சசிகலாவை வாழ்த்தி தமிழில் பேனர்.. கன்னட அமைப்பினர் ஆவேசம்.. அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர்
பெங்களூர்: பெங்களூர் அருகே சசிகலா தங்கியிருந்த ரிசார்ட்டுக்கு வெளியே தமிழில் வைக்கப்பட்டு இருந்த வரவேற்பு பேனர்கள் இரவோடு இரவாக கன்னட அமைப்பினரால் அடித்து நொறுக்கி தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா அதன் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சுமார் ஒரு வாரம் தேவனஹள்ளி பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
இதையடுத்து தினந்தோறும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வெளியே நின்று வாழ்த்து கோஷம் எழுப்பி விட்டு சென்றனர். இந்த நிலையில் இன்று காலை அவர் அங்கிருந்து தமிழகம் நோக்கி காரில் புறப்பட்டார்.
பச்சை நிற சேலை கட்டி ராகு காலத்திற்கு முன் சென்னைக்கு கிளம்பிய சசிகலா - நேரம் நல்ல நேரமா?

பேனர்கள் எரிப்பு
இதையொட்டி நேற்று முதலே ரிசார்ட் வெளியே சசிகலாவை வாழ்த்தி பேனர்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் கர்நாடகாவில் தமிழ் எழுத்துக்கள் இருப்பதால் கடும் கோபம் அடைந்தனர் கன்னட அமைப்பினர். கர்நாடகா ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்த சிலர் நேற்று இரவு அந்த பேனர்கள், போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். சில பேனர்களை தீயிட்டுக் கொளுத்தினர்.

கோஷங்கள்
"கன்னட விரோதிகள் ஒழிக" என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர். அமமுகவினர் கணிசமாக இருந்த போதிலும், கர்நாடகா என்பதால், இதை தடுக்க முற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய் திரைப்படம்
சர்கார் திரைப்படம் வெளியானபோது அது பற்றி, பெங்களூரில், தமிழில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் கிழித்து எறிந்தனர். பெங்களூர் உட்பட கர்நாடகாவின் எந்த பகுதியிலும் தமிழில் எழுதப்பட்டிருந்தால் அவற்றை கன்னட அமைப்பினர் ஏற்றுக்கொள்வது கிடையாது. தார்பூசி அழித்து விடுவது வாடிக்கை.

பெயர் பலகைகள்
நீண்ட காலமாகவே கன்னட அமைப்பினர் வேறு மொழி எழுத்துக்களை அனுமதிப்பது இல்லை. அதேநேரம் கன்னடம் தவிர்த்து, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலான பெயர் பலகைகளை பரவலாகப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.