தங்கம் vs வெள்ளி.. எது புஸ்வானம்? எது ராக்கெட்? எதில் முதலீடு செய்வது பெஸ்ட்! ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: நமது நாட்டில் இப்போது தங்கத்திற்கு இணையாக வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே தங்கம் மற்றும் வெள்ளி இரண்டில் எது சிறந்தது.. தற்போதைய சூழலில் எதில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் தங்கம் ரூ.7295க்கு விற்கப்பட்டது. அதேபோல 24 கேரட் தங்கம் ரூ.7958 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

சமீப காலமாகத் தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.107க்கு விற்கப்படும் நிலையில் ஒரு கிலோ ரூ. 1.07 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
ஆனந்த் சீனிவாசன்: இரண்டுமே உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், இரண்டில் எது சிறந்தது.. தற்போதைய சூழலில் எதில் முதலீடு செய்தால் லாபகரமானதாக இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் வீடியோவில், "தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. 22 கேரட் தங்கம் ரூ 7300+ வரி என்றாகிவிட்டது. 24 கேரட் தங்கம் ரூ. 8000+ வரி என்றாகிவிட்டது.
அடுத்த 18 மாதத்தில் எனது கணிப்பின்படி 24 கேரட் தங்கம் ரூ.9000 வரை செல்லும். அதேபோல 22 கேரட் ரூ.8500 வரை போகும். இது தவிர நாம் ஜிஎஸ்டி, செய்கூலி எல்லாம் தர வேண்டி இருக்கும். இப்போது தீபாவளி பண்டிகை விற்பனை என்பதால் மக்கள் ஆர்வமாக வந்து தங்கத்தை வாங்குவதாக வியாபாரிகள் சொல்கிறார்கள். திருமணத்திற்காக தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து நகைக்கடைகளிலும் விற்பனை அதிகரித்துள்ளது.
தங்கம்: இதனால் இப்போது லைட் தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளனர். அதாவது இது பறவையின் இறக்கையைப் போல மிகவும் மெல்லியதாக இருக்குமாம். தங்கத்தின் விலை உச்சத்தில் இருப்பதால் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நகைக்கடை நிறுவனங்களும் தங்கள் செய்கூலியைக் குறைத்துள்ளன.
தங்கத்தை இப்போது வாங்குவதே சிறந்தது. அடுத்தாண்டு திருமணம் இருந்தால் கூட இப்போதே தங்கத்தை வாங்கிக் கொள்ளுங்கள். வரும் காலங்களில் குபீர்னு தங்கம் ஏறப் போகிறது. கன்பார்ம் ஆன டிக்கெட் போல 22 கேரட் தங்கம் ரூ.7500 நிச்சயம்.
வெள்ளி: தங்கம் ஒரு பக்கம் புஸ்வானம் போல ஏறினால்.. வெள்ளி அந்த பக்கம் ராக்கெட் போல ஏறுகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்ச ரூபாயை தாண்டிவிட்டது. ஆனாலும், நான் வெள்ளி குறித்து பெரிதாகப் பேசியதே இல்லை. ஏனென்றால் வெள்ளி கடந்த காலங்களில் இதுபோல ஏறிய போதும் சட்டென சரிந்து இருக்கிறது.
எது பெஸ்ட்: எனவே, வெள்ளி ஒரு லட்ச ரூபாயில் இருந்து ரூ 70 ஆயிரம் ரூபாய்க்கு குறைய வாய்ப்புகள் அதிகம். மேலும், வெள்ளி சப்ளையை ஈஸியாக ரெடி செய்துவிடலாம். மேலும், எந்தவொரு நாட்டின் மத்திய வங்கிகளும் வெள்ளியை வாங்காது. இதனால் வெள்ளியில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதேநேரம் திருமணம் அது இது என நல்ல நாளுக்கு வெள்ளி வாங்கி இருந்தால் அதுவும் ஒரு லட்சத்திற்குப் போய்விட்டதை நினைவில் கொள்ளுங்கள். சில வீடுகளில் முன்பெல்லாம் வெள்ளித் தட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். ஆனால், இப்போது அதைப் பார்க்கக்கூட முடியாது. அதையும் எடுத்துச் சென்று லாக்கரில் தான் வைக்க வேண்டும். அந்தளவுக்குத் தான் நிலைமை இருக்கிறது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications