For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட் தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது: விஜயகாந்த், ராமதாஸ், வைகோ

By Siva
Google Oneindia Tamil News

Rail budget disappoints TN: Vijayakanth, Vaiko, Ramadoss
சென்னை: மத்திய ரயில்வே பட்ஜெட் தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முன்பதிவு கட்டணம், தட்கல் கட்டணம், டிக்கெட் ரத்து செய்யும் கட்டணம் போன்றவற்றோடு, சரக்குகளுக்கான கட்டணமும் 5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே உயர்ந்துள்ள விலைவாசி மேலும் உயரும். ரயில்வே துறையிடம் இருந்து பயணிகள் எதிர்பார்க்கும் சேவைகளில் எத்தகைய முன்னேற்றமும் இல்லை.

ரயில்வே கட்டணங்கள், சரக்கு கட்டணங்கள் ஆகியவற்றை தமிழ்நாட்டில் இருந்து வசூலிப்பது என்பது மத்திய அரசுக்கு இனிப்பாக இருக்கிறது. ஆனால், இங்கே உள்ள பயணிகளின் மேம்பாட்டுக்காக கூடுதல் ரயில்களை விடுவதோ, புதிய ரயில் பாதைகள் அமைப்பதோ, ஏற்கனவே உள்ள ரயில் பாதைகளை இரட்டிப்பதோ, கூடுதல் பெட்டிகளை இணைப்பதோ, இருக்கின்ற ரயில் பாதையை நீட்டிப்பதோ, மீட்டர் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதோ, மின் மயமாக்குவதோ என்றால் மத்திய அரசிற்கு கசக்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை:

தொடர்வண்டிக் கட்டணங்கள் கடந்த ஜனவரி மாதம் உயர்த்தப்பட்ட நிலையில் டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி, பயணிகள் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படுமோ என மக்கள் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில், கட்டண உயர்வு தவிர்க்கப்பட்டிருப்பது நிம்மதியளிக்கிறது.

அதேநேரத்தில், மக்கள் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் தட்கல் முன்பதிவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதும், அதிவிரைவு வண்டிகளுக்கான முன்பதிவு கட்டணம், முன்பதிவு ரத்து கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டிருப்பதும் மக்களை பாதிக்கும். டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப சரக்கு கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விலைகள் உயரக்கூடும். இந்த கட்டண உயர்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழகத்திற்கு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 11 ரயில்களில் 4 ரயில்கள் இன்னும் இயக்கப்படாத நிலையில், அவற்றையும், புதிய ரயில்களையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 5 ரயில்களின் இயக்க நாட்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. எனினும், இவற்றில் 3 ரயில்கள் 100 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் என்பதால் இந்த அறிவிப்பு வெறும் கண் துடைப்பே. புதிய ரயில்கள் உள்ளிட்ட சில அறிவிப்புகள் மகிழ்ச்சியளித்தாலும், தமிழகத்தின் மிக முக்கியமான தேவைகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை:

தமிழ்நாட்டில் ரயில் பாதைகளில் முதுகெலும்பாக உள்ள எழும்பூர்-நாகர்கோவில்-கன்னியாகுமரி வழித் தடத்தில் நெரிசலைக் குறைக்க இரண்டாவது அகலப்பாதைத் திட்டத்தை விரைந்து முடிக்க நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் இல்லை. மேலும், விழுப்புரம்-திண்டுக்கல், சென்னை - தூத்துக்குடி இடையே இரண்டாவது பாதைத் திட்டம் நிறைவேற்றவும், ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இராமநாதபுரம்-கீழக்கரை-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை வழித்தடத்தில் ரயில் பாதை அமைக்கவும் ரயில்வே அமைச்சர் அக்கறை செலுத்தவில்லை. பழைய மீட்டர் கேஜ் பாதைகளை அகலப் பாதையாக மாற்றி புதிய வழித்தடங்கள் அமைப்பதிலும் தமிழ்நாட்டிற்கே பெரும் வஞ்சகம் இழைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், டீசல் விலை உயர்வின் காரணமாக ரயில் எரிபொருள் செலவு அதிகரிப்பதால் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப அவ்வப்போது சரக்குக் கட்டணமும் உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார். இது பயணிகள் கட்டணத்தையும் படிப்படியாக உயர்த்த ஏதுவாக செய்யப்பட்டிருக்கும் மோசடி அறிவிப்பாகும். மத்திய ரயில்வே பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் தந்துள்ளது.

English summary
TN leaders told that railway budget disappoints the people of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X