"இது" மட்டும் நடந்தால் தங்கம் விலை பொத்துனு விழும்.. வரலாற்றை பாருங்க! ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இது மீண்டும் உயருமா இல்லை.. இதே டிரெண்ட் தொடருமா என்று மக்களிடையே சந்தேகம் உள்ளது. இதற்கிடையே தங்கத்தை யார் வாங்க வேண்டும் என்பதை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், அது குறைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நமது நாட்டில் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் தங்கத்தைத் தொடர்ந்து வாங்குவார்கள். அவர்களைப் பொறுத்தவரைத் தங்கம் தான் பிரதான சேமிப்பாக இருக்கும். சிறுக சிறுக சேமித்துத் தங்கத்தை வாங்குவார்கள்.

தங்கம்
அதேநேரம் இந்த காலத்தில் இளைஞர்கள் சிலர் தங்கத்தை விட மற்ற விஷயங்களில் முதலீடு செய்தால் லாபம் அதிகம் எனச் சொல்வதைக் கேட்டிருப்போம். கடந்த காலங்களில் (உதாரணமாக 2011- 2015) வரை தங்கம் விலை அதிகரிக்காததைச் சுட்டிக்காட்டி அவர்கள் பேசுவார்கள். உண்மையில் தங்கத்தை விட மற்ற முதலீடுகளில் லாபம் அதிகம் கிடைக்குமா.. அப்போ தங்கம் வாங்கத் தேவையில்லையா என நமக்கே சந்தேகம் வரும்.
ஆனந்த் சீனிவாசன்
இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் மிக எளிமையாக விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் குறைந்து வருகிறது. தங்கம் விலை இப்படி இறங்கும் போது நிச்சயம் அதை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம். உங்களிடம் ரூ.100, ரூ.200 தான் இருக்கிறது என்றால் கோல்ட் பீஸ் வாங்கலாம். அதையும் கொஞ்சம் கொஞ்சமாகவே வாங்க வேண்டும்.
வாரன் பஃபெட்
என்னிடம் சிலர் வாரன் பஃபெட் தங்கம் வாங்கவில்லையே என கேட்கிறார். நான் மிடில் கிளாஸ் மக்கள் தங்கம் வாங்க வேண்டும் என்றே சொல்கிறேன். வாரன் பஃபெட் மிக மாபெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். அவரிடம் 150 பில்லியன் டாலரை வைத்துள்ளார். அதில் பெரும் பகுதியை நன்கொடையாகக் கொடுத்துவிட்டார். ஒரு பில்லியன் என்பது ரூ.9000 கோடியாகும்.
அவரது நிறுவனம் 350 பில்லியன் டாலரை அமெரிக்க அரசுக்கே கடன் கொடுத்து இருக்கிறது. இவனுக்குத் தங்கம் தேவையில்லை. ஆனால் தங்கம் என்பது ஏழை மற்றும் மிடில் கிளாஸுக்கு தேவை. அது ஆபத்பாந்தவன் போல.. எதாவது கஷ்டம் என்றால் தங்கத்தை வைத்தால் கடன் கொடுப்பார்கள்.. சிபில் ஸ்கோர் அது இது என எதுவும் கேட்க மாட்டார்கள்.. தங்கத்தை வைத்தால் காசு கொடுப்பார்கள். நமக்குத் தான் தங்கம் தேவை.

யார் வாங்க வேண்டும்
வாரன் பஃபெட் ஜப்பானிலும் பெரியளவில் முதலீடு செய்து வைத்துள்ளார். அவருக்குக் கடனே கிடையாது. அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதனால் தான் அவர் வருமானம் தரும் முதலீடுகளைப் பார்க்கிறார். ஆனால், நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் மக்களுக்கு எதாவது பிரச்சினை என்றால் தங்கத்தைக் கொடுத்தால் தான் காசு கிடைக்கும்.
ஊரை விட்டு ஓட வேண்டும் என்றாலும் தங்கம் இருந்தால் தான் பிழைக்க முடியும். இதன் காரணமாகவே 400 கிராமாவது வாங்க வேண்டும் என்கிறேன். அதுக்கு மேல் வருமானம் தரும் விஷயத்தில் முதலீடு செய்யலாம்.
விலை குறையும்
இந்தியாவில் கடந்த 2011 முதல் 2015 வரை தங்கம் விலை உயரவே இல்லை. அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் அது 30% வரை குறைந்திருந்தது. இதுபோல தங்கம் விலை குறையவும் செய்யும்.. அதிகரிக்கவும் செய்யும். நாளையே அமெரிக்க ரிசர்வ் வங்கி சட்டென வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கம் விலை பட்டென குறையும். ஆபத்தான காலத்தில் தங்கம் தான் உதவும். இதன் காரணமாகவே அவருக்குத் தங்கம் தேவையில்லை.. நமக்குத் தங்கம் தேவை" என்றார்.
அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதத்தைப் பொறுத்து தங்கம் விலை மாறுபடும். அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டியை அதிகரித்தால் தங்கம் விலை குறையும்.. மாறாக அவர்கள் வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்காவில் 1970களின் இறுதியில் பணவீக்கம் ஏற்பட்ட நிலையில், விலைவாசி உயர்வை தடுக்க அப்போது அமெரிக்க மத்திய வங்கி தலைவராக இருந்த பால் வால்கர் வட்டி விகிதத்தை 20% ஆக்கினார். அப்போது மிக பெரியளவில் தங்கம் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications