3000 ஆபாச வீடியோ சர்ச்சை.. பிரஜ்வலுக்கு எதிராக பிடிவாரண்ட்.. பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு
பெங்களூர்: பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்குத் தப்பி சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், அவருக்கு எதிராக இப்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அங்கு ஹாசன் தொகுதி எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் எடுத்து வைத்தாகக் கூறப்படுகிறது.

இது தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
பிடிவாரண்ட்: இதற்கிடையே அவருக்கு எதிராக இப்போது பெங்களூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரஜ்வல் வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தை அணுகி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்க அனுமதி கோரியது. புலனாய்வுக் குழுவின் கோரிக்கையை ஏற்றுப் பெங்களூர் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது
கர்நாடகாவில் லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவி பகீர் கிளப்பியது. பிரஜ்வல் ரேவண்ணா ஜேடிஎஸ்- பாஜக கூட்டணியில் ஹாசன் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் வெளியான உடனேயே பிரஜ்வல் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஜெர்மனி: பிரஜ்வல் ரேவண்ணா இப்போது ஜெர்மனியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரஜ்வல் மீது ஏற்கனவே பலாத்காரம், மிரட்டல், பிளாக் மெயில் என பல்வேறு புகார்கள் உள்ளன.. அவரை பிடிக்க விசாரணை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே இன்டர்போல் மூலம் அவருக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் அவருக்கு இப்போது பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜாமீன்: ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்ணை புகார் அளிக்க விடாமல் கடத்திய புகாரில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்டி ரேவண்ணாவை கர்நாடக போலீசார் கடந்த மே 4ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அது மே 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை விசாரிக்கக் காங்கிரஸ் அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது., இருப்பினும், இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வெளிப்படையான வீடியோக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications