For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2ஜி ஊழலில் திருப்பம்: ராசா எடுத்த முடிவுகளுக்கு பிரதமர் தான் ஒப்புதல் அளித்தார்-புதிய ஆதாரங்கள்!!!

By Chakra
Google Oneindia Tamil News

Manmohan Singh with A.Raja
டெல்லி: திமுகவைச் சேர்ந்த ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் திமுக எம்பி கனிமொழியும் கைதானார். மேலும் தயாநிதி மாறனும் பதவி விலக நேர்ந்தது. பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற கொள்கை (first-come-first-served policy) அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியான வினோத் ராய் குண்டைப் போட்டார். ஆனால், இந்தக் கணக்கு தவறானது, இந்த விவகாரத்தில் ரூ. 2,500 கோடி வரையே நஷ்டம் ஏற்பட்டது என்றும், இந்த விஷயத்தில் வினோத் ராய் மனதுக்குத் தோன்றியதை நஷ்டமாகச் சொல்விட்டார் என்று அதே கணக்கு தணிக்கை அலுவலகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி வினோத் ராய் மீதே குற்றம் சாட்டியதும் நடந்தது.

மேலும் நஷ்டத்தை முடிந்த அளவுக்கு உயர்த்திக் காட்டச் செய்ததில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் மறைமுக உள்ளடி வேலைகளும் வெளியில் தெரிய வந்தன.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் ராசா தான் எல்லா முடிவுகளையும் எடுத்தார், பிரதமர் சொல்லியும் கேட்கவில்லை, இதில் சில விஷயங்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கே தெரியாது என்று மத்திய அரசும் சிபிஐயும் நீதிமன்றத்தில் கூறி வருகின்றன. இதேரீதியில் தான் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரான வாகனாவதியும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் (ஜேபிசி) வாக்குமூலம் தந்துள்ளார்.

அதாவது ராசா மட்டுமே இந்தத் தவறுகளுக்குக் காரணம் என்று அவர் தலையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டது மத்திய அரசு.

இதையடுத்து என்னையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்று ராசா விடுத்த கோரிக்கையை அந்தக் குழுவின் தலைவரான கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பியான பி.சி.சாக்கோ மறுத்து வருகிறார். எழுத்துப்பூர்வமாக கொடுத்தால் போதும் என்று சாக்கோ கூறுவதை ராசா ஏற்க மறுத்துவிட்டார்.

ராசா நேரில் வந்து நின்று, குழுவில் உள்ள எதிர்க் கட்சி எம்பிக்களும் திமுக எம்பிக்களும் கேள்விகளை வைக்க, இந்த விவகாரத்தில் பிரதமருக்கு இதெல்லாம் தெரியும் என்று ராசா பதில் தந்துவிட்டால் நிலைமை சிக்கலாகுமே என்ற பயம் மத்திய அரசிடம் உள்ளதாகத் தெரிகிறது.

இந் நிலையில், 2ஜி விவகாரத்தில் முறைகேடு நடப்பதற்கு முன் ராசாவின் சில தவறான முடிவுகளுக்கு பிரதமரும் பிரதமர் அலுவலகமும் அனுமதி தந்துள்ள விவரம் இப்போது வெளியாகி வருகிறது.

இது தொடர்பாக இந்து நாளிதழ் பரபரப்பான விவரங்களை, பிரதமர் அலுவலக பைல்களின் காப்பிகளையே ஆதாரமாக வைத்து வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக ராசா எழுதிய கடிதத்தை பிரதமர் அலுவலகத்தின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ.நாயர் மற்றும் செயலாளர் புலோக் சட்டர்ஜி ஆகியோர் டிசம்பர் 29, 2009 அன்று ஆய்வு செய்து, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய ராசா எடுத்த முடிவுக்கு பிரதமரின் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ள விவரம் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் ராசாவின் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருந்து இருப்பது தெரிய வருகிறது.

இந்த புதிய ஆவணங்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

தங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பிரதமர் அலுவலகத்திடம் விளக்கம் கேட்டு இந்து நாளிதழ் அனுப்பிய கடிதங்களுக்கு இதுவரை பதிலும் வரவில்லையாம்.

இந்த புதிய ஆவணங்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக பிரதமருக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

ஆனால், எனக்கு எதுவும் தெரியாது, எல்லாமே ராசா எடுத்த முடிவு தான் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே எஸ்கேப் ஆனது மாதிரி, இப்போதும் கூட இது எனது அலுவலக அதிகாரிகள் எடுத்த முடிவு, இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கூறுவாரோ என்னவோ...

இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்தின் பைல்களின் (PMO File No 180/31/C/26/OS.ESI, Vol. IV) நகல்கள் இந்து நாளிதழுக்குக் கிடைத்துள்ளன.

முதலில் வருபவர்களுக்கே முன்னிரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரத்தை விற்கப் போகிறேன் என்று சொல்லி அனுமதி கேட்டு 2007ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ராசா அனுப்பிய கடிதத்தைப் படித்த பிரதமர் மன்மோகன் சிங், இது குறித்து அவசரமாக பரிசீலிக்குமாறு 27ம் தேதி தனது அலுவலகத்தின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ.நாயர் மற்றும் செயலாளர் புலோக் சட்டர்ஜி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து ராசாவின் கடிதத்தைப் படித்த இரு அதிகாரிகளும் ராசாவின் 4 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதோடு, இது தொடர்பாக பிரதமருக்கு சில யோசனைகளையும் முன் வைத்துள்ளனர்.

மேலும் ராசாவின் முடிவுகள் குறித்து புலோக் சாட்டர்ஜியும் தொலைத் தொடர்புத்துறையின் புதிய செயலாளராக பதவியேற்ற சித்தார்த் பெகுராவும் (இவரும் 2ஜி வழக்கில் கைதானார்) ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.

இந்த ஆலோசனை ஒரு பக்கம் நடக்க, ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து ஒரு விரிவான விளக்கம் கேட்டு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டதன் பேரில், அப்போது ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கான அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருந்த வெளியுறவு அமைச்சர் (இப்போதைய ஜனாதிபதி) பிரணாப் முகர்ஜி ஒரு விளக்கத்தை "Top Secret" என்ற நோட்டுடன் பிரதமர் அலுவலகத்திடம் தந்துள்ளார். இந்த விளக்கம் பிரதமரிடம் தரப்பட்டதும் டிசம்பர் 26ம் தேதி தான். இந்த விளக்கம் அடங்கிய பைலுடன் ராசாவின் 6 பக்க கடிதமும் பிரதமர் அலுவலகத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விளக்கத்தை ஆய்வு செய்த புலோக் சாட்டர்ஜி ஸ்பெக்ட்ரத்தை விற்பது தொடர்பாக தனது பரிந்துரைகள் அடங்கிய comparative chart-ஐ உருவாக்கி அதை டி.கே.ஏ. நாயருக்கு டிசம்பர் 31ம் தேதி அனுப்பியுள்ளார்.

இந்த 4 பக்க சார்ட், புதிய 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் விற்பனை தொடர்பானது. இதில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதைத் தான் ராசா பின்னர் அமலாக்கியுள்ளார்.

ஆனால், இதைத் தான் ராசா (மட்டும்) செய்த ஊழல் என்று 2011ம் ஆண்டு சிபிஐ தாக்கல் செய்ய குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் அலுவலகம் ஒப்புக் கொண்ட ஒரு விஷயத்தைத் தான் சிபிஐ குற்றமாக பதிவு செய்துள்ளது.

இந்த குற்றப் பத்திரிக்கையில் அடிப்படையில் தான் 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையையே ராசா திருத்தியுள்ளார். விண்ணப்பம் செய்ததை அடிப்படையாக வைத்து முதலில் வந்தவர்கள் என்பதைத் தீ்ர்மானிப்பதற்கு பதிலாக, கட்டணம் செலுத்தியது உள்ளிட்ட புதிய நிபந்தனைகளை ராசா சேர்த்துள்ளார். இதையும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த திருத்தம் தான் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
New evidence shows that Prime Minister Manmohan Singh, far from being “at arm’s length” from ex-Telecom Minister A. Raja’s controversial 2G decisions, had directed officials in the PMO to “examine urgently” Mr. Raja’s letters outlining his intended decisions which eventually led to the 2G scam on January 10, 2008. Investigation now reveals that senior PMO officials had supported several of Mr. Raja’s acts on file, well before the 2G scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X