For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேண்டாத விமர்சனம் செய்து, குட்டையைக் குழப்புவது சரியா.. ராமதாஸுக்கு கருணாநிதி சூடு

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இங்கேயுள்ள சிலர்- ஏதோ தங்களையே பெரிய வல்லரசுகள் என்பதைப் போல கருதிக்கொண்டு- எதற்கெடுத்தாலும் குந்தகம் சொல்வது என்ற முறையில்; அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் அது சரியில்லை, இது சரியில்லை என்றெல்லாம் வேண்டாத விமர்சனம் செய்து குட்டையை குழப்பப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள கடித வடிவ அறிக்கை:

ஈழத் தமிழர்களின் நலன் காப்பதற்காக டெசோ அமைப்பை மீண்டும் உருவாக்கி, இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், சிங்கள மயமாக்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி அவ்வப்போது விரிவாக கலந்தாலோசனை செய்து உரிய தீர்மானங்களை நிறைவேற்றி இந்திய அரசுக்கு அனுப்பிவைத்தோம்.

அதன் தொடர்ச்சியாக திமுக எம்.பி.க்கள் கொண்ட குழுக்களை அமைத்து டெல்லியிலுள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்களில் டெசோ மாநாட்டு தீர்மானங்களை நேரடியாக கொடுத்து அவர்களின் ஆதரவையும் கோரினோம்.

திமுக சார்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதம் கோரி, அந்த விவாதத்தின்போது அனைத்து கட்சி தலைவர்களும் திமுக கருத்தினையொட்டி பெரிதும் வாதாடினர்.

ஆனால் மத்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பதிலளித்து பேசும்போது, ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் குறித்து, அமெரிக்காவுடன் இலங்கை அரசு பேச்சு நடத்திய பிறகு, அந்த தீர்மானத்தை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து இந்திய அரசு முடிவு செய்யும் என்று சொன்னார். ஆனால் இந்தியாவின் இந்த யோசனையை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது.

இந்தியா வழங்கும் ஆலோசனையை இலங்கை ஏற்றுக்கொள்ளுமென்று மத்திய அரசிலே உள்ளவர்கள் எந்த அடிப்படையில் நம்பிக்கை கொண்டார்கள் என்று நமக்கு புரியவில்லை. சிங்கள அரசு, இந்திய அரசுக்கு நீண்ட காலமாக கற்பித்து வரும் பாடத்தை மத்திய அரசிலே உள்ளவர்கள் எப்படித்தான் மறந்தார்களோ?

பண்டாரநாயகா-செல்வநாயகம் ஒப்பந்தம் டட்லி - செல்வநாயகம் உடன்பாடு, ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்று எந்த ஒப்பந்ததையும் உதாசீனப்படுத்திய இலங்கை அரசை; பண்டித நேருவையும், இளைய தலைவர் ராஜீவ் காந்தியையும் அவமானப்படுத்திய சிங்கள அரசை இன்னமும் இந்தியா நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டு, அவர்களைக் காப்பாற்ற நினைக்கிறது என்பதுதான் நமக்கு புரியாத வேதனையாக நீடித்து வருகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை பற்றிய நிலைப்பாட்டை மத்திய அரசு எப்போது உறுதியாக அறிவிக்கப்போகிறது என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே நீடித்து வருகிறது.

இத்தகைய சூழலில், ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் அமெரிக்கா தாக்கல் செய்திருக்கும் இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம், ஈழத் தமிழர்களுக்கு பயனளிக்காது என்றும்; இலங்கையை தண்டிக்கும் அளவிற்கு அதிலே தீவிரமாக எதுவும் கூறப்படவில்லை என்றும்; டெசோ நடத்திய முழு அடைப்பு போராட்டம் பிசுபிசுத்து போனது என்றும் சில அரசியல் வாதிகள் கருத்து வெளியிட்டு தாங்களும் இருக்கிறோம் என்று காட்டி வருகிறார்கள்.

அமெரிக்காவின் தீர்மானமே உறுதியானது - இறுதியானது - தீவிரமானது என்று டெசோ அமைப்பு கருதி எப்போதும் அறிவிக்கவில்லை. எனினும் அந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று டெசோ கோரிக்கை வைப்பதற்கு சில அடிப்படை காரணங்கள் இருக்கின்றன.

உலக நாடுகளுக்கெல்லாம் பொதுவானதொரு மன்றத்தில், இலங்கைக்கு எதிரான முதல் நகர்வை ஏற்படுத்தியது அமெரிக்க வல்லரசு தான். அந்த நகர்வுதான் உலகெங்கிலும் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிய அக்கறையையும், பரிவையும் - இலங்கை சிங்கள அரசுக்கு அதிர்ச்சியையும், பயத்தையும் உருவாக்கியிருக்கிறது.

டெசோ அமைப்பு நேரடியாக ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதையும் முன் மொழிந்திடும் வாய்ப்பினை பெற்றிருக்கவில்லை. பொது வாக்கெடுப்பு குறித்த தனி தீர்மானம் ஒன்றினை இந்தியாவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னெடுத்துச் சென்று, ஈழத் தமிழர் வாழ்வில் விடிவு காண வேண்டும்; குறைந்தபட்சம் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தையாவது உரிய திருத்தங்களுடன் இந்தியா ஆதரித்திட வேண்டும்; என்று டெசோ சார்பில் தொடர்ந்து குரலெழுப்பியும், கோரிக்கைகள் கொடுத்தும் வருகிறோம்.

இன்றைய சூழலில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதற்கும், இந்தியாவே தனியானதொரு தீர்மானத்தை கொண்டு செல்வதற்கும் அழுத்தம் தருவதன்னியில்; நாமே உலக நாடுகள் அவையில் தீர்மானத்தை முன்மொழிய முடியுமா; நாமே நேரடியாக இலங்கைக்கு கெடு விதித்திட இயலுமா; நாமே படை திரட்டிக்கொண்டு, இலங்கையைப் போருக்கு அழைப்பது சாத்தியமா; என்பதையெல்லாம் இங்குள்ள சில அரசியல்வாதிகள் ஆழ்ந்து சிந்தித்து பார்க்க வேண்டும்.

அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை முன் மொழிய அவர்களாகவே முன் வருகின்ற நேரத்தில்- அந்த தீர்மானத்தை 30-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஆதரிக்க தயாராக இருக்கும்போது ஈழத் தமிழர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களை முழுமையாக துடைத்திட உடனடியாக இயலாவிட்டாலும், அவர்களுக்கு ஆறுதல் வழங்கிடும் வகையிலேதான், டெசோ அமைப்பு, அமெரிக்கா, தீர்மானத்தை முன்மொழிவதை வரவேற்றும், அதை இந்திய அரசு உரிய திருத்தங்களோடு ஆதரிக்க முன் வர வேண்டுமென்றும் கேட்டு வருகிறோம்.

ஆனால் இங்கேயுள்ள சிலர்- ஏதோ தங்களையே பெரிய வல்லரசுகள் என்பதைப் போல கருதிக்கொண்டு- எதற்கெடுத்தாலும் குந்தகம் சொல்வது என்ற முறையில்; அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் அது சரியில்லை, இது சரியில்லை என்றெல்லாம் வேண்டாத விமர்சனம் செய்து குட்டையை குழப்பப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தான் டெசோ பந்த்தைக் கடுமையாக விமர்சித்தும், அமெரிக்க தீர்மானத்தை விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
DMK president Karunanidhi has slammed PMK founder Dr Ramadoss for his comment on Teso bandh and US resolution on Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X