"இதை" செய்யலைன்னா ஹாஸ்பிட்டல் பில் பார்த்து நெஞ்சு வலி கன்பார்ம்.! நீங்க அறிய வேண்டிய 5 ரகசியங்கள்
சென்னை: இந்த காலத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது கிட்டத்தட்டக் கட்டாயமாகிவிட்டது. சரியான நேரத்தில் நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைத்தால் மட்டுமே இக்கட்டான நேரத்தில் அது கை கொடுக்கும். ஆனால், அந்த இன்சூரன்ஸும் நீங்கள் கவனித்துப் படிக்க வேண்டிய சில பாயிண்டுகள் உள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
"உடல்நலம் தான் மிகப் பெரிய செல்வம்" என்று பெரியவர்கள் சொன்னது இப்போது மாறி, "உடல்நலத்தைப் பாதுகாக்க செல்வம் வேண்டும்" என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். மருத்துவ பில்களைப் பார்த்தாலே தனியாக ஹார்ட் அட்டாக் வரும் இந்தக் காலத்தில், ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. ஆனால், ஏஜென்ட்கள் சொல்லும் 'கலர்ஃபுல்' கதைகளை நம்பி பாலிசி எடுத்துவிட்டு, க்ளைம் என்று வரும்போது ஏமாந்து நிற்பவர்கள் ஏராளம். எனவே பாலிசி எடுக்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டியவை குறித்து நாம் பார்க்கலாம்!

கவனம்
முதல் பஞ்சாயத்தே கோ-பே (Copay).. பலர் பிரீமியம் குறைவாக இருக்கிறதே என்று 'கோ-பே' இருக்கும் பாலிசியை எடுத்துவிடுவார்கள். உதாரணமாக 65 வயதான ரவி ஒரு பாலிசி வைத்துள்ளார். அதில் 20% கோ-பே நிபந்தனை உள்ளது. அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 5 லட்சம் ரூபாய் பில் வருகிறது. இன்சூரன்ஸ் கம்பெனி 5 லட்சத்தையும் கொடுத்துவிடும் என அவர் நினைப்பார். ஆனால், 20% கோபே இருப்பதால் ஒரு லட்சம் ரூபாயை ரவி தன் கை காசைப் போட வேண்டும். மீதி 4 லட்சத்தை மட்டுமே நிறுவனம் தரும்.
எனவே Copay என ஏஜெண்டுகள் சொன்னால் அந்த பாலிசியை தவிர்த்துவிடுங்கள்.. அப்போது தான் ஆத்திர அவசரம் என நாம் மருத்துவமனையில் படுக்கும் போது பணத்தைத் திரட்ட வேண்டிய தேவையிருக்காது. வயதானவர்களுக்கு எடுக்கும்போது கோ பே கட்டாயம்.. வேறு வழியில்லை என்றால் மட்டுமே இதைத் தேர்ந்தெடுக்கலாம்.
லிமிட் கூடாது
அடுத்து முக்கியமானது டிசீஸ் கேப் (Disease Cap).. உங்கள் பாலிசி 10 லட்சம் ரூபாய்க்கு இருக்கலாம். ஆனால், சில குறிப்பிட்ட நோய்களுக்கு இவ்வளவுதான் தருவோம் என ஒரு 'சீலிங்' வைத்திருப்பார்கள். உதாரணமாகக் கண் புரை (Cataract) அறுவை சிகிச்சைக்கு 80,000 ரூபாய் செலவாகிறது. ஆனால் உங்கள் பாலிசியில் அதற்கு 30,000 ரூபாய் தான் லிமிட் இருக்கிறது என்றால், மீதி 50,000 ரூபாயை நீங்கள் தான் கட்ட வேண்டும். 10 லட்சம் பாலிசி இருந்தும் பயன் இல்லை! எனவே, 'No Disease Sub-limits' உள்ள பாலிசிகளைத் தேடிப் பிடித்து எடுங்கள்.
விஷயமே இதுதான்
அடுத்து ரூம் ரென்ட்.. இதில்தான் ட்விஸ்டே இருக்கு! பெரும்பாலான பாலிசிகளில் 'சாதாரண ரூம்' அல்லது 'பாலிசி தொகையில் 1%' என்று ரூம் ரென்ட் லிமிட் வைத்திருப்பார்கள். நல்ல ரூம் என்றால் அந்த லிமிட்டை தாண்டி சில ஆயிரம் என்பார்கள். நாமும் சரி, சிகிச்சைக்கு தான் பாலிசி இருக்கே.. இந்த சில ஆயிரத்தைப் போட்டு நல்ல ரூமாக எடுத்துக் கொள்ளலாம் என யோசிப்போம். ஆனால், விஷயமே இதில் தான் இருக்கிறது. அதாவது லிமிட்டை தாண்டினால் 'ப்ரோபோர்ஷனேட் டிடக்ஷன்' என்ற பெயரில் மொத்த பில்லிலும் கை வைப்பார்கள்.
அதாவது உங்கள் பாலிசிப்படி ரூம் லிமிட் ஒரு நாளைக்கு ரூ.5000 என வைத்துக் கொள்வோம்.. நீங்கள் எடுத்த ரூம் வாடகை ஒரு நாளைக்கு ரூ.8000 என இருக்கட்டும். நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருக்கிறோம் என்றால் 4* 3000 என கணக்கு போட்டால் 12,000 ரூபாய் வரும். சரி கூடுதலாக ரூ.12,000 தானே ஓகே என சொன்னால் அத்தோடு முடியாது.. ரூம் வாடகையில் 3000 அதிகம் என்பதால், டாக்டர் பீஸ், ஆப்பரேஷன் தியேட்டர் கட்டணம் என எல்லாவற்றிலும் 30% கட் செய்யப்படும்! அதாவது ரூம் லிமிட் எந்தளவுக்கு அதிகரிக்கிறதோ அந்தளவுக்கு க்ளைம் குறையும். இதுதான் பெரிய பிரச்சினை.! எனவே நோ ரூம் லிமிட் அல்லது குறைந்தது 'பிரைவேட் ஏசி ரூம் ஆப்ஷன் இருக்கும் பாலிசிக்களை தேர்வு செய்யவும்.
கவனிக்க வேண்டியவை
இதில் வேறு சில கவனிக்க வேண்டிய வில்லங்கங்களும் உள்ளது. அதில் ஒன்று வெயிட்டிங் பீரியட்.. அதாவது பிபி, சுகர் போன்ற நோய்கள் இருந்தால், 2 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருக்கச் சொல்வார்கள். அந்த நேரத்தில் அந்த நோய்ப் பாதிப்புகளுக்கு க்ளைம் கிடைக்காது. இப்போது சில நிறுவனங்கள் கூடுதல் பிரீமியத்தில் இதை 'Day 31' முதலே கவர் செய்கின்றன. எனவே, உங்கள் தேவையைப் பொறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ரீஸ்டோரேஷன் (Restoration) இருக்கும் பாலிசிக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஒரு வருடத்தில் ஒரு முறை அட்மிட் ஆன போதே மொத்த பணத்தையும் செலவழித்துவிட்டால், அதே ஆண்டில் குடும்பத்தில் இன்னொருவருக்கு அல்லது வேறு நோய்க்கு இன்சூரன்ஸ் தொகை மீண்டும் தானாக 'ரீஃபில்' (Refill) ஆக வேண்டும். இது மிக முக்கியம். இது இருந்தால் ஆண்டின் துவக்கத்திலேயே இன்சூரன்ஸ் முழு தொகையை க்ளையம் செய்துவிட்டாலும் கவலை இல்லாமல் இருக்கலாம்!
கூடுதல் போனஸ்
இது கூடுதல் போனஸ். அதாவது ஓராண்டில் நீங்கள் எந்தவொரு க்ளைமும் செய்யவில்லை என்றால் அடுத்த வருடம் உங்களது இன்சூரன்ஸ் கவர் அதிகரிக்கும். அதாவது இந்தாண்டு ரூ.10 லட்சம் வரை கவர் ஆகிறது என வைத்துக் கொள்வோம். இந்தாண்டு நீங்கள் க்ளைம் எடுக்கவில்லை என்றால் அடுத்தாண்டு அது ரூ.15 லட்சமாக அதிகரிக்கும். இதுவே நோ க்ளைம் போனஸ்.. இது கட்டாயம் இல்லை என்றாலும் இந்த வசதி இருப்பது உங்களுக்கு லாபம். எனவே, மருத்துவமனைக்கு போறதுக்கு முன்னாடி பாலிசியை ஒருவாட்டி படிங்க... இல்லன்னா, ஆஸ்பத்திரி பில் உங்க பிளட் பிரஷரை ஏத்திடும்!












Click it and Unblock the Notifications