‛‛ரூம் கிளீனா இல்லை’’.. நீதிபதி முன்பு கண்ணீர்விட்ட பிரஜ்வல் ரேவண்ணா.. எஸ்ஐடி மீது பரபர புகார்
பெங்களூர்: எஸ்ஐடி தனக்கு வழங்கிய அறை சுத்தமாக இல்லை. கழிவறை சுத்தமின்றி உள்ளது என நீதிபதி முன்பு ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா கண்கலங்கினார்.
கர்நாடகாவில் ஹாசன் லோக்சபா தொகுதியில் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரஜ்வல் ரேவண்ணா. மீண்டும் அந்த தொகுதியில் அவர் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 26-ந் தேதி ஹாசன் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் வெளியாகின. பிரஜ்வல் ரேவண்ணா ஏராளமான பெண்களை மிரட்டி வீடியோ காலில் ஆபாசமாக பேசியதோடு, சிலரை பலாத்காரம் செய்து வைத்திருந்த வீடியோக்களும் வெளியானது.
இதையடுத்து தேர்தல் முடிந்த மறுநாளே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி தப்பி சென்றார். அவரை பிடிக்க எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. சம்மன் அனுப்பப்பட்டது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் தான் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெங்களூர் வந்திறங்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில் தான் நேற்று பிரஜ்வல் வேரண்ணா பெங்களூரில் உள்ள 42வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் வந்திருந்தனர். இந்த வேளையில் எஸ்ஐடி தரப்பில் பிரஜ்வல் ரேவண்ணாவை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது.
இந்த வேளையில் அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் அசோக் என் நாயக் வாதாடும்போது, ‛‛பாதிக்கப்பட்ட பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் செய்துள்ளார். மேலும் ஆபாச வீடியோ கால் பேசி உள்ளார். பிரஜ்வல் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் உள்ளது. இதனால் அவரை 15 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்'' என்று வாதாடினார்.
அதற்கு பிரஜ்வல் ரேவண்ணா தரப்பு வழக்கறிஞர் அருண் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதாடுகையில் ‛‛ஏப்ரல் 28 முதல் மே 2 வரை பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றச்சாட்டு எதுவும் இல்லை. போலீசார் அவர்கள் விரும்பும் மொழியைப் பயன்படுத்தி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இதனால் அவரை போலீஸ் கஸ்டடிக்கு அனுப்ப கூடாது'' என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணா நீதிபதி முன்பு கதறி அழுதார். அப்போது அவர், ‛‛கைதுக்கு பிறகு எஸ்ஐடி கஸ்டடியில் இருந்தேன். எனக்கு வழங்கப்பட்ட அறை சுத்தமாக இல்லை. கழிவறை சுத்தமின்றி உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. அங்கு இருக்க முடியாத நிலை உள்ளது. என்னை எஸ்ஐடி துன்புறுத்தவில்லை. ஆனாலும் கூட இந்த சுத்தமில்லாத அறையை தந்தது துன்புறுத்தலாக உள்ளது'' எனக்கூறி கண்கலங்கினார்.












Click it and Unblock the Notifications