For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினி காட்டும் நல்ல முன்னுதாரணத்தை தனுஷ் போன்றவர்கள் பின்பற்ற வேண்டும்! - அன்புமணி

By Shankar
Google Oneindia Tamil News

Anbumani Ramadass
சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் புகைப் பிடிப்பதை விட்டுவிட்ட ரஜினி, மற்ற இளைஞர்களையும் புகைப் பழக்கத்தை கைவிடுவிடுமாறு பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த நல்ல உதாரணத்தை தனுஷ் போன்ற நடிகர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

தனுஷ் நடிக்கும் மரியான் திரைப்பட விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சி இருப்பதாகவும், இது அரசின் சட்ட விதிகளை மீறுவதாக உள்ளது என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாரத் பாலா இயக்கத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் 'மரியான்' எனும் திரைப்படத்தின் விளம்பரம் நாளிதழ்களில் 7. 4. 2013 அன்று வெளியாகியுள்ளது.

'மரியான்' திரப்படத்தின் இந்த விளம்பரத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைபிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெறுவது இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

புகைபிடித்தல் ஒரு கொடிய உயிர்க்கொல்லும் பழக்கம். இந்திய நாடு முழுவதும் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புகையிலைத் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உரிய வயதாகும் முன்பே இறக்கின்றனர். ஆண்டுதோரும் லட்சக்கணக்கான தமது வாடிக்கையாளர்கள் இறந்துபோவதால் புதிய வாடிக்கை யாளர்களைப் பிடிக்க வேண்டியக் கட்டாயத்தில் சிகரெட், பீடி நிறுவனங்கள் உள்ளன. தனது வாடிக்கையாளரைத் தானே கொன்றுவிடுவதால் பல கோடி செலவிட்டு மறைமுக விளம்பரங்கள் மூலம் புதிய வாடிக்கையாளரைப் பிடிக்கின்றனர்.

சிறுவர்களையும், இளஞர்களையும் புகைபிடிக்கும் கொடிய பழக்கத்திற்கு அடிமையாக்க சிகரெட், பீடி நிறுவனங்கள் முயல்கின்றன. சட்டபூர்வமான விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டுவிட்டதால் திரைப் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றன.

திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தும் அரசாணை 14.11.2011 அன்று முதல் செயல்பாட்டில் உள்ளது.(இந்திய நலவாழ்வுத்துறை அமைச்சக அரசாணை எண்: GSR 786, நாள் 27.10.2011)

இந்த அரசாணையின் பிரிவு 9 (2) இல் திரைப்பட விளம்பரங்களில் எந்தவிதமான புகையிலைப் பொருளும் இடம்பெறக்கூடாது. புகைபிடிக்கும் காட்சிகளும் இடம்பெறக்கூடாது என விளம்பரங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் 8.3.2012 ஆம் நாளிட்ட கடிதத்தில் 'திரைப்பட விளம்பரங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் அனுமதிக்கப்படாது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

7.12.2011 அன்று தமிழ்நாடு அரசின் 'புகையிலை எதிர்ப்புக் குழுக் கூட்டம்' கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளைக் கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணை செயல்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசின் நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், மத்திய திரைப்பட தணிக்கைக் குழு என திரைப்படம் தொடர்பான அனைத்து அமைப்புகளுக்கும் 29.11.2011 அன்று தமிழ்நாடு அரசின் பொதுச் சுகாதாரத்துறை எழுதிய கடிதத்தில் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- இவ்வாறாக, மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத் துறை உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்கைளில் புகைபிடிக்கும் காட்சிகளைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படிக் குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், 'மரியான்' திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குநரும், நடிகரும் 'மரியான்' திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சியினை இடம்பெறச் செய்திருப்பது அப்பட்டமான சட்டமீறல்.

இவ்வாறு சட்டத்துக்கு புறம்பான வகையில் விளம்பரம் செய்வதை கைவிடுமாறும், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் 'மரியான்' படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறாமல் தவிர்க்கும் படியும் கேட்டுக்கொள்கிறேன்.

சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் புகைப் பிடிப்பதை விட்டுவிட்ட ரஜினி, மற்ற இளைஞர்களையும் புகைப் பழக்கத்தை கைவிடுவிடுமாறு பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த நல்ல உதாரணத்தை தனுஷ் போன்ற நடிகர்கள் கடைப்பிடிக்க வேண்டும்

இப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறாமல் தடுப்பதன் மூலம் ரஜினிகாந்த்தின் நல்ல முன்னுதாரணத்தை நடிகர் தனுஷ் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Anbumani Ramadass appealed to actpr Dhanush to follow the foot steps of superstar Rajini in avoiding smoking scenes in movies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X