இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. கர்நாடக பாஜகவிற்குள் பதவி "லாபி.." பசவராஜ் பொம்மைக்கு ஆரம்பமே தலைவலி
பெங்களூர்: கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில், துணை முதல்வர் பதவிக்கு மிகப் பெரிய லாபி நடக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த உட்கட்சி பூசல் புதிய முதல்வருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
78 வயது என்ற காரணத்துக்காக மட்டும் கிடையாது.. பாஜக எம்எல்ஏக்கள்.. அதிலும் குறிப்பாக வட கர்நாடகாவை சேர்ந்த பல எம்எல்ஏக்கள் .. எடியூரப்பா மீது தொடர்ந்து அதிருப்தி வெளிப்படுத்தி வந்ததால்தான் பாஜக மேலிடம் அவரை முதல்வர் பதவியிலிருந்து விலக கூறியது.
இப்படியான ஒரு உள்கட்சி பூசல் இருக்ககூடிய கட்சிதான் கர்நாடக பாஜக. இன்று நேற்று கிடையாது, எடியூரப்பா எப்போது முதல்வராக வந்தாரோ அந்த காலம் முதல் கட்சிக்குள் பல கோஷ்டிகள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

எடியூரப்பாவுக்கு எதிராக ரெட்டி சகோதரர்கள்
இத்தனைக்கும் எடியூரப்பாவை தாண்டி வேறு யாரையும் முதல்வராக நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவருக்கு அங்கு செல்வாக்கு இருந்தது. ஆனால் அவரை மாற்றிவிட்டு வேறு முதல்வரை கொண்டுவரவேண்டும் என்று முதலில் போர்க்கொடி உயர்த்தியது ரெட்டி சகோதரர்கள். சுமார் 50 எம்எல்ஏக்கள் ஜனார்த்தன ரெட்டி பின்னால் அணி சேர்ந்துகொண்டு, ரிசார்ட் அரசியலை துவங்கினர். இதன் காரணமாக , முதலில் சதானந்தகவுடா, பிறகு ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய 2 முதல்வர்கள் அடுத்தடுத்து தற்காலிகமாக பதவியில் அமர்த்தப்பட்டனர்.

சித்தராமையா ஆட்சியில் பிரச்சினையில்லை
இதன்பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. சித்தராமையா தலைமையில் 5 ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சி எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் நிறைவடைந்தது. ஆனால், 2018 சட்டசபை தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக பாஜக வந்தது. இருப்பினும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து அரசு அமைத்தது. குமாரசாமி முதல்வரானார். ஆனால் அங்கிருந்து பல எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு அமைந்தது.

கோஷ்டி பூசல்
இருப்பினும், எடியூரப்பா தலைமைக்கு எதிராக போர்க்குரல் ஒலித்துக்கொண்டே இருந்தன. புதிதாக வேறு கட்சிகளில் இருந்து தாவியவர்களில் சிலர் கூட எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது பசவராஜ் பொம்மை முதல்வராகியுள்ளார். எடியூரப்பாவை ஒப்பிட்டால் மாநிலம் தழுவிய அளவில் இவருக்கு மக்கள் செல்வாக்கு கிடையாது. எடியூரப்பாவையே ஆட்டம் காண வைத்த இந்த கோஷ்டி பூசல், பசவராஜ் பொம்மையை மட்டும் சும்மா விட்டு விடுமா? இன்று புது முதல்வர் பதவியேற்ற முதல் நாளிலேயே துணை முதல்வர் பதவிக்கான லாபியில் இருப்பவர்கள் போர்க்கொடி உயர்த்த தொடங்கியுள்ளார்கள்.

எடியூரப்பாவுக்கே அந்த கதி
எடியூரப்பாவாவது பரவாயில்லை, கட்சியை ஆரம்பத்திலிருந்து வளர்ந்து இந்த நிலைக்கு கொண்டு வந்த சீனியர் தலைவர். பசவராஜ் பொம்மை இப்போதுள்ள பல சீனியர் அமைச்சர்களுக்கு ஜூனியர். இவர் முதல்வராக்கப்பட்டதில் பலருக்கு மனதுக்குள் பெரும் பொருமல் இருக்கிறது. டெல்லி தலைமை வலுவாக மெசேஜ் கொடுத்துவிட்டதால் வெளியே சொல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அதிருப்தியாளர்கள்.

3 துணை முதல்வர்கள்
பசவராஜ் பொம்மை லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர் . எடியூரப்பாவும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே, கர்நாடகாவில் பாஜக ஒரே ஒரு ஜாதி கட்சியாக மாறுகிறது என்று குரல்கள் எழுந்துள்ளன. இதை ஈடு கட்டுவதற்காக , ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்த அசோக் துணை முதல்வராக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்த கார்ஜோள் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீராமுலு ஆகியோரும் துணை முதல்வராக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்வரப்பாவுக்கு துணை முதல்வர் பதவி
இந்த நிலையில்தான், முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா தனக்கு துணை முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறார். இன்று அவரது வீட்டுக்கு குருபர் ஜாதியை சேர்ந்த மடாதிபதிகள் வருகை தந்திருந்தனர் . மடாதிபதிகள் ஆதரவு ஈஸ்வரப்பாவிற்கு இருப்பதைப் போல காட்டிக் கொண்டால் அது கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுப்பதை போல அமையுமென்று காய் நகர்த்த படுவதாக கூறப்படுகிறது.

ஈஸ்வரப்பா லாபி
காங்கிரஸ் கட்சியின் சித்தராமையாவும் குருபர் இனத்தைச் சேர்ந்தவர்தான். யாதவர்களில் இது ஒரு பிரிவாகும். கர்நாடகாவில் லிங்காயத்து, ஒக்கலிகர், தலித் வாக்கு வங்கிக்கு அடுத்து, பெரும்பான்மை வாக்கு வங்கியாக உள்ளது குருபர் இனம். ஆனால் அந்த ஜாதியைச் சேர்ந்த மிக சிலரே அரசியலில் கோலோச்சுகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் குருபர் மக்கள் உள்ளனர். பாஜகவை பொறுத்தளவில் அந்த ஜாதியைச் சேர்ந்த, முக்கிய தலைவராக ஈஸ்வரப்பா இருக்கிறார். சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக எடியூரப்பாவுக்கு அடுத்து ஈஸ்வரப்பா என்ற நிலைதான் இருந்தது. ஏனெனில் எடியூரப்பா அரசில் துணை முதல்வராகவும், பிறகு பாஜக கர்நாடக தலைவர் பதவியையும் அலங்கரித்தார். எடியூரப்பாவின் ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் ஈஸ்வரப்பாவும். எடியூரப்பா போலவே ஷிமோகா மாவட்டத்தில் உள்ள தமிழர்களோடு ஈஸ்வரப்பாவுக்கும் நல்ல உறவு உள்ளது.

பசவராஜ் பொம்மை சவால்கள்
இப்படியான ஒரு தலைவர், இப்போது துணை முதல்வர் பதவி கூட கிடைக்குமா என்ற கேள்விக் குறியோடு இருப்பதால் அவர் தனது ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார். ஒரு பக்கம் கர்நாடக பாஜக சீனியர்களால் கட்சிக்குள் அதிகரிக்கும் விரிசல், இன்னொரு பக்கம் வர கர்நாடக மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு, இன்னொரு பக்கம் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது என பல்வேறு சவால்களை எதிர் கொண்டு இருக்கிறார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.












Click it and Unblock the Notifications