‛லண்டன் மாடல்’.. பெங்களூரில் மூச்சுமூட்டிய போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு..கையில் சூப்பர் திட்டம்
பெங்களூர்: பெங்களூர் நகர் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வரும் நிலையில் தான் கர்நாடக சட்டசபையில் பெங்களூர் மெட்ரோ பாலிட்டன் தரைவழி போக்குவரத்து ஆணையத்துக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பெங்களூரில் நிலவும் போக்குவரத்து சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களில் ஒன்று பெங்களூர். ஐடி நிறுவனங்கள் முதல் ஆயத்த ஆடை தொழிற்சாலை என அனைத்து துறை சார்ந்த நிறுவனங்கள் உள்ளதால் இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை என்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இதனால் ஒவ்வொரு ஆண்டு பெங்களூர் நகரில் மக்களுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். இதற்காக கர்நாடக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருகிறது.

சட்ட மசோதா நிறைவேற்றம்
இந்நிலையில் தான் தற்போது பெங்களூர் நகரின் போக்குவரத்தை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் வகையிலான சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் பெலகாவியில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா என்ன?, இதன்மூலம் பெங்களூர் நகர போக்குவரத்து எப்படி மேம்படும்? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:

பிரிட்டன் மாடல்
பிரிட்டன் தலைநகரான லண்டனில் அனைத்து போக்குவரத்து பிரிவையும் ஒற்றை குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதில் லண்டனின் மக்கள் பிரதிநிதிகள், முக்கிய அதிகாரிகள் இடம்பெற்று உள்ளனர். இந்த ஆணையம் லண்டன் நகரில் இயங்கும் பஸ், ரயில், டாக்சி,நீர்வழி போக்குவரத்து என அனைத்து வகையான போக்குவரத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் அனைத்து போக்குவரத்துகளையும் மக்கள் சிரமமன்றி பயன்படுத்த முடிகிறது. இந்த லண்டன் மாடலை பின்பற்றி தான் பெங்களூர் மெட்ரோ பாலிட்டனர் தரைவழி போக்குவரத்து ஆணையம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

சட்டசபையில் நிறைவேற்றம்
தேசிய நகர்ப்புற போக்குவரத்து கொள்கை 2014ன் படி ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தை(UMTA) உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரு மாநகரத்துக்கான தரைவழி போக்குவரத்து ஆணையம் (Bengaluru Metropolitan Land Transport Authority or BMLTA) 2007ல் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் பெங்களூரு மாநகர பகுதிகளில் அனைத்து அரசு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான சட்டமசோதா வடிவமைக்கப்பட்டது. இது பெங்களூர் மெட்ரோ பாலிட்டன் தரைவழி போக்குவரத்து ஆணைய சட்ட மசேதா என அழைக்கப்பட்டது. இந்த மசோதா நீண்டகாலம் கர்நாடகா சட்டசபையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ பாலிட்டன் தரைவழி போக்குவரத்து ஆணைய சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பு இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்து. இந்த மசோதாவை சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் மாதுசாமி தாக்கல் செய்து நிறைவேற்றினார்.

279 சதுர கிலோமீட்டர் எல்லை
இதன்மூலம் பெங்களூர் மெட்ரோ பாலிட்டன் தரைவழி போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்பட உள்ளது. இந்த ஆணையம் என்பது 279 சதுர கிலோமீட்டர் பகுதியை எல்லையாக கொண்டு செயல்படும். இந்த பகுதிக்குள் இயங்கும் அரசு பஸ், புறநகர் ரயில், மெட்ரோ ரயில்கள் உள்பட அனைத்து வகையான போக்குவரத்தையும் இந்த ஆணையம் ஒருங்கிணைப்பு செய்ய உள்ளது. பெங்களூர் மெட்ரோபாலிட்டன் தரைவழி போக்குவரத்து ஆணையம் போக்குவரத்து திட்டமிடல், செயல்படுத்துதல், நிதியளித்தல் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்பார்வை செய்யும். மேலும் அனைத்து போக்குவரத்து துறை ஒருங்கிணைப்புக்கான விதிகளை வகுத்து கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை செய்யும். இதன்மூலம் சாலையில் வாகனங்களில் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வாய்ப்பு ஏற்படும் என நம்பப்படுகிறது.

ஆணையத்தின் தலைவர் யார்?
இந்த புதிய மசோதாவின் படி பெங்களூர் மெட்ரோ பாலிட்டன் போக்குவரத்து ஆணையம் ஒரு தலைவர், 2 துணை தலைவர் உள்பட 33 பேரை உருப்பினராக கொண்டிருக்கும். தலைவராக பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சராக இருப்பவர் செயல்படுவார். துணை தலைவராக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் இருப்பார். இதுதவிர தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர்கள், பெங்களூரு மேயர், பெங்களூரு போலீஸ் கமிஷனர், பெங்களூர் மாநகராட்சியின் கமிஷனர், பெங்களூர் வளரச்சி ஆணையத்தின் கமிஷனர், பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள், கோட்ட ரயில்வே மேலாளர், இந்தி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மண்டல அதிகாரி உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். மேலும் சிலரை சிறப்பு பிரதிநிதிகளாக இணைக்கவும் இந்த மசோதாவில் இடம் உள்ளது.

அமைச்சர் கூறுவது என்ன?
இதுபற்றி அமைச்சர் மாதுசாமி கூறுகையில், ‛‛ பெங்களூர் நகருக்கான தரைவழி போக்குவரத்து ஆணையத்தின் அதிகார வரம்பு 279 சதுர கிலோமீட்டராகும். இந்த ஆணையம் அனைத்து வகையான பொது போக்குவரத்தையும் ஓருங்கிணைத்து செயல்படுத்தும். நகர்புற போக்குவரத்து தொடர்பான அனைத்து கொள்கை முடிவுகளையும் இந்த ஆணையம் எடுக்கும்.

முதல்வர் வரவேற்பு
இதற்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‛‛பெங்களூர் நகரம் வளர்ச்சிக்கு ஏற்ப திட்டமிடல் இல்லை. பெங்களூர் என்பது இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகராக உள்ளது. பெங்களூரை சுற்றிய 8 டவுன் மற்றும் 110 கிராமங்கள் நகரமாக மாறி உள்ளன. இதனால் ஒரு பக்கம் வளர்ச்சி கிடைக்கும் அதேசமயத்தில் நல்ல திட்டமிடலும் அவசியமாகும். பெங்களூர் நகரில் 1.25 கோடி மக்கள் உள்ளனர். ஆனால் தினமும் 5 ஆயிரம் புதிய வாகனங்கள் மக்களால் வாங்கப்படுகின்றன. தற்போது 1.104 கோடி வாகனங்கள் பெங்களூரில் உள்ளன. இன்னும் 5 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை என்பது மக்களின் எண்ணிக்கையை விட முந்திவிடும். இருப்பினும் பெங்களூர் சாலைகள் அகலப்படுத்தப்படவில்லை. இதனால் ஒருங்கிணைந்த திட்டம் தேவையான ஒன்றாகும்.

வெளிநாடுகளில் ஆய்வு
இதுதவிர பெங்களூர் நகரின் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அறிவியல் ரீதியான ஆய்வு தேவைப்படுகிறது. இதற்காக இந்தயி அறிவியல் மையத்தை அணுகியுள்ளோம். நிர்பயா திட்டத்தில் வாங்கப்பட்ட 7 ஆயிரம் கேமராக்கள் வேலை செய்து வருகின்றன. இன்னும் ஓராண்டுக்கள் நகரில் பெரிய போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் லண்டன், நியூயார்க் நகரங்களில் போக்குவரத்து பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறோம். '' என்றார்.












Click it and Unblock the Notifications