மத்திய அரசு! - ஜெயலலிதா

By Shankar
Google Oneindia Tamil News

Jayalalithaa
சென்னை: பெட்ரோல், டீசல் விலையௌ மத்திய அரசு மீண்டும் உயர்த்தியிருப்பது ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல் என்பதுடன் விலைவாசியும் உயர வழிவகுக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

தகவல் தொழில்நுட்பத் துறை, விளையாட்டுத் துறை, பாதுகாப்புத் துறை என பல்வேறு துறைகளிலும் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஒரு பக்கம் ஊழல் தலைவிரித்து ஆடுகின்ற சூழலில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்லும் வகையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியிருப்பது ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.

சில்லறை விற்பனையில் டீசலின் விலையை லிட்டருக்கு 55 காசு என்ற அளவுக்கும், மொத்த விற்பனையில் டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.11.50 காசு என்ற அளவுக்கும் உயர்த்தி கையெழுத்திட்ட பேனா மையின் ஈரம் உலருவதற்குள், மீண்டும் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 50 காசு என்ற அளவிற்கும், டீசலின் விலையை லிட்டருக்கு 45 காசு என்ற அளவுக்கும் மத்திய அரசு உயர்த்தியிருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் தற்போதைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணய கொள்கை மற்றும் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது, அதன் அடிப்படையில் தற்போது விலை உயர்ந்திருப்பது ஆகியவை கட்டுக்கடங்காமல் விலைவாசி உயர்வதற்கு வழிவகுத்துள்ளன.

சர்வதேச விலை

பெட்ரோல், டீசல், விலைக் கொள்கையில், மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்து, அதனைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும். தற்போது நிர்ணயம் செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கேற்ப நிர்ணயிக்கப்படுகிறது.

நம் நாட்டில் கிடைக்கும் 25 விழுக்காடு கச்சா எண்ணெய், அதனை சுத்திக்கரிக்க ஆகும் செலவு ஆகியவற்றின் அடிப்படையிலும், வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அதனை சுத்திகரிக்க ஆகும் செலவு, நிலையான அன்னிய செலாவணி மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டால், குறைவான விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மக்களுக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

சமநிலை விலை

ஆனால், இவ்வாறு செய்யாமல், தற்போதைய டீசல் இறக்குமதி சமநிலை விலை, என்னவாக இருக்கும் என்பதையும்; ஏற்றுமதி சமநிலை விலை, என்னவாக இருக்கும் என்பதையும் கணக்கிட்டு; இந்த இரண்டுக்குமான குறிப்பிட்ட சதவித அடிப்படையில், தொழில் சமநிலை விலை, கணக்கிடப்பட்டு; அதன் அடிப்படையில், இந்தியாவில் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இது போன்ற விலை நிர்ணயம் காரணமாக மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் ஈட்டுகின்றன.இந்த லாபம் ஏழை, எளிய மக்களிடமிருந்து சுரண்டப்படுகின்றது. மத்திய அரசின் இது போன்ற தவறான பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் காரணமாக விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது.

தவணை முறை நஞ்சு

மாதா மாதம் டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசின் கொள்கை ஏழை எளிய மக்களுக்கு தவணை முறையில் திணிக்கப்படும் நஞ்சு ஆகும். தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வின் விளைவாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் மீண்டும் கடுமையாக உயரும்.

அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகள் ஆகியவற்றின் விலைகள் சாதாரண மக்களால் வாங்க இயலாத நிலைக்கு உயர்ந்துவிடக் கூடும். இது மட்டுமல்லாமல், தனியார் பேருந்து மற்றும் வாகனக் கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற உத்தரவையும், தற்போதைய விலை உயர்வையும் உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Chief Minister Jayalalithaa has strongly condemned the petrol - diesel prices hike of Union Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X