• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போலீசுக்கு எதிர்ப்பு தெரிவித்த மருத்துவர் கருணாநிதி கைது- திமுக தலைவர் கருணாநிதி கண்டனம்!

By Mathi
|

Karunanidhi
சென்னை: மருத்துவமனையில் ஐசியுவுக்குள் பூட்ஸ் காலோடு செல்ல போலீசுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக மருத்துவர் கருணாநி கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

டாக்டர் கருணாநிதி! அவருடைய வயது 70! அமைதியும் அடக்கமும் நிறைந்தவர்! மருத்துவத் துறை பேராசிரியராக அரசுப் பணியிலே நீண்ட காலம் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றவர்! தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் "தினத்தந்தி" நாளிதழின் உரிமையாளரான திரு. சிவந்தி ஆதித்தனின் சிறப்பு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். பாவம்! என் பெயரைப் பெற்றுள்ள காரணத்தாலோ என்னவோ: 27-3-2013 அன்று அதிமுக அரசின் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு அன்று இரவு முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பில் 'லாக்கப்பில்' கழித்திருக்கிறார். அவர் செய்த குற்றம் என்ன?

டாக்டர் கருணாநிதி மீது சப் இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி என்பவர் புகார் கொடுத்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா அந்த மருத்துவமனைக்கு வருவது பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்ற போது டாக்டர் அவரைத் திட்டியதாகவும், தள்ளியதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்திருக்கிறார். உடனடியாக அதிமுக அரசின் காவல்துறை டாக்டர் கருணாநிதி மீது அரசுப் பணியில் தன்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும் போது அதிகாரியை அடித்துக் காயப்படுத்துதல், அரசு அதிகாரி மீது பலமாகத் தாக்குதல், தடுத்து நிறுத்துதல், பணியாற்ற விடாமல் குறுக்கீடு செய்தல் போன்ற கடுமையான இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததோடு அந்த மருத்துவர் கருணாநிதியை 18வது மெட்ரோபலிடன் நீதிபதி ஆனந்த வேலு முன்னால் ஆஜர் செய்து புழல் சிறைச்சாலையிலே கொண்டு போய் அடைத்திருக்கிறார்கள்.

70வயதான ஒரு மூத்த மருத்துவருக்கு அதிமுக ஆட்சியில் என்ன கதி தெரிகிறதா? அதுவும் ஜெயலலிதா, மருத்துவமனைக்குச் சென்று சிவந்தி ஆதித்தன் உடல்நிலையைப் பார்த்துவிட்டு வந்த அன்று இரவே இவ்வளவும் நடைபெற்றிருக்கிறது.

திருச்சியில் ராமஜெயமும் மதுரையில் பொட்டு சுரேஷும் படுகொலை செய்யப்பட்டு மாதங்கள் எத்தனை ஆகிறது? அவர்களைக் கொன்ற குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க அதிமுக அரசின் காவல்துறைக்கு இயலவில்லை. ஆனால் ஒரு வயதான மூத்த மருத்துவர் மீது இந்த அளவிற்குத் தீவிரமாக இரவோடு இரவாக கைது செய்து புழல் சிறையிலே அடைக்கும் அளவிற்கு அவர் செய்த குற்றம் என்ன?யாரையாவது கொலை செய்துவிட்டாரா? கொள்ளை அடித்து விட்டாரா? அல்லது யாரையாவது கடத்தித் தான் சென்றுவிட்டாரா?

அவர் செய்த குற்றம் எல்லாம், முதலமைச்சர் அந்த மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு, அந்த குறிப்பிட்ட சப் இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி என்பவர் மருத்துவமனைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க வந்த போது டாக்டர் கருணாநிதி, தீவிரச் சிகிச்சைப் பிரிவிலே (ஐசியு) உள்ள சிவந்தி ஆதித்தன் அறைக்குள் பூட்ஸ் அணிந்த கால்களுடன் உள்ளே செல்ல வேண்டாம் என்று அந்தக் காவல்துறை அதிகாரியிடம் கூறியதுதான் குற்றமாம்! அதற்காகத்தான் இரவோடு இரவாக அந்த வயதான மருத்துவர் கைது செய்யப்பட்டு நீதிபதியின் முன்னால் உடனடியாகக் கொண்டு போய் ரிமாண்ட் செய்து, அன்றிரவே அவசர அவசரமாக புழல் சிறையிலே அடைத்திருக்கிறார்களாம். என்ன கொடுமை இது? தமிழ்நாட்டிலே என்ன நடக்கிறது?"இம்" என்றால் சிறைவாசம் "ஏன்"என்றால் வனவாசமா?இதுதான் அதிமுக ஆட்சி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் இலட்சணமா? ஒரு மூத்த மருத்துவர் மீது இந்த அளவுக்குக் கடுமையாக காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இதுவே கழக ஆட்சியிலேயே நடைபெற்றிருக்குமேயானால் "காவல்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் பதவியைவிட்டு விலகவேண்டும்"என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்திருப்பார்! ஆனால் நான் அப்படியெல்லாம் கூற விரும்பவில்லை. தவறுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அந்த மருத்துவர் டாக்டர் கருணாநிதி மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கினை உடனடியாக எந்தவித நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டும் என்றும் அதிமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
English summary
DMK leader M Karunanidhi has condemned the arrest of Senior Doctor Karunanidhi who is in working at private hospital.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X