• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. !

|

- ஆர்.மணி

சென்னை: பாரதீய ஜனதா கட்சி, தான் ஆட்சி செய்யாத அனைத்து மாநிலங்களையும் கைப்பற்றும் பணியை துவக்கி விட்டது. அரசியல்ரீதியாக இந்த பணியை நன்கு திட்டமிட்டு, கன கச்சிதமாக செய்யத் துவங்கி விட்டது பாஜக என்றே சொல்ல வேண்டும்.

வழக்கமாக இது போன்ற காரியங்களை மேற்கொள்ளும் தேசீய கட்சிகள் - முன்பு காங்கிரஸ் இதனை ஓரளவுக்கு செய்தது - சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல்களில் தான் இதனை செய்யும். ஆனால் உள்ளாட்சி தேர்தல்களில் இதனை பாஜக செய்யத் துவங்கியிருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஹைதராபாத். நவம்பர் 29ம் தேதி, ஹைதராபாத் முனிசிபாலிட்டி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா பங்கேற்றார். ஹைதராபாத் வீதிகளில் தெரு தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டார் அமீத்ஷா.

BJPs new strategy to win five stages

"இது தெருக்களில் இருக்கும் வட்டார, உள்ளூர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தேர்தல் கிடையாது. அப்படியென்றால் தெருக்களை சுத்தமாக அவர்கள் - தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி (டிஆர்எஸ்) - வைத்திருக்க வேண்டும். அது இல்லாத காரணத்தால் அவர்கள் பாஜக வை கண்டு அஞ்சுகிறார்கள். ஹைதராபாத் முனிசிபாலிட்டியை பாஜக கைப்பற்றும். அப்படி கைப்பற்றியவுடன் ஹைதராபாத்துக்கு நிஜாம் கலாச்சாரத்திலிருந்தும், நவாப் கலாச்சாரத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும். ஹைதராபாத்தில் ஒரு மினி இந்தியா உருவாகும். அதில் உலக பிரசித்தி பெற்ற தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்", என்று அனல் பறக்க பேசினார் அமித் ஷா.

சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு உள்ளாட்சி தேர்தலில், முனிசிபாலிட்டி தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் ஒருவர் பிரச்சாரம் மேற்கொண்டது அனேகமாக இதுவே முதன் முறை என்று பெரும்பாலான அரசியல நோக்கர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கூறுகின்றனர். ஹைதராபாத் முனிசிபாலிட்டி தேர்தல்களை பொறுத்த வரையில் பாஜக அதனை வெறும் உள்ளாட்சி தேர்தலாக மட்டுமே பார்க்கவில்லை. மாறாக தெலுங்கானா மாநிலத்தை கைப்பற்றுவதற்கான ஒரு விசாலமான வாயிற் கதவாக பார்க்கிறது. மேலும் ஹைதராபாத் மக்கள் தொகையில் கணிசமான அளவுக்கு இஸ்லாமியர்கள் இருப்பதும் பாஜக வின் பணியை, முயற்சியை மிக முக்கியமானதாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

2021 ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல்களுக்கு போகவிருக்கும் ஐந்து மாநிலங்களின் மீது - தமிழ் நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி - தற்போது பாஜக வின் உக்கிரமான பார்வை திரும்பியிருக்கிறது. இந்த ஐந்து மாநிலங்களில் அசாமில் பாஜக ஏற்கனவே ஆட்சியில் இருக்கிறது. ஆகவே அசாமை தக்க வைத்துக் கொள்ளவும், தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றவும் முனைப்பு காட்டத் துவங்கியிருக்கிறது. இதில் முக்கிய குறி மேற்கு வங்கத்தின் மீது வைக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் இந்த தேர்தலில் அஇஅதிமுக வுடன் கூட்டணி இருப்பதால் ஆட்சியில் செல்வாக்கு செலுத்துவது நோக்கமாக இருக்கிறது. கேரளத்தில் தற்போது இருக்கும் சுமார் 15 சதவிகித வாக்கு வங்கியை மேலும் அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கிறது. கேரளத்தில் ஆட்சியை கைப்பற்றுவது இந்த தேர்தலில் நோக்கமல்ல.

நாட்டையே அதிரவைக்கும் 'டெல்லி சலோ'... போராடும் விவசாய சங்க தலைவர்களுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை!

மேற்கு வங்கத்தில் கணிசமான அளவுக்கு பாஜக வளர்ச்சி கண்டிருக்கிறது. கடந்த மக்களவை தேர்தலில் மாநிலத்தின் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக வென்றிருக்கிறது. அம் மாநிலத்தை 35 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 40 மக்களவை தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. காங்கிரஸ் கட்சி இருக்கும் இடமே தெரியவில்லை. ஆகவே பாஜக எந்தளவுக்கு அங்கு ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்ற முக்கிய காரணம் தேர்தல் வெற்றியின் முக்கிய தூண்களில் ஒன்றான பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது. ஒவ்வோர் வாக்குச் சாவடிக்கும் ஒரு பூத் கமிட்டி இருக்கும். அந்தந்த மாநிலத்தின் பெரிய கட்சிகள் இந்த பூத் கமிட்டிகளில் தங்கள் பிரதிநிதிகளை வைத்திருப்பார்கள். இந்த பிரதிநிதிகள்தான் அதிகளவில் தங்களது கட்சிக்கான வாக்காளர்களை வாக்கு சாவடிகளுக்கு அழைத்து வந்து தங்களுக்கு வாக்களிக்க வைப்பதில் பெரும் பங்கு ஆற்றுவார்கள். இந்த பூத் கமிட்டிகளை தற்போது அமீத் ஷா வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுவரையில் பாஜக மிக பலவீனமாக இருந்த மாநிலங்களில் கூட ஆட்சியை கைப்பற்ற இந்த யுக்தி தான் அக்கட்சிக்கு பெரும் உதவி புரிந்திருக்கிறது.

இப்பொழுது அதனை மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் தீவிரமாக அமீத்ஷா செயற் படுத்த துவங்கியிருக்கிறார். பிஹார் தேர்தல் பிரச்சாரத்துக்கு போகாத அமீத் ஷா அந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் இருந்தார். மேற்கு வங்கத்தின் ஒவ்வோர் மாவட்டத்திலும் உள்ள ஒட்டு மொத்த பூத் கமிட்டிகளின் பட்டியலை தன்னுடைய கையில் அமீத் ஷா வைத்து கொண்டு அதில் தேவையான மாற்றங்களை செய்து கொண்டிருக்கிறார். எந்தெந்த பூத் கமிட்டிகளுக்கு எப்படிப்பட்ட ஆட்களை போட வேண்டும் என்பதை மாநில தலைமைக்கு அமீத் ஷா சொல்லிக் கொண்டிருக்கிறார். மாற்றுக் கட்சிகளின் பூத் கமிட்டி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் பணியும் சத்தமின்றி, கன கச்சிதமாக நடைபெற துவங்கியிருப்பதாக மேற்கு வங்கத்தின் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்த வரையில் பத்து நாட்களுக்கு முன்பு சென்னை வந்திருந்த போது இரண்டு காரியங்களை சத்தமின்றி அமீத் ஷா செய்து விட்டு போயிருக்கிறார். அது குறித்து தமிழக பாஜக வின் மூத்த தலைவர் ஒருவர் இந்த கட்டுரையாளரிடம் இப்படி கூறினார்; "அமீத் ஷா, தமிழக பாஜக தலைவரிடம் வேல் யாத்திரை போன்றவற்றால் கட்சிக்கு எந்த பலனும் இல்லை. மாறாக கெட்ட பெயர்தான் உருவாகிறது. இதனை கைவிட்டு, விட்டு பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் வேலையை போய் பாருங்கள் என்று கூறினார்.

BJPs new strategy to win five stages

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சந்தித்த போது அவர்களிடம் அமீத் ஷா சொன்னது ஒவ்வோர் பூத் கமிட்டிக்கும் 25 லிருந்து 50 பேர் வரையில் அஇஅதிமுக தொண்டர்களை பாஜக வுக்கு தாருங்கள். நாங்கள் அவர்களை தயார் படுத்திக் கொள்ளுகிறோம்".

தாங்கள் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் எந்தளவுக்கு நுட்பமாக கவனம் செலுத்தி பாஜக வளர்ச்சியை இலக்கு வைக்கிறது என்பதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். இதில் பலம் பொருந்திய மாநில முதலமைச்சர்கள் இருக்கும் இடங்களில் பாஜக வுக்கு எதிர்ப்பு கடினமாக எழுந்து பல நேரங்களில் பாஜக வை பின் காலில் நிற்க வைக்கிறது.

உதாரணத்துக்கு மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மமதா பானர்ஜி பாஜக வை பல இடங்களில் ஓட, ஓட விரட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் தெலுங்கானா, மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களில் பாஜக வுக்கு பாதை சுலபமானதாக மாறிக் கொண்டிருக்கிறது. அதுவும் தமிழகத்தில் அஇஅதிமுக வுடன் கூட்டணி அறிவிக்கப் பட்டவுடன் பாஜக வுக்கு அநேகமாக ரத்தினக் கம்பளம் விரித்து வைக்கப்பட்ட ராஜபாட்டை உருவாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

மறைந்த அஇஅதிமுக முதலமைச்சர் ஜெயலலிதா 2014 மக்களவை தேர்தலில், ஏக இந்தியாவிலும் மோடி அலை வீசிய போது அதனை கூட்டணி கட்சிகள் ஏதுமின்றி தடுத்து நிறுத்தி தமிழகத்தின் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை ஒற்றை ஆளாக நின்று வென்று காட்டினார்.

மோடியா லேடியா என்று சவால் விட்டார்.

இன்றைய நிலைமையை ஜெயலலிதா எப்படி ரசித்து கொண்டிருப்பார் என்பதற்கான பதில் வெறும் நமட்டுச் சிரிப்பாக மட்டுமே இருக்க முடியும்.

 
 
 
English summary
Amit Shah aims for Booth committees to capture the voters.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X