Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

25 அரங்கு.. பெங்களூரில் மாபெரும் தமிழ் புத்தக திருவிழா.. நாளை துவங்கி 8 நாள் நடக்கிறது.. வாங்க.. வாங்க..

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூரில் உள்ள தமிழ் சங்கத்தின் திருவள்ளூவர் அரங்கத்தில் முதல் முறையாக பல்வேறு சங்கத்தினர் இணைந்து மாபெரும் தமிழ் புத்தக திருவிழாவை நடத்த உள்ளனர். மொத்தம் 25 அரங்குகளில் நடைபெற உள்ள இந்த புத்தக திருவிழா நாளை துவங்கி ஜனவரி மாதம் 1ம் தேதி வரை மொத்தம் 8 நாட்கள் நடைபெற உள்ளது. சங்ககாலம் முதல் நவீனகாலம் வரையிலான இலக்கியப்படைப்புகள் அனைத்தும் 10 சதவீத தள்ளுபடியில் வழங்கப்பட உள்ளது.

கர்நாடகா தலைநகர் பெங்களூரில் தமிழர்கள் அதிகளவில் உள்ளனர். 4 சட்டசபை தொகுதிகளில் வெற்றியை நிர்ணயம் செய்யும் வகையில் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

Bangalore Tamil Books festival starts from tomorrow ends on January 1

இந்நிலையில் தான் பெங்களூரில் முதல் முறையாக மாபெரும் தமிழ் புத்தக திருவிழா ஏற்படுத்த முடிவு செய்யயப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழா மொத்தம் 8 நாட்கள் நடக்கிறது. அதுபற்றிய விபரம் வருமாறு:

கருநாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், கருநாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் இணைந்து பெங்களூரில் மாபெரும் தமிழ் புத்தக திருவிழா நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி பெங்களூரில் அல்சூர் ஏரியின் எதிரே அமைந்துள்ள பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கத்தில் இந்த புத்தக திருவிழா நடத்தப்பட உள்ளது. கருநாடகத்தமிழர் வரலாற்றில் புதிய திருப்பமாக அமையவிருக்கும் இந்த புத்தக திருவிழாவில் முன்னணி பதிப்பாளர்களின் 25 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இந்த புத்தக திருவிழா நாளை துவங்க உள்ளது. ஜன.1ம்ஆம் தேதி வரை மொத்தம் 8 நாட்கள் இந்த தமிழ்ப் புத்தகத் திருவிழா நடக்க உள்ளது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையில் புத்தகக்காட்சி அரங்குகள், பொதுமக்கள் வருகைக்காக‌ திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

இதில் சங்ககாலம் முதல் நவீனகாலம் வரையிலான இலக்கியப்படைப்புகள் அனைத்தும் விற்பனைக்கு கிடைக்கும். புத்தக திருவிழாவில் அனுமதி இலவசமாகும். தமிழ் புத்தக திருழாவில் வாங்கப்படும் அனைத்து நூல்களுக்கு 10 சதவீத தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களிடையே தமிழை கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும் திருவிழாவில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தலா ரூ.100 மதிப்புள்ள புத்தக அன்பளிப்புச்சீட்டு அளிக்கப்படும். புத்தகக்காட்சியில் இடம்பெற்றிருக்கும் அரங்கங்களில் ரூ.100 மதிப்புள்ள அன்பளிப்புச்சீட்டை அளித்து விரும்பிய நூலை வாங்கிக்கொள்ளலாம். பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையர் இராம்பிரசாத் மனோகர், ஜி.மோகன் உள்ளிட்ட கொடையாளர்களின் உதவியால் 2 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள நூல்கள் அன்பளிப்பாக அளிக்கப்படுகின்றன. தமிழ் புத்தகத் திருவிழா வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியாகும்.

கருநாடகத்தில் வாழும் தமிழர்களிடையே, குறிப்பாக தமிழ்க் குழந்தைகளிடம் தமிழ்மொழியை கற்கும் ஆர்வத்தை தூண்டிவிடும் நோக்கில் நடத்தப்படும் இத்திருவிழாவின் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு மொழித்திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கல்லூரி மாணவர்களுக்கு சொற்பொழிவு, கவிதை, ஓவியம், கட்டுரைப்போட்டிகளும், பள்ளி மாண‌வர்களுக்கு உலகநீதி ஒப்புவித்தல், மாறுவேடப்போட்டிகள் (ஆரம்பப்பள்ளி), திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப்போட்டிகள்(நடுநிலைப்பள்ளி), சொற்பொழிவு, பாடல் போட்டிகளும்(உயர்நிலைப்பள்ளி), பொதுமக்களுக்கு சொற்பொழிவு, கவிதை, கட்டுரைப்போட்டிகளும் நடத்தப்படுகின்றன. வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 12 பரிசுகளும், பொதுமக்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 9 பரிசுகளும், பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 18 பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்த போட்டிகளில் சிறப்பிடம் பிடிக்கும் பள்ளிகளுக்கு கேடயம் பரிசாக‌ அளிக்கப்படுகிறது. ஜன.1ம் தேதி நடக்கும் நிறைவுவிழாவில், இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

கருநாடகத்தில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள், பதிப்பகங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் சிறந்த நூல் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் சிறந்ததாக‌ தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளுக்கு 6 பரிசுகள் வழங்கப்படும். இப்பரிசுக்கான மொத்தத்தொகை ரூ.15 ஆயிரம் ஆகும்.

இத்திருவிழாவில், தமிழ் மூதாதையர்கள் இளம் வயதில் விளையாடி மகிழ்ந்த, தற்போது வழக்கொழிந்த‌ தாயக் கட்டை, தட்டாங்கல், சொக்கட்டான், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், பாம்பும் ஏணியும், பம்பரம், மூன்றுகல் ஆட்டம், சங்கு சக்கரம், கிச்சு கிச்சு தாம்பலம், கைத் துடுப்பாட்டம், கரகர வண்டி, ஒருகுடம் தண்ணி ஊத்தி, குலைகுலையா முந்திரிக்காய், நொண்டி போன்ற தமிழ்மரபுவிளையாட்டுகள் 8 நாட்களுக்கு இடம்பெற்றிருக்கும். குழந்தைகளுக்கு தமிழ்மரபுவிளையாட்டுகளை இம்மாகுலேட் ஆண்டனி, கற்று கொடுக்க உள்ளார்.

மாணவர்களின் அறிவியல் திறனறி, புலனறி உணர்வை மேம்படுத்த ஜன.26,27ஆம் தேதிகளில் திரு.பேபி ஜெயக்குமார் அவர்கள் நடத்தும் மாயவித்தைக் காட்சி(மேஜிக் ஷோ) தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். டிச.25 முதல் ஜன.1ஆம் தேதிவரையில் தினமும் மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை இலக்கியமாலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் தமிழ், கன்னட நூல்கள் வெளியீடு, பாவரங்கம், கலந்துரையாடல், பட்டிமன்றம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருக்கும். தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சிந்தனைக்களம் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்நிகழ்ச்சிகளில் கவியருவி அப்துல்காதர், பாவலர் அறிவுமதி, விஞ்ஞானி வி.டில்லிபாபு, தமிழறிஞர் சு.குமணராசன், தொல்லியல் ஆய்வாளர் திரு.கே.அமர்நாத் இராமகிருஷ்ணன், இஸ்ரோ மேனாள் தலைவர் கே.சிவன் உள்ளிட்டோர் சிந்தனை உரை வழங்கவிருக்கிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் தமிழுணர்வை ஊக்குவிக்கும் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

