இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியாவும் ஒத்துழைக்க வேண்டும்-கருணாநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Karunanidhi
சென்னை: சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நடத்திய 'இலங்கை தூதரக முற்றுகை" போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:

கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இன்றைய தினம் டெசோ சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுவதைப் பற்றி?

பதில்: தமிழகம் தி.மு.கழகம் மட்டுமின்றி டெசோ இயக்கம் போல, இலங்கைத் தமிழர்பால் பற்று கொண்டவர்கள் அனைவரும் தனித்தனியாகவும், இணைந்தும் பல போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தப் போராட்டங்கள் தமிழ்நாட்டிலே ஒரு கட்சியின் சார்பாக மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாகவும் எதிரொலிக்கிறது என்பதை எண்ணிப் பார்த்து, இந்திய அரசு இனிமேலாவது ஈழத் தமிழர்களை வாழ வைக்க முன்வரவேண்டும். பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

பதில்: தீர்மானம் நிச்சயமாக வெற்றி பெறும் என் பதில் நம்பிக்கை இல்லாமல் இல்லை. அதற்கு இந்தியாவும் ஒத்துழைக்க வேண்டும் என்பது தான் எங்களின் அழுத்தமான கோரிக்கை.

கேள்வி: டெசோ அமைப்பின் செயல்பாடுகள் முறையாக ஈழத்தமிழர்களுக்கு உதவுவதாக உள்ளதா?

பதில்: டெசோ அமைப்பின் செயல்பாடுகள் வெறும் கூக்குரலாக இல்லாமல் முறைப்படி, சட்டப்படி என்ற வகையில் எல்லா நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்து நிலைமைகளை விளக்கியிருக்கிறோம். அவர்களும் இந்த அணுகு முறையை அலட்சியப்படுத் தாமல், தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். மற்ற நாடுகளின் தூதுவர்களும் எங்கள் கோரிக்கையை ஏற்று வழி மொழிந்திருக்கிறார்கள். அவர்களின் இந்த ஆதரவு வாக்கெடுப்பு நடைபெறுகிற நேரத்தில் பயன்படும் என்று நம்புகிறேன். டெசோ அமைப்பின் சார்பாக ஐ.நா. மன்றத்திற்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் நேரில் சென்று மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழர்களின் நிலைமைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

கேள்வி: இன்று டெசோ சார்பில் நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டத்தில் பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் பேர் வரை வள்ளுவர் கோட்டத்திற்கு முன்னால் கலந்து கொண்டிருக்கிறார்கள். இது டெசோ அமைப்பின் வளர்ச்சியைக் காட்டுகிறதா?

பதில்: டெசோ மீண்டும் புத்துயிர் பெற்று, கடந்த சில மாதங்களாக இடை விடாமல் இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து மேற் கொண்டுவரும் முயற்சிகள் காரணமாகத் தான் இன்று இந்த முற்றுகைப் போராட்டம் இந்த அளவிற்கு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. வேறு சிலரும் ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களுக்கும் எங்களுடைய ஆதரவு உண்டு.

இவ்வாறு கருணாநிதி பேட்டி அளித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The DMK in Tamil Nadu is mounting pressure on the Centre to vote against Sri Lanka at the United Nations Human Rights Council (UNHRC). The US is moving a motion against Sri Lanka on war crimes and rights violations against Tamil civilians during the final phase of the war against the Liberation Tigers of Tamil Eelam (LTTE).
Please Wait while comments are loading...