கர்நாடகா முதல்வர் யார்? சக்சஸான சித்தராமையா - டிகே சிவக்குமார் ‛பிரேக்பாஸ்ட்' மீட்டிங்! பின்னணி
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவியை கைப்பற்ற டிகே சிவக்குமார் முயற்சிக்கிறார். முதல்வர் பதவியை தக்க வைக்க சித்தராமையா காய் நகர்த்தி வருகிறார். இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவின்படி துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு இன்று காலை உணவுடன் கூடிய முக்கிய மீட்டிங்கை சித்தராமையா நடத்தி முடித்தார். இதனால் கர்நாடகா முதல்வர் பதவி தொடர்பான மோதல் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா இருந்து வருகிறார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். டிகே சிவக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

கடந்த 2023ம் ஆண்டின் மத்தியில் முதல்வரான சித்தராமையா அந்த பதவியில் இரண்டரை ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் தான் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை டிகே சிவக்குமாருக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
2023ல் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமாரும் முதல்வராக செயல்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், இதனால் சித்தராமையா முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று டிகே சிவக்குமாரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விரைவில் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் டெல்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து பேச உள்ளனர். இதற்கிடையே தான் தற்போது காங்கிரஸ் மேலிடம் இருவருக்கும் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. டெல்லி வருவதற்கு முன்பு டிகே சிவக்குமாரை சந்தித்து பேசும்படி, சித்தராமையாவுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிகே சிவக்குமாருக்கு, சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து இன்று காலை உணவுடன் கூடிய மீட்டிங்கிற்கு டிகே சிவக்குமார் சென்றார். பெங்களூரில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான காவேரிக்கு டிகே சிவக்குமார் சென்றார். அவரை சித்தராமையா வரவேற்றார். அதன்பிறகு அவர்கள் இருவரும் காலை உணவு சாப்பிட்டு முதல்வர் பதவி தொடர்பாக விவாதம் நடத்தினர். இருவரும் என்ன பேசினர்? என்பது பற்றிய விவரத்தை அவர்கள் வெளியே கூற மறுத்துவிட்டனர்.
இருப்பினும் இருவரும் விவாதித்தது தொடர்பான விவரம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. சித்தராமையா - டிகே சிவக்குமார் ஆகியோரின் இந்த சந்திப்பு கர்நாடகா அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதோடு முதல்வர் பதவி தொடர்பான பிரச்சனைக்கு இன்று முடிவு வருமா என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்த பிரேக்பாஸ்ட் மீட்டிங்கை தொடர்ந்து இருவரும் டெல்லி செல்ல உள்ளனர். அங்கு அவர்கள் மேலிட தலைவர்களை சந்திக்க உள்ளனர். அதன்பிறகு மேலிடம் முதல்வர் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications