
மணிப்பூர் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பிரேன் சிங்! - தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது பாஜக!
இம்பால்: மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 60 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. பாஜக மணிப்பூரில் பதவி ஏற்றதும் நடக்கும் இந்த தேர்தல் வடகிழக்கு மாநிலத்தில் கவனத்தைப் பெற்றது.
சொத்து தகராறு.. மகன் உள்பட 4 பேரை தீ வைத்து எரித்த முதியவர்.. ஓவர் டேங்கை எம்ப்டி செய்த கொடூரம்!
பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தேர்தல் நடந்தது. இதில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் மற்ற நான்கு மாநிலங்களில் பாஜகவும் வெற்றி பெற்றன.

மணிப்பூர்
நடந்து முடிந்த மணிப்பூர் தேர்தலில் பாஜக தனித்து களமிறங்கியது. ஆனால் காங்கிரஸ் கட்சி, ஆறு கட்சிகளின் கூட்டணியோடு களத்தில் இறங்கியது. கடந்த 2017 தேர்தலில் பாஜக தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்து காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைத் தட்டிப்பறித்தது. இதனால் காங்கிரஸ் கூட்டணிக்கு தயாரானது. ஆனால் தனது பலத்தை சோதித்துப் பார்க்க பாஜக தனித்து களமிறங்கியது.

பாஜக
மணிப்பூரில் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் பாஜக 32 இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் தனிப்பெரும்பான்மையோடு பாஜக மணிப்பூரில் ஆட்சியைத் தக்க வைக்கிறது. நான்கு தொகுதிகளை மட்டுமே பெற்று காங்கிரஸ் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

முதல்வர் யார்
புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக தலைநகர் இம்பாலில் நேற்று சட்டமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது. மேலிட பார்வையாளர்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரேன் சிங் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

பிரேன் சிங்
மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான ஆட்சி மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. ஆனாலும் மீண்டும் முதல்வர் வாய்ப்பு அவருக்கு தரலாமா அல்லது புதியவர் யாருக்காவது வாய்ப்பு தரலாமா என விவாதிக்கப்பட்டது. இறுதியில் பிரேன் சிங்கே மீண்டும் மணிப்பூர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, இரண்டாவது முறையாக மணிப்பூர் முதல்வராக பொறுப்பேற்றார்.

பதவியேற்பு
சட்டமன்ற கட்சி தலைவராக பிரேன் சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் பிரேன் சிங். ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. மணிப்பூர் முதல்வராக பிரேன் சிங் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.