கி.மீக்கு வெறும் ரூ.8 கட்டணம்! பெங்களூர் சந்தையில் களமிறங்கும் வின் குரூப்பின் மின்சார டாக்ஸி
பெங்களூர்: வியட்நாமை சேர்ந்த வின்ஸ் குரூப்பின் மின்சார கார்கள் பெங்களூரில் களமிறங்க இருக்கின்றன. கி.மீக்கு வெறும் ரூ.8 மட்டுமே கட்டணமாக வசூலிப்பதால், மற்ற டாக்சி ஓட்டுநர்கள் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.
கர்நாடக போக்குவரத்து துறை, கடந்த 2016 ஆம் ஆண்டு விதிகளின் கீழ்.. கிரீன் எஸ்எம் (Green SM) நிறுவனத்திற்கு உரிமம் வழங்கி இருக்கிறது. இந்த உரிமம் 2031 ஆம் ஆண்டு வரை செல்லுபடி ஆகும். வின்ஸ் குரூப் தான் இந்த கிரீன் எஸ் எம் நிறுவனத்தை நடத்துகிறது.

தமிழகத்தின் தூத்துக்குடியில் அமைந்திருக்கும் வின்ஃபாஸ்ட் ஆலையும் இந்த நிறுவனத்தை சேர்ந்தது தான். வின்ஃபாஸ்ட் காரின் 7 இருக்கைகள் கொண்ட 'லிமோ கிரீன்' மின்சார வாகனங்களை இந்நிறுவனம் தனது டாக்ஸிக்காக பயன்படுத்துகிறது. இந்த காரில், ஒரு கிலோ மீட்டருக்கு வெறும் ரூ. 8 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, கிரீன் எஸ்எம் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் டெல்லி என்சிஆர் பகுதியிலும், ஹைதராபாத்திலும் தனது சேவையை தொடங்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்நிறுவனம் பெங்களூரில் கால் பதிக்கிறது.
பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள், வாகனத்தில் உள்ளேயும் வெளியேயும் கேமராக்கள் மற்றும் அவசர உதவி பட்டன்கள் ஆகியவை இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. 7 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய டாக்ஸி கார்களின் கட்டணம் மிகவும் அதிகமாகும். ஆனால், வெறும் ரூ. 8க்கு சேவை வழங்குவதாக இந்நிறுவனம் அறிவித்திருப்பது ஊபர், ஓலா உள்ளிட்ட மற்ற நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
ரேப்பிடோ, நம்ம யாத்திரி மற்றும் ஊபர் ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் பெங்களூரு சந்தையில்.. சொந்தமாக வாகனங்களை வைத்து இயக்கும் ஒரு பெரிய நிறுவனம் உள்ளே நுழைவது, உள்ளூர் ஓட்டுனர்களின் வருமானத்தை பாதிக்கும் என டாக்ஸி சங்கங்கள் கூறுகின்றன. பெங்களூரை பொறுத்தவரை, கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் டாக்ஸிக்கு அடிப்படை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு, முதல் 4 கிலோமீட்டருக்கு ரூ.100 கட்டணமாகவும், அடுத்தடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.24 கட்டணமாகவும் வசூலிக்கப்பட வேண்டும். இதுவே ரூ.15 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள கார்களில்.. அடிப்படை கட்டணம் ரூ.130 என்றும், பின்னர் ஒவ்வொரு கி.மீக்கும் கூடுதலாக ரூ.32 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த கட்டணத்தை விட.. மிக மிக குறைவாக வெறும் ரூ. 8க்கு கார்களை கிரீன் எஸ்எம் நிறுவனம் இயக்குவது.. மற்ற டாக்ஸி ஓட்டுனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கட்டண மீட்டர்கள், தகவல் பலகைகள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா? என வாகனங்கள் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும்.. உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடகா மாநில ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் கே. சோமசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக இந்த ஆண்டின் நடுப்பகுதியில், டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் இந்த நிறுவனம் கார்களை இயக்க தொடங்கிய போது.. ஊபர் மற்றும் ஓலா நிறுவனங்கள் கடுமையாக அடி வாங்கின. அதாவது, இந்த இரு நகரங்களிலும் இந்த இரண்டு நிறுவனங்கள்தான் அதிக கார்களை வைத்து இருக்கின்றன. இருப்பினும் அதிக லாபம் தரும் பிரிமியம் மற்றும் விமான நிலைய பயணம் பிரிவில்.. கிரீன் எஸ்எம் நிறுவனத்தின் கார்கள்தான் அதிக அளவுக்கு புக் ஆகிறது. எனவே ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன.




Click it and Unblock the Notifications
