"தங்கம் = பிரைவேட் ஜெட்.."தங்கம் விலை இப்படி பறக்க என்ன காரணம்! புதிய வெடியை வீசும் ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் குறைந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக அது கடந்த ஒரு மாதத்தில் உயர்ந்தே இருக்கிறது. இதற்கிடையே கடந்த காலங்களில் தங்கம் விலை எப்படிக் குறைந்துள்ளது என்பதை விளக்கியுள்ள பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன், இது வரும் காலத்தில் எந்தளவுக்கு உயர வாய்ப்பு இருக்கிறது என்பதையும் விளக்கியுள்ளார்.
கொரோனா சமயத்தில் பறந்த தங்கம் விலை அதன் பிறகு குறையவே இல்லை.. இடையில் சில காலம் குறைந்தாலும் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.. மீண்டும் சட்டென உயர்ந்துவிட்டது. இப்போது சென்னையில் 22 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் சீராக ரூ.8000க்கு மேலேயே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 22 கேரட் தங்கம் ஒரு கிராம் அதிகபட்சமாக ரூ.8310 வரை கூட சென்றது.

தங்கம் விலை
இரண்டு நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்றும் மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.8195க்கு விற்கப்படுகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.65,569க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.11 உயர்ந்து ரூ.8940க்கு விற்பனையாகிறது. இதற்கிடையே கடந்த காலங்களில் தங்கம் விலை எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்ற தகவல்களைப் பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் பகிர்ந்துள்ளார். மேலும், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் சில முக்கிய பாயிண்டுகளை கூறியிருக்கிறார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை ரூ.8100க்கு மேல் தான் இருக்கு. 24 கேரட் தங்கமும் ரூ.9000 நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறது. சர்வதேச சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கம் 3000 டாலருக்கு மேல் தான் இருக்கிறது. இந்தாண்டுக்குள் தங்கம் விலை 3000 டாலரை தாண்டும் என்றவர்கள் இப்போது 3200 டாலர் வரை போகும் என்கிறார்கள். 3200ஐ தாண்டும் என்றவர்கள் இப்போது 3500 முதல் 3600 டாலர் வரை தாண்டும் என்கிறார்கள்.
தங்கம் விலைவாசி உயர்வை எப்படிச் சமாளிக்கிறது என்பதை நாம் பார்க்கலாம். ஒரு கிலோ தங்கம் இருந்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் என்ன வாங்க முடியும் என்பதைப் பார்க்கலாம்.. 1990இல் ஒரு கிலோ தங்கம் இருந்தால் மாருதி 800 காரை வாங்கலாம். 2000இல் ஒரு கிலோ தங்கம் இருந்தால் மாருதி எஸ்டீம் வாங்கலாம்.
பிரைவேட் ஜெட்
2005ல் அப்கிரேட் ஆகி ஒரு டொயோட்டா இன்னோவா காரை வாங்கலாம்.. 2010இல் டொயோட்டா ஃபார்ச்சூனர் வாங்க முடியும். 2019ல் பயங்கர அப்கிரேட் ஆகி BMW X1 வாங்கலாம்..2024ல் BMW X3 கார் வாங்கலாம்.. எனக்கு வேற கார் பிரண்ட் வேண்டும் என்று கூறுவோருக்கு ஆடி S5 கூட வாங்கலாம். இதே டிரெண்ட் தொடர்ந்தால் சீக்கிரம் ஒரு கிலோ தங்கம் இருந்தால் பிரைவேட் ஜெட் கூட வாங்கலாம் என்ற நிலை உருவாகும். இப்படித் தங்கத்தின் மதிப்பு அதிகரித்தே வருகிறது" என்று கூறினார்.
வரும் காலத்தில் உயரவே செய்யும்
அதேபோல மற்றொரு வீடியோவில், "இப்போது தங்கம் விலை உயர அமெரிக்கா தான் காரணம். சமீபத்தில் நடந்த அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் இந்தாண்டு இறுதிக்குள் 2 முறை வட்டியைக் குறைக்கப்போவதாக அமெரிக்க பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவல் கூறியிருந்தார். அமெரிக்க பெடரல் வங்கி வட்டியைக் குறைத்தால், டாலர் மதிப்பு குறையும். இதனால் தங்கம் விலை அதிகரிக்கும்" என்றார். அதாவது இந்தாண்டின் பிற்பகுதியில் அமெரிக்கா வட்டியைக் குறைக்கும்போது தங்கம் விலை அதிகரிக்கும் என்பதே அவரது கருத்தாக இருக்கிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications