அடித்து நொறுக்கப்பட்ட EVM.. சூறையாடப்பட்ட வாக்குச்சாவடி! கர்நாடகாவில் லோக்சபா தேர்தலின்போது கலவரம்!
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் 14 லோக்சபா தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் சாம்ராஜ் நகர் தொகுதியில் வாக்குச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 14 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், சாம்ராஜ் நகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட இண்டிகனட்டா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாக்குச்சாவடி சூறையாடப்பட்டது. வாக்குச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இண்டிகனட்டா, தெக்கனே மென்டரே, துளசிகரே, படசலனத்தை ஆகிய கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனப் புகார் எழுப்பி, இண்டிகனட்டா வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களிக்க முன்வரவில்லை. அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சிலர் வாக்களிக்க முன்வந்தனர். வாக்களிக்க முன்வந்தவர்களுடன் மற்றொரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டபோது வாக்குச்சாவடி சூறையாடப்பட்டது.
பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு.. “மத” ரீதியில் வாக்கு சேகரித்த புகாரில் ஆக்ஷன்!
தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மக்களின் கோபத்தை தணிக்க முயன்று, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதனை ஏற்காத மக்கள் வாக்குச்சாவடியில் கல் வீச்சில் ஈடுபட்டு, வாக்குச்சாவடியை சூறையாடினர். போலீசார் தடுக்க முயன்றும், கிராம மக்கள், வன்முறையில் ஈடுபட்டனர்.

வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, மேஜைகள், வாக்குச்சாவடி இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கியதோடு, வாக்குப்பதிவு இயந்திரங்களை தீ வைத்து கொளுத்த முற்பட்டனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு தடைபட்டது.
அந்த வாக்குச்சாவடியில் மொத்த 528 வாக்காளர்கள் உள்ள நிலையில், வெறும் 9 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். வாக்குச்சாவடி சூறையாடப்பட்ட நிலையில், மக்களின் கல் வீச்சில் போலீசார் மற்றும் சில பணியாளர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பெரும் பதற்றம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது என்றும், காவல்துறை கண்காணிப்பாளர் நிலைமையை ஆய்வு செய்ய கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார் என்றும் துணை ஆணையர் ஷில்பா நாக் கூறியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பார்வையாளரின் கவனத்துக்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக துணை ஆணையர் ஷில்பா நாக் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்துள்ளதால், வாக்குச்சாவடியில் மீண்டும் தேர்தல் நடத்த பரிந்துரைக்கப்படலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications