அக்னிபாத் திட்டம் தேவையில்லாதது.. வாபஸ் பெற வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!
அரியலூர் : மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் வேலைவாய்ப்பு திட்டம் தேவையில்லாதது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சில மாநிலங்களில் ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்படுவது, பொது சொத்துக்களுக்கு பங்கம் விளைவிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டம் தற்போது தமிழ்நாட்டிலும் வெடிக்க தொடங்கியுள்ளது. இன்று காலை சென்னையில் இளைஞர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'அதற்காகத்தான்’ பாமக 2.0! திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 'அதில்’ போட்டி.. விளக்கிய அன்புமணி ராமதாஸ்.!

அக்னிபாத் திட்டம்
இதனால் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தொடர்ந்து, மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் தேவையில்லாதது. ஏனென்றால் இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். 4 ஆண்டுகளுக்கு மட்டுமே வேலை என்று சொல்லும் போது, முழுமையாக அர்ப்பணிப்போ, ஈடுபாடோ இருக்காது. ராணுவத்தில் சேர்பவர்கள் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டுமென்றால் அவர்கள் முழுமையாக ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அதனால் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் பாமக ஆட்சி
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும். அதற்கான தேர்தல் வியூகங்கள் வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலின் போது நிச்சயம் எடுக்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

தமிழக அரசு செயல்பாடு
தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியமைத்து உடன் கொரோனா பிரச்னையை சிறப்பாக கையாண்டார்கள். ஆனால், காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் மரணமடைவது தடுக்கப்பட வேண்டும். அதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரிக்கிறது. நீட் தேர்வை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் அதே வேளையில், மாணவர்களின் பாடத் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

எதிர்க்கட்சி பாமக
தமிழகத்தில் எதிர்க்கட்சியாக எண்ணிக்கையில் அடிப்படையில் அதிமுக இருந்தாலும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு சிறப்பு சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி தமிழக அரசை செயல்பட வைத்து வெற்றிபெற்றது பாமக தான். எங்கள் கட்சி எதிரிக் கட்சியாக அல்லாமல், எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.