கர்நாடகாவில் ‘அனலாக் பனீர்' விற்பனைக்கு ஓராண்டு தடை.. வெளியான அறிவிப்பு.. என்ன காரணம்?
பெங்களூர்: பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கர்நாடகாவில் 'பனீர்' என்ற பெயரில் விற்கப்படும் 'அனலாக் பனீர்' உற்பத்தி, இருப்பு வைத்தல், விநியோகம் மற்றும் விற்பனைக்கு அம்மாநில அரசு ஓராண்டுக்கு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பனீர் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படும். ஆனால் 'அனலாக் பனீர்' என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படாது. அதற்கு பதில் வெஜிடபிள் ஆயில், ஸ்டார்ச்சுகள், எமல்சிஃபையர்கள் உள்பட பிற பொருட்களின் கலைவையுடன் இது தயாரிக்கப்படும்.
இருப்பினும் இதனை 'பனீர்' என்ற பெயரில் கர்நாடகாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று பல்வேறு மாநில அரசுகள் தொடர்ந்து தடை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கர்நாடகமும் அடுத்த ஓராண்டுக்கு 'அனலாக் பனீர்' தயாரிப்புக்கு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக உணவு பாதுகாப்பு துறையின் ஆணையர் சீனிவாஸ் வெளியிட்ட அறிக்கையில், "கர்நாடகாவில் 'பனீர்' என்ற பெயரில் விற்கப்படும் அனலாக் அல்லது பால் அல்லாத பனீர் (Non-Dairy Paneer)வகைகளின் உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கேஜிங், இருப்பு வைத்தல், விநியோகம், போக்குவரத்து, மொத்த மற்றும் சில்லறை விற்பனை, விற்பனைக்காக காட்சிப்படுத்துதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு ஓராண்டு காலத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவிற்கு முன்பாக இந்த 'அனலாக் பனீர்', சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, "கர்நாடகாவில் பல பனீர் மாதிரிகளைப் பரிசோதித்ததில், அவற்றில் கலப்படம் எதுவும் இல்லை. இருப்பினும் பாலுக்கு பதில் வெஜிடபிள் எண்ணெய், தாவரக் கொழுப்பு அல்லது பால் அல்லாத பிற பொருட்களைக் கொண்டு பனீர் பிற இடங்களில் தயாரிக்கப்படுகிறது.
இதனால் முன்கூட்டியே பொது நலன் மற்றும் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் தரம் நிர்ணயிக்கப்படாத 'பால் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களுக்கு' மட்டுமே இந்தத் தடை பொருந்தும்'' என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