டிச.25ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தமிழ்ப் புத்தக திருவிழாவின் தொடக்கவிழா, சிறப்புமலர் வெளியீடு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரம் பேருக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள நூல்கள் அன்பளிப்பு திட்ட தொடக்கவிழா நடக்கவிருக்கிறது. பெங்களூருமாநகராட்சி சிறப்பு ஆணையர், சுற்றுலாத்துறை இயக்குநர் வி.இராம்பிரசாத் மனோகர் தலைமையில் நடக்கும் விழாவில் தொழிலதிபர்கள் டி.பாலசுந்தரம், ஏ.நரசிம்மன், திரு.எஸ்.சுந்தரவேலு, திரு.ஆர்.துரை, தினச்சுடர் ஆசிரியர் பா.அமுதன் முன்னிலை வகிக்கிறார்கள். கருநாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் அ.தனஞ்செயன் வரவேற்க தமிழ்ப்புத்தகத் திருவிழா தலைவர் பேராசிரியர் முனைவர் கு.வணங்காமுடி நோக்க உரை வழங்குகிறார். நூல்கள் அன்பளிப்பு திட்டம் குறித்து தொழிலதிபர் ஜி.மோகன், சிறப்புமலர் குறித்து அதன் ஆசிரியர் புலவர் கி.சு.இளங்கோவன் பேசுகிறார்கள். வ.மலர்மன்னன் எழுதிய 'வள்ளலாரின் ஆன்மநேய ஒருமைப்பாடு' நூல் வெளியிடப்படுகிறது.

மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், சட்டப்பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத், முன்னாள் கவுன்சிலர் எஸ்.ஆனந்த்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, முதுநிலை அணு அறிவியல் அறிஞர் த.தவமணி மதிப்புரை வழங்குகிறார். ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன், இலக்கியமாலை நிகழ்ச்சியை தொடக்கிவைத்து சிறப்புரை ஆற்றுகிறார். திருவிழாவை தொடக்கிவைத்து, அறிவியல் அறிஞர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை பேருரை வழங்குகிறார். கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கச்செயலாளர் மா.கார்த்தியாயினி நன்றியுரை கூறுகிறார்.

ஜன.1ஆம் தேதி மாலை 5 மணிக்கு கருநாடகத் தமிழ் இலக்கிய ஆளுமை விருதுகள் வழங்குதல் மற்றும் நிறைவுவிழா நடக்கிறது. கருநாடக காவல்துறை கூடுதல் டிஜிபி எஸ்.முருகன் தலைமையில் நடக்கும்விழாவில், கருநாடகத்தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கச்செயலாளர் ஆ.வி.மதியழகன் வரவேற்கிறார். தொழிலதிபர்கள் எஸ்.குழந்தைசாமி, .ஆர்.இரவிச்சந்தர், முனைவர் எல்.இராமு, சமூக ஆர்வலர் என்.இராமச்சந்திரன், தடய அறிவியல் ஆய்வாளர் ச.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில், மூத்த தமிழறிஞர்கள் வீ.மு.வேலு, முருகு.சுப்பிரமணியன், பேராசிரியர் தா.கிருஷ்ணமூர்த்தி, புலவர் சரவணன், பாவலர் அமுதவன், பாவலர் வ.மலர்மன்னன், ஜெயாவெங்கட்ராமன், பாவண்ணன், பொன்.க.சுப்பிரமணியன், முனைவர் எஸ்.ஸ்ரீகுமார் ஆகியோருக்கு கருநாடகத் தமிழ் இலக்கிய ஆளுமை விருதுகள், நூலகர்கள் நல்லபெருமாள், சீனிவாசன் ஆகியோர் தகைசால் நூலக‌ர் விருதுகள் வழங்கப்படுகிறது. மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச்செயலாளர் கோ.பாலச்சந்திரன், கருநாடகத் தமிழ் இலக்கிய ஆளுமை விருதுகள், தகைசால் நூலகர் விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ்ப் புத்தகத் திருவிழா தலைவர் பேராசிரியர் முனைவர் கு.வணங்காமுடி நிறைவுரை வழங்குகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+