ஒருநாள் லீவு தாங்க.. மனைவியின் ஆசையை நிறைவேற்றனும்.. கான்ஸ்டபிள் எழுதிய பரபர கடிதம்
பெங்களூர்: பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் பணி செய்யும் போலீஸ்காரர் ஒருவர், ‛மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். ஒருநாள் விடுப்பு தாருங்கள்' என இன்ஸ்பெக்டருக்கு எழுதிய கடிதம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வாரத்தில் 24 X 7 என தொடர்ச்சியாக போலீசார் பணி செய்து வருகின்றனர். கான்ஸ்டபிள் முதல் போலீஸ் அதிகாரிகளுக்கு விடுப்பு கிடைப்பது அரிதான விஷயமாக உள்ளது.
தொடர் வேலைப்பளு உட்பட பல்வேறு காரணங்களால், மன அழுத்தத்துக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. இதனால் அனைவருக்கும் வாரம் ஒருமுறை விடுப்பு அளிக்க வேண்டும் என அந்தந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக போலீஸ்காரரின் கடிதம்
இருந்தாலும் கூட சந்தர்ப்ப சூழல் காரணமாக பெரும்பாலான போலீசாருக்கு விடுப்பு என்பது இன்னும் எட்டாக்கனியாக தான் உள்ளது. இதனால் அவர்களால் மனைவி, குழந்தை, பெற்றோருடன் நேரம் செலவிட முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகத்தில் போலீஸ்காரர் ஒருவர் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என கூறி இன்ஸ்பெக்டரிடம் வழங்கிய கடிதம் தற்போது வைரலாகி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

மனைவியின் விருப்பம்
பெங்களூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் போதை தடுப்பு பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ஆனந்த். திருமணம் ஆனவர். இந்நிலையில் விடுப்பு இன்றி தொடர்ச்சியாக பணி செய்து வந்தார். இந்நிலையில் தான் ஆனந்திடம் அவரது மனைவி ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, ‛உங்களுடன் சேர்ந்து ஒருநாள் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். மேலும் தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்க வேண்டும். நீங்கள் பணி அழுத்தம் இன்றி அமைதி மனநிலையுடன் என்னுடன் ஒருநாள் முழுவதையும் செலவிட வேண்டும்.' என ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

கடிதத்தில் இருந்தது என்ன
இதையடுத்து ஆனந்த் விடுப்பு எடுத்து மனைவியுடன் நேரம் செலவழிக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு விடுப்பு விண்ணப்பம் எழுதினார். அதில் ‛சார், எனது மனைவி என்னுடன் நேரம் செலவழிக்க விரும்புகிறார். காலையில் நடைப்பயிற்சி சேர்ந்து மேற்கொள்வதோடு, தியேட்டருக்கு சென்று படம் பார்க்க விரும்புகிறார். நல்ல கணவன் என்ற முறையில் இதை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளது. இதனால் எனக்கு ஒருநாள் விடுப்பு வழங்க வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.

விடுப்பு வழங்கிய இன்ஸ்பெக்டர்
இதையடுத்து அவருக்கு இன்ஸ்பெக்டர் விடுப்பு வழங்கினார். இந்நிலையில் தான் அவர் எழுதிய விடுப்பு விண்ணப்ப கடிதம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications