For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றால் போராட்டம்: கருணாநிதி எச்சரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

DMK will protest is India participate Commonwealth meet
சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

"இலங்கை விடுதலை அடைவதற்கு முன்பும், விடுதலை அடைந்த பின்னரும்; நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோர் காலத்திலும்; ஈழத் தமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட எந்த ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் அவற்றை மீறி, சர்வ தேசக் கண்ணோட்டத்தில் நம்பகத்தன்மையை முழுவதுமாய் இழந்து நிற்கிறது இலங்கை.

இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராகவே இலங்கை தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின்படி உருவான இலங்கை அரசமைப்பின் 13வது சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான அனைத்து வகை முயற்சிகளையும் சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இன்றைக்கு வந்துள்ள செய்தியில் கூட, கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 49 மீனவர்களில் 8 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எஞ்சிய 41 பேருக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்து மன்னார் மாவட்ட நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக மீனவர்களைக் கைது செய்வதும், அவர்களை இலங்கைக்குக் கொண்டு சென்று நீதிமன்றத்தில் நிறுத்துவதும், அண்மைக் காலமாக தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கடைப்பிடித்து வரும் நடைமுறையாகும்.

தமிழக மீனவர்களின் கதி பற்றி நமது வேண்டுகோளின்படி இந்திய அரசு இலங்கைக்குப் பலமுறை கடிதங்களை எழுதியும், தூதுவரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியும் அதைப் பற்றி இலங்கை அரசு இம்மியளவு கூட காதில் போட்டுக் கொள்வதாகத் தெரியவில்லை.

இந்தச் சூழ்நிலையிலே தான் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும், ஏன் அனைத்துத் தமிழ் மக்களும், உலகத் தமிழர்களும் ஒருமனதாக இந்திய அரசு நவம்பர் திங்களில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி பிரதமர் மன்மோகன் சிங்க்கு நேரில் அழைப்பு விடுப்பதற்காக 18.8.2013 அன்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் டெல்லிக்கு வருவதாக செய்தி வந்துள்ளது.

இந்த நேரத்தில் இந்தியப் பிரதமர்; தமிழர்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல்; மனதிலே கொண்டு, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்று திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வேண்டுகோளையும் இந்திய அரசு புறக்கணிக்குமானால், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்கின்ற நிகழ்வைக் கண்டித்து, தமிழ் மக்களின் உணர்வையும், கண்டனத்தையும் வெளிப்படுத்த; அந்நாளில் தமிழர் இல்லங்கள் தோறும், வணிக நிலையங்கள் தோறும் கறுப்புக் கொடி ஏற்றுதல், ரயில் நிறுத்தப் போராட்டம் போன்றவைகளில் ஈடுபட நேரிடும் என்பதை மத்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

English summary
Dmk president karunanithi said that his party will protest against participation of commonwealth meeting by the Indian government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X