தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்த்து நடக்கும் பந்த்திற்கு பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆதரவு!
பெங்களூர்: தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை நடத்தப்படும் பெங்களூர் பந்த் முழு அடைப்பு போராட்டத்துக்கு பெங்களூர் தமிழ் சங்கம் உட்பட சுமார் 90 அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
தமிழ்நாட்டிற்கு காவிரி மேலாண்மை ஆணைய பரிந்துரையை ஏற்று காவிரியில் 5,000 கன அடி நீர் திறக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் கடந்த சில நாட்களாகவே வலுவடைந்து இருக்கின்றன. விவசாயிகள், கன்னட அமைப்புகள், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூர், மண்டியா, கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகள், தமிழ்நாடு எல்லை பகுதிகள் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து உள்ளன. இந்த நிலையில் நாளை பெங்களூரில் பல்வேறு அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளன.
நாளை காலை 11 மணியளவில் பெங்களூர் டவுன் ஹால் பகுதியில் இருந்து மைசூர் பேங்க் வரை பேரணி நடைபெற இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கவும் விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள் வலியுறுத்தினர். பொதுமக்கள், வியாபாரிகள், தொழிற் சங்கங்கள், மென்பொருள் நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்து இருக்கின்றனர்.
ஓலா, ஊபர் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளார்கள் சங்கமும் இந்த போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த லாரி மீது பெங்களூரு நைஸ் ரோடு பகுதியில் இன்று கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை போராட்டம் காரணமாக செல்லும் லாரிகள் நாளை கர்நாடக எல்லையில் நிறுத்தப்படும் என கர்நாடகா மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகளில் இரவு 8 மணி முதல் கர்நாடக எல்லையும் நிறுத்தப்பட உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்படும் இந்த பெங்களூர் பந்த் முழு அடைப்பு போராட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சாந்தகுமார் தலைமை தாங்குகிறார். இந்த போராட்டத்துக்கு ஆதரவளித்து உள்ள சுமார் 90 அமைப்புகளின் பெயர் பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டன.
அதில் பல்வேறு கன்னட அமைப்புகள், விவசாயிகள் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் பெங்களூர் பந்த் போராட்டத்துக்கு ஆதரவளித்து உள்ள அமைப்புகளில் பெங்களூர் தமிழ் சங்கமும் ஒன்று. இதற்கு முன்பும் இதுபோன்ற போராட்டங்களுக்கு இந்த அமைப்பு ஆதரவளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications