PF சேவைகள் வாட்ஸ்அப்பில் எப்படி? மாத சம்பளம் வாங்குவோர் அறிய வேண்டிய 4 சூப்பர் விஷயம்
சென்னை: நீண்ட நாட்களாக செயல்பாட்டில் இல்லாத 1,000 ரூபாய் வரை இருப்புத் தொகை கொண்ட பிஎஃப் கணக்குகள் தானாகவே செட்டில் செய்யப்பட உள்ளது. அந்தப் பணம் உங்கள் யுஏஎன் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கோ அல்லது தற்போது செயல்பாட்டில் உள்ள உங்கள் பிஎஃப் கணக்கிற்கோ வந்துவிடும். அதேபோல் மிக முக்கியமாக அனைத்து பிஎஃப் சேவைகளும் இனி வாட்ஸ்அப் மூலமாகக் கிடைக்கும். வாட்ஸ் அப்பில் "Hi" என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் உங்கள் பிஎஃப் இருப்புத் தொகையை நேரடியாகச் சரிபார்க்க முடியும்
பிஎஃப் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு பல்வேறு நல்ல அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நவம்பர் 1ஆம் தேதியன்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO ) தனது 74ஆவது நிறுவன நாளைக் கொண்டாடியது. இந்த நிகழ்வை முன்னிட்டு, மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா லட்சக்கணக்கான பணியாளர்களுக்காக இரண்டு முக்கிய டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.. முதலாவதாக, அனைத்து பிஎஃப் சேவைகளும் இனி வாட்ஸ்அப் மூலமாகக் கிடைக்கும். இரண்டாவதாக, 1,000 ரூபாய் வரை இருப்புத் தொகை கொண்ட, செயல்பாட்டில் இல்லாத பிஎஃப் கணக்குகள் தானாகவே செட்டில் செய்யப்பட உள்ளது.

இனிமேல் நீங்கள் இபிஎஃப்ஓ அலுவலகத்திற்கு நேரில் சென்று உங்கள் பிரச்சனைளை தீர்க்க அலைய வேண்டியது இருக்காது, அதேபோல் உமாங் செயலியைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் தேட வேண்டிய நிலை இருக்காது. வாட்ஸ் அப்பில் EPFO சேவைபெறலாம்.
பிஎப் வாட்ஸ்அப் சேவை என்றால் என்ன?
பிஎப் சந்தாதாரர்கள், EPFO-வில் உள்ள சரிபார்க்கப்பட்ட வாட்ஸ்அப் சேவை மூலம் தங்கள் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பேலன்ஸ், சமீபத்திய ஐந்து பரிவர்த்தனைகள் மற்றும் பாஸ் புக் விவரங்களை அறிந்துகொள்ளலாம் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.இந்த வாட்ஸ்அப் சேவை, PMVBRY தொடர்பான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முழுமையான வழிகாட்டுதலையும் உதவியையும் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
"இது அன்றாடச் சேவைகளை அனைவரும் அறிந்த மொபைல் தளம் மூலமாகவே அணுகக்கூடியதாக மாற்றுவதுடன், பிஎப் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியத்தையும் குறைக்கும்" என்று மன்சுக் மாண்டவியா கூறினார்.
பிஎப் சந்தாதாரர்கள் இந்த வாட்ஸ்அப் சேவையை எப்படி பயன்படுத்தலாம்?
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், EPFO அமைப்பு, தாங்கள் வழங்கும் QR குறியீட்டைச் சந்தாதாரர்கள் ஸ்கேன் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. ஒருமுறை பதிவிறக்கம் செய்த பிறகு, சந்தாதாரர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்துச் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளலாம். பிஎப் சந்தாதாரர்கள் 8796441800 என்ற எண்ணிற்கு "Hi" என்று செய்தி அனுப்புவதன் மூலம் இந்தச் சேவையைப் பெறத் தொடங்கலாம். மெசேஜ் அனுப்பப்பட்டதும், பின்வரும் சேவைகளைப் பெற முடியும்:
பிஎப் கணக்கில் உங்கள் பணம் எவ்வளவு என்பதை அதாவது பேலன்ஸ் அறிய முடியும்.
சமீபத்திய 5 பிஎப் பரிவர்த்தனைகளைப் பார்க்க முடியும்
பிஎப் பாஸ்புக்கை டவுன்லோடு
செயல்பாட்டில் இல்லாத பிஎப் கணக்குகளைத் தானாகவே தீர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது
ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட, செயல்பாட்டில் இல்லாத EPF கணக்குகளில் 1,000 ரூபாய் வரை இருப்பு வைத்திருக்கும் சந்தாதாரர்கள், தனித்தனியாகக் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்ற புதிய சேவையையும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்திருக்கிறார். உரிய அடையாளச் சரிபார்ப்பு மற்றும் வங்கிக் கணக்குச் சரிபார்ப்பிற்குப் பிறகு, EPFO அமைப்பே தானாகவே கணக்குகளைத் தீர்வு செய்து, தகுதியுள்ள பயனாளிகளுக்குச் சேர வேண்டிய தொகையை வழங்கவிடும்.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் கணக்குகளில் உள்ள 5 கோடி ரூபாய் மதிப்பிலான தொகைகள் பயனாளிகளுக்குச் சென்றடையும் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
மேலும், கோரிக்கைகளைத் தீர்வு செய்யும் முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அக்டோபர் நிலவரப்படி, ஒரு கோரிக்கையைத் தீர்வு செய்ய எடுக்கும் சராசரி காலம் 2.57 நாட்களாகக் குறைந்துள்ளதாகவும் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.
செயல்பாட்டில் இல்லாத EPF கணக்கு என்றால் என்ன?
ஓய்வு பெற்ற பிறகு, நிரந்தரமாக வெளிநாட்டிற்குச் சென்ற பிறகு அல்லது மரணம் நிகழ்ந்த பிறகு, 3 ஆண்டுகளாக எவ்விதப் பங்களிப்புகளும் பெறப்படாத கணக்கு 'செயலற்ற கணக்கு' என வகைப்படுத்தப்படுகிறது.
உங்கள் செயலற்ற பிஎப் கணக்கிற்கு வட்டி கிடைக்குமா?
கிடைக்காது. இருப்பினும், தற்போதைய நடைமுறையின்படி, உறுப்பினருக்கு 58 வயது பூர்த்தியாகும் வரை அனைத்துக் கணக்குகளுக்கும் வட்டி வழங்கப்படும்.
உங்கள் பிஎப் கணக்கு செயலற்றதாகிவிட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் இன்னும் 'ஈபிஎஃப் மற்றும் எம்பி சட்டம், 1952' (EPF & MP Act, 1952)-ன் கீழ் வரும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தால், உங்கள் கணக்கில் உள்ள தொகையை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் உங்கள் புதிய ஈபிஎஃப் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் ஓய்வு பெற்றிருந்தால், உங்கள் ஈபிஎஃப் தொகையை நீங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.




Click it and Unblock the Notifications
